பத்­தினி வேஷம் போட குழந்­தை­யின் உயிரை காவு வாங்கிய கொடூர தாய்: கன்­னி­யா­கு­ம­ரி­யில் நடந்த அதிர்ச்சி சம்­ப­வம்

திருமணம் தாண்டிய உறவால் பிறந்த ஆண்குழந்தையின் தலையை துண்டித்து உடலை குளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல நடித்த 4 குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்குளத்தை அடுத்த சம்பன்குளத்தில் ஊர்மக்கள் வழக்கமாக குளிக்க செல்வது வழக்கம். எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இந்த குளத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு சிலர் குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தையின் உடல் தண்ணீருக்கு மேல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி உடன்கூராய்விற்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டதால் இறந்தது யாருடைய குழந்தை என்பது தெரியவில்லை.

அக்கம் பக்கத்தில் யாருடைய குழந்தையாவது காணாமல் போயுள்ளதா? குழந்தையை யாரவது கடத்தி வந்து தலையை துண்டித்து வீசி சென்றார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வந்தனர் போலீசார். குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வில் 40 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் கையில் பையோடு குளத்தை நோக்கி செல்வதும், சிறிது நேரம் கழித்து கொண்டுசென்ற பை இல்லாமல் திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. கையில் பையுடன் சென்ற பெண் யார் என போலீசார் விசாரித்தபோது ஈத்தாமொழி புதூர் பகுதியை சேர்ந்த ரேகா என்பது தெரியவந்தது.

போலீசார் ரேகாவை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. கூலி வேலை செய்து வந்த ரேகாவிற்கு திருமணமாகி 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் கணவனை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த ரேகாவிற்கும், பக்கத்துக்கு ஊரை சேர்ந்த நபருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதில் ரேகா கர்ப்பமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் கணவன் இல்லாமல் குழந்தை பிறந்ததால் ஊரார் கேவலமாக பேசுவார்கள் என்பதால் குழந்தையை கொல்ல திட்டமிட்டார். இதன்படி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குழந்தை அடையாளம் தெரியாமல் இருக்க தான்பெற்ற குழந்தை என்றும் பாராமல் தலையை துண்டித்துள்ளார்.

பிறகு தலையை அருகில் உள்ள தோப்பில் வீசிவிட்டு உடலை மட்டும் பையில் எடுத்துவந்து சம்பன்குளத்தில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கொலை செய்த ரேகாவை ராஜாக்கமங்கலம் போலீசார் கைது செய்தனர். தவறான உறவில் பிறந்த குழந்தையை தானே கொலை செய்து தலையையும் துண்டித்து கொடூரமாக கொலை செய்த தாயின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment