கரூர் மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கடவர், நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவது மகன் முருகேஷ் என்கிற முருகேசன் (34). இவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ. 3,30,000 ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக குளித்தலை, சிந்தாமணிபட்டி போலீசார் முருகேசன் மீது மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகேசன் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் முருகேசனை கடந்த 27.08.2025 அன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து இன்னோவா கார், நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிதி நிறுவன மோசடிகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த 08.07.2025 ஆம் தேதி பொருளாதார குற்றவாளிகளை (Economical offender) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பு காவலில் அடைக்கலாம் என்று அரசாணை பிறப்பித்தது. அதனையடுத்து கரூர் மாவட்ட போலீசார் முருகேசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
முருகேசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி ஜோஷ் தங்கையா கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் பொருளாதார குற்றவாளி முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் 45 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவித்த 23 குற்றவாளிகள், வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 2 பேர், சைபர்கிரைம், மணல் கடத்தல், மதுபாட்டில் கடத்திய மூவர், போக்சோ பிரிவில் 3 பேர் என மொத்தம் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.