மாதா பேராலயத்தில் கொடியேற்ற முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை இரு மத மக்களும் ஒற்றுமையுடன் ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி கொடியேற்றம் செய்யும் அதிசய நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சம அளவில் வசிக்கும் மாவட்டமாகும். இங்கு இரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒரே ஊரில் இருந்தாலும் உறவினர்களாகவே இருப்பதால் ஒற்றுமையுடன் இருப்பது வழக்கம். இருப்பினும் சில ஊர்களில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழிபாட்டில் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கும் கொடியேற்ற நிகழச்சிக்கு கொடிமரத்தில் கட்டப்படும் கொடியை அம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு மேளதாளத்துடன் இரண்டு மதத்தை சேர்ந்த பக்தர்களும் ஊர்வலமாக சென்று கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிசய நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருவது பலரும் அறியாததாகும்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த குழிவிளை என்ற பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளது. இந்த ஆலயத்தில் 9-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கி 17-ம் தேதி வரை ஆலய விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் மத ஒற்றுமையை போற்றும் வகையில் சிறப்பான நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கொடியேற்ற நாளில் கொடிமரத்திற்கு கட்டப்படும் கொடியை ஆலயத்தின் அருகேயுள்ள முத்தாரம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பின்னர் இரு மதத்தை சேர்ந்த மக்களும் எந்த மத பேதமும் இன்றி ஊர்வலமாக மேளதாளத்துடன் கொடியை எடுத்து வருவார்கள். ஆலயத்தின் நுழைவாயிலில் உள்ள கொடிமரத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதில் இரண்டு மதத்தில் உள்ளவர்களும் கலந்துகொள்வார். பின்னர் கொடிமரத்தில் கொடியை கட்டி கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்குகிறது.
கொடியேற்றம் தொடங்கிய பிறகு சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. கொடியேற்றத்தின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாகவே இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் மத மோதல்களும், போர்களும் நிலவிவருகிறது.
இந்த காலகட்டத்தில் அன்பு, சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் சுவாமி விவேகானந்தர் கூறியபடி மத ஒற்றுமைக்கான முதல் தோற்றம் இந்தியாவில் இருந்துதான் தொடங்கியது என்பதை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள நினைக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகள் மூலம் மத ஒற்றுமை நீடிக்க வேண்டும் என்பதே விருப்பம்.