மூச்சின் ரக­சியம்: ஆறு சித்தரின் “வாசி யோகம்” தரும் பலன்கள்

பண்டைய காலங்களில் சித்தர்கள் என்பவர்கள் காடு, மேடு பகுதிகளில் ஊர் சுற்றுபவர்களாகவும், சித்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே காட்சியளிப்பவர்களாகவும் இருந்தனர். இந்த சித்தர்களிடம் பயிற்சி பெற்ற பலரும் சாதாரண மனிதர்களைப்போல தற்போது வசிக்க தொடங்கி விட்டனர். இவர்களை சித்தர்கள் என்றே கூற முடியாதபடி இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை கடற்கரை மற்றும் பல இடங்களில் இந்த சித்தர்கள் யாரும் அறியாத வகையில் வசித்துக்கொண்டு பல்வேறு இறை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இவர்கள் சித்தர்கள் என்பதை அடையாளம் கண்டறிய முடியும்.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ரயில்வேயில் பணியாற்றும் முத்து வெங்கடாசலம் என்பவரும் இவர்களில் ஒருவர். இவர் பல்வேறு சித்து வேலைகளை செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்கின்றனர் இவரது நண்பர்கள். இதற்கு உதாரணமாக இவர் சிகரெட் புகைத்துவிட்டு அந்த சாம்பலை ஒருவர் கையில் தட்டுகிறார்.

முதலில் இந்த சிகரெட் சாம்பலை முகர்ந்து பார்க்கும்படி கூறியபோது அது சாம்பல் நாற்றம் அடிக்கிறது. பின்னர் இவர் அந்த சாம்பல் மீது வைத்து சில மந்திரங்களை உச்சரித்த சில நொடிகளில் மீண்டும் முகர்ந்து பார்க்கும்படி கூறுகிறார். அந்த சாம்பலை முகர்ந்தோமேயானால் அது அத்தர் எனப்படும் வாசனை திரவியத்தின் வாசம் அடிப்பது ஆச்சர்யத்தையே ஏற்படுத்திவிட்டது. இதை நாம் நேரடியாகவே வீடியோ படம் எடுத்துள்ளோம்.

இவரை பற்றி விசாரித்த போது இவரது இயற்பெயர் முத்து வெங்கடாசலம். தனக்கு தீட்சை கொடுத்த குருமார்கள் ஆறு சித்தர் என பெயர் வைத்ததாக கூறுகிறார். தனலட்சுமி, வரதராஜ் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் தற்போது வில்லிவாக்கத்தில் உள்ள ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். சிறுவனாக இருக்கும்போதே துளசி செடியை பார்த்தால் வீட்டிற்கு எடுத்து வந்து அதற்கு விளக்கேற்றுவது வழக்கம். இதன்மூலம் இறைப்பணியை தொடங்கியுள்ளார்.

சிறுவயது முதலே இறைபணியில் ஆர்வம் ஏற்பட்டது. இறைசிந்தனையோடு பயணப்பட தொடங்கினார். பள்ளிப்பருவம் முடித்து ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். 1997-ம் ஆண்டு சிவன் வழிபாட்டுக்கு மாற தொடங்கினார். சிவனை நினைத்து தவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த நிலையில் உடன் இருந்தவர்கள் திருவண்ணாமலைக்கு பயணம் சென்றனர். ஆறு சித்தரும் இவர்களுடன் திருவண்ணாமலைக்கு பயணம் செய்து அங்கேயே தங்கிவிட்டார். திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்தபோதுதான் இறைவழிபாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல உதவியாக இருந்தது என்கிறார் ஆறு சித்தர்.

திருவண்ணாமலையில் இருந்த மூக்குப்பொடி சித்தர் இவரது குருநாதராக இருந்தார். திருவண்ணாமலையில் உள்ள சங்கு நாராயணி என்ற இலையை சாப்பிட்டால் 3 நாட்களுக்கு பசியே எடுக்காது என்கிறார் ஆறு சித்தர். அந்த அளவிற்கு பல்வேறு சிறப்பு தன்மைகளை கொண்ட மூலிகை செடிகள் திருவண்ணாமலையில் உள்ளது என்கிறார். குருநாதரான மூக்குப்பொடி சித்தர் உலக வாழ்க்கையை அனுபவித்து முடித்துவிட்டுதான் தவ வாழ்க்கைக்கு வர வேண்டும் என கூறி மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் உள்ளிட்ட பல்வேறு சித்தர்களை சந்திக்க முடிந்ததன் மூலம் மூலிகை செடிகளின் பயன்பாடு தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் சேர்ந்து இருந்தபோது சில சித்து வேலைகளை அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால் சித்து வேலையோடு இறைப்பணியை முடித்துக்கொள்ளக்கூடாது. அடுத்தகட்டமாக பிறவா நிலையை அடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக உள்ளது. இந்த நிலையை அடைய இறைவனை பிரார்தித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஆறு சித்தர்.

இவர் மூலிகை செடிகளில் இருந்து பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளை தயாரித்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார். மூலிகை செடிகள் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்கிறார் ஆறு சித்தர். இதோடு சுவாச பயிற்சிகளை நாம் மேற்கொண்டால் தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்க முடியும் என்றும் கூறுகிறார்.

நம் வாழ்க்கையில் சுவாசம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த சுவாசத்தையே நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதுதான் இவரது முக்கிய போதனையாக உள்ளது. “வாசி யோகம் ” என கூறப்படும் மூச்சு பயிற்சி மூலம் நம்மால் எந்த செயலையும் செய்ய முடியும். இந்த வாசி யோகம் செய்து மூச்சு விடுவதையே கட்டுப்படுத்தலாம். பொதுவாக நாம் வெளியிடும் மூச்சு காற்று மூலம்தான் நமது எண்ணங்கள் வெளியே செல்கிறது.

ஒருவர் தும்முவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதாக மருத்துவர்கள் கூறுவது வழக்கம். ஒருவரது மூச்சு காற்றின் மூலம் நோய் பரவுவது உண்மை என்கிறபோது இந்த மூச்சு காற்றின் மூலம் மற்றவர்களை கட்டுப்படுத்துவதோடு, அவர்களது எண்ணங்களையும் நம்மால் முழுமையாக கண்டறிய முடியும். அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதையே அவர்கள் விடும் மூச்சின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் நாம் சுவாசிக்கும் முறையை மாற்றினால் உடலில் உள்ள எந்த நோயையும் போக்க முடியும். இதற்குத்தான் இந்த வாசி யோகம் மிகவும் பயனுள்ளதாகும்.

எனவே இந்த வாசி யோகத்தை நாம் கற்று தெரிந்துகொண்டால் நம்மால் எதையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கு உதாரணம்தான் சிகரெட் புகையை அத்தர் வாசனை திரவியமாக மாற்றுவது. பொதுவாக நாம் மூச்சு விடும்போது வலதுபுற மூக்கு துவாரத்தின் மூலமும், மூச்சை உள்ளே சுவாசிக்கும்போது இடதுபுற மூக்கு துவாரத்தின் மூலம்தான் சுவாசிப்போம்.

இந்த சுவாச முறையையே வாசி யோகம் மூலம் மாற்றி சுவாசிக்க முடியும். இதன்மூலம் உடலின் பாகங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும் என கூறுகிறார் இந்த ஆறு சித்தர். இவரது மூலிகை வைத்தியமும், சுவாச பயிற்சியும் பல்வேறு நோய்களை எளிதில் குணமாக்கி விடுகிறது என்கின்றனர் பக்தர்கள். அதிக செலவில்லாமல் இந்த சுவாச பயிற்சி மூலமே பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என உறுதியாக கூறுகிறார்.

Comments (0)
Add Comment