டிஜிபி நியமனத்தை “டிஸ்மிஸ்” செய்யனும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தாச்சு

டிஜிபி நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் செல்லாது என அறிவித்து டிஜிபி நியமனத்தை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பொறுப்பு டிஜிபி நியமனம் கேள்விக்குறியாகி விட்டது. டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றம் எதாவது கண்டனம் தெரிவிக்கும் என கணித்து 8பேர் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்து நாடகமாடுவதாக ஐ.பி.எஸ்.அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக காவல்துறை வலராற்றில் டிஜிபி நியமனம் குறித்த சர்ச்சைகள் இதுவரை இல்லாத அளவிற்கு பேசப்படும் பொருளாகிவிட்டது. பொதுவாக ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு டிஜிபி பதவியை வழங்கவே மேலிடம் ஆர்வம் காட்டும். டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் இருப்பவர்களின் மொத்தபட்டியலையும் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைத்து அதில் இருந்து மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து அனுப்பும் 3 அல்லது 5 பேர் பட்டியலில் இருந்து தங்களுக்கு வேண்டப்பட்ட டிஜிபியின் பெயரை தேர்வு செய்து மீண்டும் அனுப்புவார்கள். இதன் பிறகு டிஜிபி ஓய்வுபெறுவதற்கு முதல் நாள் டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணைய செயலர், மத்திய உள்துறை செயலர், தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், ஓய்வுபெற உள்ள டிஜிபி தலைமையில் பேனல் கமிட்டி கூட்டம் நடத்தி மேலிடம் டிக் செய்த டிஜிபியை நியமிக்க ஒப்புதல் பெற்று அந்த உத்தரவுடன் தமிழக அதிகாரிகள் சென்னைக்கு வருவார்கள். இந்த உத்தரவின்படி புதிய டிஜிபியை நியமிப்பதே இதுவரை வழக்கமாக இருந்தது. இந்த நடைமுறைகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டு புதிய டிஜிபி பேனல் பட்டியலையே 3 மாதத்திற்கு முன்பு அனுப்புவதற்கு பதிலாக முதல் நாளில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பி புதிய சாதனையை படைத்துள்ளனர்.

இந்த புதிய குழப்பங்களுக்கும், புதிய நடைமுறைக்கும் முழுமுதல் காரணம் முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் லாபிதான் காரணம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். டிஜிபி பேனல் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சாந்தீப் ராய் ரத்தோடு, வன்னியபெருமாள் உள்ளிட்ட 5 அதிகாரிகளில் யாரையும் நிரந்தர டிஜிபியாக நியமிக்க கூடாது. இவர்களுக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்து ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் நியமிக்கும் டிஜிபியுடன், டிஜிபியாக பதவி உயர்வு பெற உள்ள அதிகாரியை சிறப்பு டிஜிபியாக நியமிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர் . இதன்படியே 3 மாதத்திற்கு முன்பே பேனல் பட்டியலை அனுப்பாமல் வேண்டுமென்றே காலத்தாமதம் செய்து தங்கள் விருப்பப்படி பொறுப்பு டிஜிபியை நியமித்து விட்டனர். ஆனால் ஏற்கனவே டிஜிபி நியமனம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலேயே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு பதவி நியமனம் செய்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்ற உத்தரவு இருந்தும் பொறுப்பு டிஜிபியை நியமிப்பதில் பிடிவாதமாக இருந்து முதல்வரையும் குழப்பி பதவி நியமனத்தை இந்த அதிகாரிகள் குழு முடித்துவிட்டது.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் மதுரை நீதிதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடுத்த வக்கீல் யாசர் அராபத் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி டிபன் இருவரும் பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். ஹென்றி டிபன் தொடர்ந்துள்ள வழக்கில், ஏற்கனவே பிரகாஷ் சிங் என்ற அதிகாரி தொடர்ந்த வழக்கிலேயே உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது. டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 3 மாத்திற்கு முன்பே புதிய டிஜிபிக்கான பேனல் பட்டியலை தயாரித்திருக்க வேண்டும். டிஜிபி ஓய்வுபெறுவதற்கு முன்பாக இந்த பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் பட்டியலில் இருந்துதான் ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும். பதவி ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் டிஜிபி பெயர்களைத்தான் இந்த பேனல் பட்டியலில் சேர்க்க வேண்டும். பதவியில் நியமனம் செய்ததில் இருந்து 2 ஆண்டுகள் அல்லது ஓய்வுபெறும்பவரை அவரே டிஜிபியாக பதவியில் இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் இந்த உத்தரவை பின்பற்றுவதில்லை. குறிப்பாக தமிழக அரசு இந்த உத்தரவுக்கு மாறாக பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளனர்.

புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனல் பட்டியலை 3 மாதத்திற்கு முன்பே தயாரித்து மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் அனுப்பவில்லை. எனவே உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு நியமித்துள்ள பொறுப்பு டிஜிபி பதவியே செல்லாது. புதிய டிஜிபி நியமனம் செய்ததற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனல் பட்டியலை உடனடியாக மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என மனுவில் ஹென்றி டிபேன் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த மனு தாக்கல் செய்யப்படுவதை அறிந்து கடந்த வெள்ளிக்கிழமை டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு 8 பேர் பட்டியலை ரகசியமாக மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு உள்துறை துணை செயலாளர் மூலம் ரயிலில் அனுப்பி வைத்துள்ளாராம். இந்த பட்டியல் திங்கட்கிழமையோ அல்லது செவ்வாய்கிழமையோ மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு செல்லும் முன்பாக பொறுப்பு டிஜிபியை நியமித்து வழக்கை ஓரிரு மாதங்கள் வரை இழுத்தடிக்கலாம். ஜனவரி மாதம் வரை அவகாசம் கேட்டு சிறப்பு டிஜிபியாக தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரியை நியமித்துவிடலாம் என்பதே இந்த அதிகாரிகளின் திட்டம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு எடுத்து உடனடியாக மதியப்பணியாளர் தேர்வாணையம் டிஜிபி பட்டியலை அனுப்பி புதிய நிரந்தர டிஜிபியை நியமிக்கும்படி உத்தரவிட்டால் தமிழக அரசுக்கு, குறிப்பாக முதல்வருக்குத்தான் பெரும் சங்கடம் ஏற்படும். முதல்வருக்கு எதிராக மத்திய உள்துறை செயல்படுவதாக பிரச்சினையை திசைதிருப்பி உச்சநீதிமன்றத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வழக்கை இழுத்தடித்து எப்படியும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என இந்த அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

ஆனால் பொறுப்பு டிஜிபி பதவி ஏற்பு நாளிலேயே சீனியர் டிஜிபி அதிகாரிகள் 8 பேரும் ஒட்டுமொத்தமாக பதவி ஏற்புவிழாவையே புறக்கணித்து தங்கள் முழு எதிர்ப்பையும் காண்பித்துவிட்டனர். இது முதல்வருக்குத்தான் பெரும் அவமானம். காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் உத்தரவுக்கு எதிராக சீனியர் டிஜிபிக்களே திரும்பியிருப்பது தமிழக காவல்துறை வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகும் . முதல்வருக்கு எதிராக இந்த அதிகாரிகள் செயல்படுவதாக முதல்வருக்கு அறிக்கை கொடுத்து அவர்கள் மேல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் எடுக்க இந்த அதிகாரிகள் குழு தயாராகிவிட்டது. ஆனால் பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்ற வெங்கட்ராமன் நிலைமைதான் திண்டாட்டமாகிவிட்டது என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். காரணம் பொதுவாக டிஜிபியாக நியமிக்கப்படும் முன்பாக உளவுத்துறை டிஜிபியாக நியமித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்குவது வழக்கம். ஆனால் உளவுத்துறை பொறுப்பை எவரிடமும் கொடுக்காமல் ஏற்கனவே பணியாற்றும் நிர்வாக பிரிவு டிஜிபி பதவியுடன் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல தலைமையிட டிஜிபியாக இருந்த வினித் தேவ் வான்கடே தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டதால் அந்த பொறுப்பிற்கு வேறு டிஜிபியோ, கூடுதல் டிஜிபியோ நியமிக்கபடாமல் டிஜிபி வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டியதாகிவிட்டது. நிர்வாக பிரிவு டிஜிபி பதவியே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை விட அதிக வேலைப்பளு கொண்டதாகும்.

அனைத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரையிலான தண்டனை தொடர்பான வழக்குகள், மனுக்கள் பரிசீலனை, அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான இடமாறுதல் தொடர்பான மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பதவி இடமாறுதல் தொடர்பாக தயாரிக்க வேண்டிய பைல்கள் என ஏராளமான பைல்கள் தினமும் குவிந்து கிடைக்கும். காவலர்கள், அதிகாரிகளின் வீடு ஒதுக்கீடு, வீடு கட்டுவது, காவல் நிலைய கட்டிடம் கட்டும் திட்ட உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தலைமையிட டிஜிபிதான் கவனிக்க வேண்டும். இதை தவிர உளவுத்துறை அளிக்கும் அறிக்கைகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மாநகர ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள் அனுப்பும் பைல்கள் என நூற்றுக்கணக்கான பைல்கள் டிஜிபியிடம் குவிந்து வருகிறது . தினமும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம், போராட்டம், அரசு அதிகாரிகள் போராட்டம், பல்வேறு அமைப்புகளின் போராட்டம் என பல பிரச்சினைகளோடு, இந்த நூற்றுக்கணக்கான பைல்களோடும் புதிய பொறுப்பு டிஜிபி போராட வேண்டியதாகிவிட்டதாம். இதனால் பதவி ஏற்ற முதல் நாளே ஏன்டா இந்த பதவிக்கு வந்தோம் என்றாகிவிட்டதாம்.

இதோடு சீனியர் டிஜிபிக்களும் இனி எந்த ஒத்துழைப்பும் தர மாட்டார்கள் என்பதால் அந்த துறை பிரச்சினைகளும் இவரிடம்தான் வரும். இதனால் பொறுப்பு டிஜிபி பதவியை பெற்று தவித்து வருகிறாராம். வரும் நாட்களில் டிஜிபி பதவி தொடர்பாக உச்சநீதிமன்றம் எதாவது அதிரடி உத்தரவை பெற்று பதவி இழக்க நேரிட்டால் சீனியர் அதிகாரிகளின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டுமாம் பொறுப்பு டிஜிபி. பாவம்தான் இந்த நல்ல, நேர்மையான அதிகாரிக்கு ஏற்பட்ட சோதனை என ‘உச்’ கொட்டுகின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

Comments (0)
Add Comment