நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் இருந்து பலர் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் இயக்குனர் ஆகவில்லை. வனிதா விஜயகுமாருக்கு அந்த பெருமை கிடைத்து இருக்கிறது. மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி, அவரே கதைநாயகியாக நடிக்கிறார்.
ராபர்ட் மாஸ்டர் ஹீரோ. பாங்காக், துபாயில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். வனிதா மகளும், பிக்பாஸ் பிரபலமான ஜோவிகா அந்த படத்தை தயாரிக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் தயாரிப்பாளர் இவர்தான். 40வயதை தாண்டிய தம்பதிகளின் காதல், கர்ப்பம், குழந்தைபேறு, சந்தேகம் இதை சுற்றி கதை நடக்கிறது.
சென்னையில் நேற்று நடந்த இந்த பட விழாவில் நடிகைகள் அம்பிகா, பாத்திமாபாபு, ஷகிலா மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், இயக்குனர் வசந்த பாலன், தயாரிப்பாளர் தனஞ்செயன் உட்பட பலர் வனிதாவை வாழ்த்தினர். குபரே பூஜையுடன் பட விழாவை வனிதா தொடங்கினார். அவர் வாஸ்து மீது நம்பிக்கை உள்ளவர் என்பதால், விழா நடந்த சென்னை சாலிகிராமம் வீதியில் பட்டாசு வெடித்து, சீன வாஸ்துபடியும் விழாவை தொடங்கினார்.
இந்த விழாவில் வழக்கம்போல் அதிரடியாக வனிதா பேசுவார். அந்த விஷயம் வைரல் ஆகும், நமக்கு கன்டன்ட் கிடைக்கும் என மீடியாக்காரர்கள் ஆர்வமாக இருக்க, உருக்கமாக பேசினார் வனிதா. அவர் பேசியது ‘‘என் அம்மா மஞ்சுளாவுக்குபின், நடிகைகள் அம்பிகா, ஷகிலா அக்காதான் எனக்கு உறுதுணையாக இருக்காங்க. இந்த படத்துல ஷகிலா அக்கா நடிச்சும் இருக்காங்க. என் பட விஷயத்தில் அனைத்து ஆலோசனைகளையும் அம்பிகா அக்காவிடம் கேட்டுதான் முடிவெடுப்பேன். அவரிடம் கலந்து ஆலோசிக்காவிட்டால், அவரிடம் இருந்து கெட்ட வார்த்தைகளில் மெசேஜ் வரும். பல ஆண்டுகளாக, பல விஷயங்களில் எனக்கு துணையாக அவர் இருக்கிறார்.
இந்த படத்தில் ஆர்த்தியும், கணேசும் நடிச்சு இருக்காங்க. பாங்காக்கில் நாங்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம். நடு ராத்திரியில் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒரே நபர் கணேஷ்தான். ஏன் என்று தெரியவில்லை. (சிரிக்கிறார்). என்னடா பண்ணுற என்றால் வாக்கிங் என்பான். இயக்குனர் வசந்தபாலன் பெரிய ரசிகை நான். அவரின் அநீதி படத்தில் என்னை நல்ல கேரக்டரில் நடிக்க வைத்தார். அவரிடம் இருந்து எளிமை, பொறுமை, தன்னடக்கம் ரொம்ப பிடிக்கும். அதை கற்க ஆசை. அவர் பக்கத்தில் இந்த மேடையில் இயக்குனராக இருப்பது எனக்கு பெருமை.
இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து இருக்கிறார். அவரை ரொம்பவே டார்ச்சர் செய்து பாட்டு வாங்கினோம். நானும் பாத்திமா பாபுவும் பல ஆண்டுகால நண்பர்கள். நான் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, அவரை நன்கு தெரியும். நானும் அவரும் ஜிம் மேட். ஆனால், நீங்க ஜிம்முக்கு போன மாதிரி தெரியலை என்பார்கள்.அங்கே நிறைய பேசுவோம்.
ஒரு சில விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். பிக்பாஸ் வீட்டுல ஜோவிகா இருந்தபோது, அவர் பெயருக்கு பின்னால் ஏன் விஜயகுமார் என்ற பெயர் என்று பலரும் கமென்ட் பண்ணினாங்க. அதுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். அந்த கதை சொல்கிறேன். என் பெயர் வனிதா விஜயகுமார். என் அப்பா விஜயகுமார். என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் திருமணம் செய்தேன். எனக்கு விஜய் ஸ்ரீஹரி பிறந்தான். அவருக்கு 3 வயசு இருக்கும்போது, ஒரு இக்கட்டான சூழ்நிலை. அப்பதான், என் வயிற்றில் ஜோவிகா உருவாகி இருந்தாள். எனக்கு அப்ப இந்தியாவில் இருக்க முடியலை.
எனக்கு எங்கே போனால் பிரச்னை. நான் எப்போது என் குழந்தையின் அப்பா பற்றி தவறாக பேசமாட்டேன். அவர் தவறுகளை சொன்னதில்லை. ஆனாலும், பிரச்னை பெரிதானது. அதிலிருந்து வெளியே வர, அமெரிக்கா போகலாம்னு முடிவெடுத்தேன். வீட்டுலேயே என்னால் இருக்க முடியலை. அமெரிக்கா போகலாம்னு அம்மா சொன்னாங்க. நான் அமெரிக்காவில் படிச்சு இருக்கிறேன். எங்களுக்கு ஓட்டல் இருந்தது. நானும், குழந்தையும் நிம்மதியாக இருக்கணும். உடல், மனரீதியாக காயம் இருக்க கூடாதுனு என் அப்பா சப்போர்ட் செய்தார்.
நான், மகன், வயிற்றில் குழந்தையுடன் அமெரிக்கா சென்றேன். பின்னர் அங்கே வந்த அம்மா என் நிலை பார்த்து அழுதார். என்னால் புருஷனுடன் இருக்க முடியாத நிலை. கர்ப்ப காலத்தில் அப்படியொரு நிலை. அன்பு, காதலில் உருவாகிற குழந்தையை இப்படி உருவாக்கும் சூழ்நிலை. உன் நிலை எந்த பொண்ணுக்கு வரக் கூடாதுனு கட்டிப்பிடித்து அம்மா அழுதார்.
குழந்தை பிறந்தபோது, சிறு குழந்தையான என் மகன்தான் என்னுடன் இருந்தான். அங்கே டெலிவரி ஆனபோது, அமெரிக்கா சட்டப்படி குழந்தை பெயர் சொல்ல வேண்டும். அந்த சூழ்நிலையில், என் கணவர் ஆகாஷ் என குழந்தையின் தந்தை பெயரை சொல்ல விரும்பவில்லை. என் குழந்தை நல்லா பிறக்கணும்னு அமெரிக்கா அனுப்பியவர் என் அப்பா விஜயகுமார். அதனால், என் மகள் பெயருக்கு பின்னால் விஜயகுமார் என்ற பெயரை சேர்த்து, ஜோவிகா விஜயகுமார் என பெயரிட்டேன். அவள் தயாரிக்கும் படத்தில் நான் நடிப்பேன், நான் இயக்குவேன் என நினைக்கவில்லை. எனக்கும், ஆகாசுக்கும் பிறந்த குழந்தை ஜோவிகா விஜயகுமார். அவர் விரைவில் 2 தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆகிறார். ’ என்றார்
– மீனாட்சி சுந்தரம்