ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பரும்…. கொந்தளிப்பும்….

351

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளில் டிரான்ஸ்பர் பட்டியலைக்கூட சட்டம் -ஒழுங்கு பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை காவல்துறைக்கு தலைவரான டிஜிபி தன்னிச்சையாக டிரான்ஸ்பர் செய்ய முடியாத நிலைக்கு சக அதிகாரிகள் மற்றும் மேலிடத்திற்கு வேண்டப்பட்டவர்கள் என கூறி தயாரான பட்டியல்கூட மாதக்கணக்கில் தேங்கிக் கிடப்பது ஐபிஎஸ் அதிகாரிகளிடையே பெரும் சலிப்பையும், நிர்வாகத்தின் மீதான வெறுப்பையும் உருவாக்கியுள்ளது.

ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த ஆட்சியாளர்களுக்கு இரட்டை குதிரைகளாக இருப்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரையோ, அவப்பெயரையோ பெற்றுத் தருவதும் இவர்கள்தான். கடந்த காலங்களில் நேர்மையான அதிகாரிகளை உடன் வைத்திருந்தால் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என ஆட்சியாளர்கள் கருதிய காலம் உண்டு. நேர்மையான அதிகாரிகள் முக்கிய பதவிகளில் நிநமிக்கப்பட்டதால் இவர்களுக்கு பயந்து ஓரளவிற்காவது நேர்மையாக பணியாற்றினர்.

காலம் செல்லச்செல்ல தாங்கள் விரும்புவதை செய்து கொடுக்கும் அதிகாரிகளும், ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்தான் தேவை என்ற மனோபாவம் ஆட்சியாளர்களுக்கு உருவானதால் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளும், ஜால்ரா அதிகாரிகளின் கையும் மேலோங்கிவிட்டது. இதனால் குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தத் துறைக்கு இவர்தான் தலைவர் என முன்கூட்டியே யூகிக்கும் அளவிற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரின் அதிகாரங்கள் மேலோங்கிவிட்டது.

குறிப்பிட்ட இந்த அதிகாரிகளின் ஆதரவு இருந்தால் தங்களுக்கும் முக்கிய பதவிகள் கிடைத்துவிடும் என்ற மனோபாவமும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மனநிலை மாறிவிட்டதும் துர்பாக்கியம். இவற்றுக்கு உச்சகட்டமாக ஆட்சியாளர்களுக்கு தோழமை கட்சியாக உள்ள ஜாதி கட்சித் தலைவர்களின் ஆசீர்வாதத்தோடு முக்கிய பதவிகளைப் பிடித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் தற்போது உண்டு.

பொதுவாக ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் பெரிய அளவிலான பதவி மாறுதல்களும், ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக இடமாறுதல் கோரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் டிரான்ஸ்பர் வழங்கப்படுவது வழக்கம். இதைத்தவிர நிர்வாக காரணங்களுக்காகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட காரணங்களுக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஐனவரி மாதம் முதல் வாரம் மற்றும் டிசம்பர் இறுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பிறகு சுகாதாரத்துறை, வனத்துறை, நீர்வள பாசனத்துறை என பசையுள்ள பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 6, 7 ஐஏஎஸ் டிரான்ஸ்பர் பட்டியல் வெளியானது. ஆனால் காவல் துறையில் ஒரு சில டிரான்ஸ்பர் பட்டியல் தவிர வேறு பட்டியல் வெளியாகவில்லை.

கடைசியாக மார்ச் மாதம் 25-ம் தேதியன்று சில ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். 17 மாவட்ட எஸ்.பி.க்.கள் மற்றும் யூனிட்டில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். சென்னையை ஒட்டியுள்ள மிகவும் முக்கிய சரகமான காஞ்சிபுரம் சரக டிஐஜி, கொலைகளுக்கு பெயர்போன நெல்லை சரக டிஐஜி பதவி உள்ளிட்ட சில பணியிடங்களுக்கான டிரான்ஸ்பர் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதமே தயார் செய்யப்பட்டது.

இதற்கிடையே சட்டசபை கூட்டம் தொடங்கியதால் கூட்டம் முடிந்த மறுநாள் இந்த பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் அமலாக்கத்துறை நடத்திய சில சோதனைகளால் பட்டியல் ஓரம் கட்டப்பட்டது. பின்னர் முதல்வர் மே மாதம் ஊட்டிக்கு செல்லும் முன்பு டிஐஜி, எஸ்.பி.க்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் முதல்வர் ஊட்டி சென்று திரும்பிய பிறகு பட்டியல் கையெழுத்தாகும் என தகவல் வெளியானது. ஆனால் பட்டியல் வரவில்லை.

முதல்வர் டில்லியில் நடந்து முடிந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முதல் நாளும் ஐபிஎஸ் டிரான்ஸ்பர் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகி அதிகாரிகளிடையே பரபரப்பு உருவானது. ஆனால் இந்நாள் வரை பட்டியல் வெளியாகவில்லை. நிர்வாக ரீதியாகவும், அமைதியான தமிழகம் என்ற முத்தல்வரின் விருப்பத்திற்கேற்க ஓரளவு நேர்மையான அதிகாரிகளை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் கருதி பட்டியலை தயாரித்து பேனல் கமிட்டியில் உள்ள அதிகாரிகளின் கருத்தை கேட்டபோது சில அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் பட்டியலை நீட்டியுள்ளனர்.

சில அதிகாரிகள் ஜாதி பாசத்திலும் தங்களுக்கு வேண்டிய மாவட்ட அதிகாரியை மாற்ற எதிர்ப்பு தெவித்தனர். இதையும் தாண்டி மாவட்ட மற்றும் சரக டிஐஜி பட்டியலை டிஜிபி ஒருவழியாக தயாரித்து உள்துறை செயலாளர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் அனுமதிக்கு அனுப்பியுள்ளார் டிஜிபி.

இரண்டு அலுவலகத்திலும் சில மாற்றங்கள் கூறி பட்டியலை மாற்றி மீண்டும் உள்துறை செயலாளருக்கு அனுப்பியபோது பதவிக்கு எதிர்பார்த்து காத்திருந்த சில அதிகாரிகள் மேலிடத்திற்கு நெருக்கமான வட்டாரம் மூலம் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக கூறப்­ப­டு­கி­ற­து. இதனால் டிஜிபியால் தயாரித்து அனுப்பபட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் 2 மாதங்களாக கிடப்பில் உள்ளது. நிர்வாக வசதிக்காக டிஜிபியால் அனுப்பப்பட்ட பட்டியல் கிடப்பில் போடப்பட்டதால் மாறுதல் பட்டியலில் இருந்த டிஐஜிக்கள், எஸ்.பி.க்கள் வெறுப்படைந்தததோடு சோர்வு நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டனர்.

இது போன்ற நிலை தற்போது மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாகவே தொடர்வதாகவும், டிஜிபியால் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு முதல்வர் டேபிள் வரை செல்லும் பட்டியலில் கூட முதல்வர் மற்றும் துணை முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகார மையங்கள் மூலம் மாற்றப்படுவதாக உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்ராரம் முதல் மாவட்ட எஸ்.பி.க்கள் வரை ஒரு கொந்தளிப்பு இருப்பதாக டிஜிபி அலுவலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதன் எதிரொலி மாவட்டங்களில் பிரதிபலிப்பதாகவும், இதைப் பற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் ஆபத்து என்கின்றனர் ஐபிஎஸ் அதிகாரிகள்….

சிவ. செல்லையா