டிஜிபி அலுவலகத்தில் கொடூர தாக்கு: அடிவாங்கியவரை கைது செய்த போலீஸ்

டிஜிபி அலுவலக வாசலிலேயே பத்திரிகை கேமிராமேன்கள் முன்னிலையில் ஒரு கட்சியின் தலைவரை விடுதலை கட்சி தொண்டர் செருப்பால் தாக்கியதோடு , தங்களை கத்தியை காட்டி மிரட்டியதாக ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரை மட்டும் உடனடியாக விசாரித்து தாக்குதலுக்கு ஆளானவரை கைது செய்த சென்னை மாநகர காவல்துறையினரின் நடவடிக்கைகள் பொதுமக்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. காவல்துறை அல்ல ஆளும்கட்சியின் ஏவல் துறையாகவே காவல்துறை மாறிவிட்டதாகவும் பொதுமக்கள் கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளனர்.

பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான ம.க. ஸ்டாலின் என்பவர் மீது கடந்த வாரம் வெடி குண்டுகளை வீசி மர்ம கும்பல் கொலை செய்ய முயற்சித்தது. பயந்துபோன ம.க. ஸ்டாலின் பாத்ரூமிற்குள் சென்று சமோயோஜிதமாக கதவை மூடிக்கொண்டதால் கொலைக்கும்பலின் கையில் சிக்காமல் உயிர் பிழைத்தார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தது. ம.க. ஸ்டாலின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய கோரியும், அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க கோரியும் பாமக இணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுவை கடந்த சனிக்கிழமையன்று கொடுத்தார். இந்த புகார் மனுவை கொடுக்க இவர் வருவதற்கு முன்பாக அவரது நண்பரும், புரட்சி தமிழகம் என்ற கட்சியின் தலைவருமான ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார். டிஜிபி அலுவலகம் முன்பாக தனது காரை மூர்த்தி நிறுத்திவிட்டு கீழே நின்றார்.

டிஜிபி அலுவலகம் முன்பாக உள்ள டீ கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான குமரப்பா, திலீபன், முருகன், பாபு, ஜாகீர் ஆகிய 5 பேரும் ஏர்போர்ட் மூர்த்தி அருகே ஓடிச்சென்று, எங்கள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி யூ டியூப் வீடியோக்களில் தொடர்ந்து தவறாக பேசி வருகிறாய். இனி எங்கள் தலைவரை பற்றி அவதூறாக பேசுவாயா? என கூறியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் விடுதலை கட்சி நிர்வாகி ஒருவர் தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக அடித்தார். உடன்வந்த நிர்வாகிகளும் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்க தொடங்கினர். இவை அனைத்துமே டிஜிபி அலுவலக வாசலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த காமென்டோ படை மற்றும் ஆயுதப்படை போலீசாரின் கண் முன்பாகவே நடந்தது. ஆனால் போலீசார் தாக்குதல் நடத்தியவர்களுக்கு தடுக்கவோ, ஏர்போர்ட் மூர்த்தியை பாதுகாக்கவோ முயற்சிக்காமல் வெறுமனே பொம்மைபோல நின்றுகொண்டிருந்தனர். ஏர்போர்ட் மூர்த்தியின் கார் ஓட்டுனர்தான் ஓடிவந்து தாக்கியவர்களை தடுக்க முயற்சித்தார்.

சாலையில் செல்வோர் சிலரும் இந்த கும்பலை தடுக்க முயற்சித்தனர். ஆனால் இவர்களையும் மீறி மூர்த்தியை சரமாரியாக தாக்கியதோடு சட்டையையும் கிழித்தெறிந்து இந்த கும்பல். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை ஏர்போர்ட் மூர்த்தியை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கடுமையாக தாக்கியபோதும் டிஜிபி அலுவலக பாதுகாப்பு போலீசார் வெறுமனே பொம்மைபோல வேடிக்கைதான் பார்த்தனர் தவிர தடுக்க முன்வரவில்லை.

ஒருவேளை டிஜிபி அலுவலகத்திற்குள்ளேயே தாக்குதல் நடத்தி உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தால்தான் தடுப்பார்களோ என்னவோ தெரியவில்லை. அடிதாங்க முடியாமல் தன்னுடைய இடுப்பில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்த ஏர்போர்ட் மூர்த்தி தன்னை இனியும் தாக்கினால் குத்திவிடுவேன் என கூறி விரட்டி சென்றார். கத்தியை எதிர்பார்க்காத விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பின்வாங்கி சென்றனர் . அப்போது ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த காவலர் ஒருவர்தான் தைரியமாக ஓடிவந்து இருதரப்பையும் தடுத்து தாக்குதல் நடத்திய கும்பலை விரட்டி அடித்தார். அதுவரையிலும் டிஜிபி அலுவலகத்தை பாதுகாக்க நின்றுகொண்டிருந்த 20 போலீசாரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர் என்பதுதான் வேதனை.

பாமக எம்.எல்.ஏ. அருள் புகார்மனு கொடுக்க வருவதை செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த பல தனியார் டிவி கேமிராமேன்கள் எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை அப்படியே வீடியோ எடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஏர்போர்ட் மூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, பட்டியலின சமூகத்திற்கு விடுதலை கட்சி தலைவர் திருமாவேலன் தொடர்ந்து துரோகம் செய்துவருவது பற்றி தான் யூடியூப் வீடியோக்களில் அம்பலப்படுத்தி வருகிறேன்.

இதனால் என்னை விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றனர்  டிஜிபி அலுவலக வாசலிலேயே என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஏற்கனவே திருமாவளவன் மீது 2 முறை புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும்கட்சி கூட்டணி என்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறினார். காயமடைந்த ஏர்போர்ட் மூர்த்தி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இதை அறிந்த தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை அமைப்பின் நிர்வாகிகளும் அரசு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டனர். தங்களை கத்தியால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கியதாக கூறினார்.

ஏர்போர்ட் மூர்த்தி டிஜிபி அலுவலக நுழைவாசலில் கத்தியால் தங்களை தாக்கியதாகவும், நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலை கட்சி நிர்வாகி திலீபன் என்கிற மகாதேவன் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி மீது புகார் மனு கொடுத்தார். தன்னை விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். இந்த நிலையில் விடுதலை கட்சி நிர்வாகிகளை கத்தியை காட்டி தாக்க முயற்சித்ததாக ஏர்போர்ட் மூர்த்தி மீது மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென கைது செய்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும்கட்சியினரின் கூட்டணி என்பதற்காக அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிவாங்கியவர் மீதே வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுத்து தங்களது ஆளும்கட்சி விசுவாசத்தை காட்டியுள்ளது காவல்துறை என்ற பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

டிஜிபி அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் கண்முன்பே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதேபோல ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட்டதை அங்கிருந்த தனியார் டிவி கேமிராமேன்களும் லைவ் ஆக எடுத்து ஒளிபரப்பின. இதன்பிறகும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அடிவாங்கியவரை கைது செய்ததன் மூலம் ஆளும்கட்சியினரின் ஏவல் துறை என்ற குற்றசாட்டை நிரூபிப்பதைப்போல காவல்துறையினரின் நடவடிக்கைகள் அமைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகர காவல்துறையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் டிவிக்களில் இதுகுறித்த பலத்த விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவு என்பது மட்டுமே தங்கள் கொள்கை என்பதைப்போல செயல்படுவது சரியானதல்ல என்கிறன்றனர் நடுநிலையாளர்கள்.

Comments (0)
Add Comment