சிவ. செல்லையா
தலைமைசெயலகத்தில் நிதித்துறையில் பணியாற்றும் செக்சன் அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஐ.ஏ.எஸ். அதிகாரி திட்டியதால் நிதி துறை செயலாளரை முற்றுகையிட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்திலும் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
அரசின் நிர்வாகத்தை செம்மையாக நடத்தி செல்லும் துறைகளில் முதன்மையானது நிதித்துறையாகும். இந்த துரையின் செயலாளராக பணியாற்றுபவர்தான் அரசின் சார்பில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார். எனவே நிதி துறையில் சீனியர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு சிறப்பாக பணியாற்றுவது வழக்கம். ஆனால் தற்போது நிதி துறையில் பணியாற்றும் செயலாளர் மற்றும் சிறப்பு செயலாளர் இருவருமே துறை அதிகாரிகளுடன் சண்டை கோழியாக நிற்பதால் துரையின் செயல்பாடுகளில் சுணக்கம் காணப்படுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி துரையின் செயலாளராக இருக்கும் உதயசந்திரன் முதல்வரின் செயலாளராக பணியாற்றி கடந்த ஆண்டுதான் இத்துறைக்கு மாற்றப்பட்டார் . முதல்வரின் நம்பிக்கையை பெற்றவர் என்பதால் சக அதிகாரிகளுடன் மல்லுக்கட்டும் போக்கை ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறார். துறையில் தனக்கு கீழே பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளை ஒருமையில் திட்டுவதாக இவர்மீது துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல் நிதித்துறையின் சிறப்பு செயலாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் அருண் சுந்தர் தயாள். இவரும் சக அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது வழக்கமாம். இதனால் நிதித்துறை அதிகாரிகளுக்கும், அருண் சுந்தர் தயாளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.
கடந்த வாரம் தன்னுடைய பிரிவில் பணியாற்றும் 2 செக்சன் அதிகாரிகளிடம் 3 பைல்களை எடுத்துவரும்படி கூறியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட பைல்கள் வேறு செக்சன் அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என கூறியதும் ஆத்திரமடைந்த கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாள் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செக்சன் அதிகாரிகள் உடனடியாக தலைமை செயலக சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். சங்க நிர்வாகிகள் அவசர கூட்டத்தை கூட்டி நிதித்துறை செயலாளர் அலுவலகத்தை கருப்பு பேட்ச் அணிந்து முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவெடுத்தனர். இதன்படி தலைமை செயலகத்தில் உள்ள நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் அலுவலகத்தை 400க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் முற்றுகையிட்டு அருண் சுந்தர் தயாள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டு முற்றுகை நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த செயலாளர் உதய சந்திரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் ஊழியர்கள் களைந்து சென்றனர். முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி அலுவலகம் முற்றுகை இடப்பட்ட சம்பவம் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் நடந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாறுதலில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த ஜான் லூயிஸ் -ஐ இடமாற்றம் செய்து சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். பொதுவாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக வடமாநில அதிகாரி தான் நியமிக்க படுவது வழக்கம். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தயாரிக்கும் பிரிவு இவரது கட்டுப்பாட்டில் இருப்பதால் வட மாநில அதிகாரி இருந்தால் கேள்வித்தாள் லீக் ஆகாது என்பதற்காக நியமிக்கபடுவார். ஆனால் தமிழக கேடர் அதிகாரிகளை நியமிப்பதால் கேள்வித்தாள்கள் லீக்காக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாறுதலில் நடக்கும் குளறுபடிகளால் நிர்வாக சீர்கேடுகள் ஏற்படும் என்கிறது கோட்டை வட்டாரம். தற்போது உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி அண்ணா பல்கலை பயிற்சி மைய தலைவர் பதவிக்கு இடமாறுதல் கேட்டிருப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்துள்ளாராம்.