ஐபிஎஸ் பட்டியலும்… தொடரும் குழப்பங்களும்…!!!!!!

533

– சிவ.செல்லையா –

ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் லிஸ்ட் தயார் செய்வதில் பல மேலிடங்களின் அழுத்தத்தால் பலமுறை பட்டியல் மாற்றப்பட்டு லிஸ்ட் வருமா? வராதா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் லிஸ்ட்டை தயாரிக்கும் உள்துறை அதிகாரிகளும் பட்டியலைத் தயாரித்து நள்ளிரவில் வெளியிட்டதோடு, பழைய தேதியை குறிப்பிட்டு உத்தரவை வெளியிட்டு தங்கள் பங்கிற்கு ஐபிஎஸ் அதிகாரிகளை மேலும் குழப்பி விட்டனர்.

அரசு நிர்வாகத்தின் 2 கண்களாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில், ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரிகளிடையே மனக்குமுறல் இருந்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாறுதல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பலமுறை வெளியாகியுள்ளது.

ஆனால் ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் மட்டும் “இப்ப வருமோ… எப்ப வருமோ” என்ற ரஜினி திரைப்பட பாடல் வரிகளுக்கேற்ப, எப்படி, யார் யாருக்கு வரும் என்பதை டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கூட அறிந்து கொள்ள முடியாத சூழல் உரு­வா­கி­யுள்­ளது. ஐபிஎஸ் டிரான்ஸ்பர் பட்­டியல் உள்துறை உயர் அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, முதல் கையெழுத்தாகும் வரை பலமுறை மாற்றப்பட்டு பல பெயர்கள் நீக்கப்பட்டும், சேர்க்கப்பட்டும் ஒரு வழியாக எதிர்பாராத நேரத்தில் வருவதும் வாடிக்கையாகி விட்டது.

இதே போலத்தான் 2 மாதங்களாகவே ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டும் பலமுறை பட்டியலில் பெயர் மாற்றப்பட்டு திருப்பி வருவதும், செல்வதுமாக இருந்தது. இறுதியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இறுதிப்பட்டியல் தயாராகி முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதிலும் கடைசி நேரம் வரை சில டிஐஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்கள் பெயர்கள் நீக்கப்பட்டு எதிர்பாராத சில அதிகாரிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. உளவுத்துறையில் உள்ள சீனியர் அதிகாரியை, வடக்கு மண்டலத்தில் உள்ள சரகத்திற்கு மாற்றி உத்தரவு தயாரான போது உளவு அதிகாரி பொங்கி எழுந்து விட்டாராம். காரணம் இந்த அதிகாரி இதே வடக்கு மண்டலத்தில் உள்ள கோயில் நகர சரகத்தில் பணியாற்றிய போது திடீரென மத்திய மண்டலத்தில் உள்ள சரகத்திற்கு மாற்றினர். சில மாதங்களில் துணைக்கு நெருக்கமான அதிகாரிக்காக மாற்றப்பட்டு உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். இவரை மீண்டும் கோயில் நகரத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்துவிட்டு வேறு சரகத்திற்கு பதவி கொடுத்ததால் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் மேற்கு மண்டலத்தில் பதவி உயர்வுடன் சென்று தன் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லாமல் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளான பெண் அதிகாரியை மீண்டும் சட்டம் ஒழுங்கு சரகத்தில் நியமித்தனர். இதே சரகத்தில் பணியாற்றிய அதிகாரி சென்னைக்கு மாற்றப்பட்டார். இந்த அதிகாரியும் பதவி உயர்வில் சென்ற நாள் முதல் தன் முகாம் அலுவலத்தைவிட்டு வெளியில் கூட எட்டிப் பார்க்காத அதிகாரி என உயர் அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்தான். மேற்கு மண்டலத்தில் உள்ள முக்கிய சரகமும் தற்போது வேகன்ட்…

இதேபோல நேர்மையான பெண் எஸ்.பி.க்கு முதலில் மாவட்டம் ஒதுக்கி விட்டு கடைசிநேரத்தில் மாற்றி டிஜிபி அலுவலகத்தில் டம்மி பதவி வழங்கப்பட்டது. ஒரு வழியாக பட்டியல் தயாராகி மாலையில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் பட்டியல் வெளியாகவில்லை.

இதனால் பட்டியல் இம்முறையும் வராது என ஐபிஎஸ் அதிகாரிகள் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால் நள்ளிரவு 12.30 மணிக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டு சாதனை படைத்தனர் உள்துறை அதிகாரிகள். பெரும்பாலான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காலையில் எழுந்த பிறகுதான் டிரான்ஸ்பர் பட்டியல் வெளியானதே தெரியுமாம். காலையில் பட்டியலைப் பார்த்த பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குழப்பமோ குழப்பம்.

காரணம் உள்துறையால் வெளியிடப்பட்ட அரசாணை தேதி 10.-06.-2025 என்பதற்குப் பதிலாக 10.-05.-2025 என குறிப்பிடப்பட்டிருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். ஒருவேளை பழைய உத்தரவாக இருக்குமோ என தங்களுக்கு தெரிந்த உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோதுதான் தேதியை உள்துறை அதிகாரிகள் தவறாக குறிப்பிட்டு பட்டியலை வெளியிட்டிருப்பது தெரிய வந்தது.

துணை செயலாளர், சூப்பிரண்டென்ட், இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர், உள்துறை செயலாளர் என பல அதிகாரிகள் பார்த்து முதல்வரின் செயலாளர் மூலம் முதல்வர் கையெழுத்து பெற்று டிஜிபி அலுவலகத்திற்கும் அனுப்பி வெளியிடப்பட்ட உத்தரவில் ஒரு மாதத்திற்கு முந்தைய தேதி குறிப்பிட்டிருந்தது ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கடும் ஷாக்.

பட்டியல் தயாரிப்பதில்தான் இதுவரை குளறுபடிகள் இருந்தது. தற்போது வெளியான பட்டியல் தேதியில் கூட உள்துறை அதிகாரிகள் குழப்பி விட்டார்களே என்ற ஆதங்கம் ஐபிஎஸ் அதிகாரிகளிடம்…. மீண்டும் ஒரு சிறிய பட்டியலும், ஜூலையில் மெகா டிரான்ஸ்பர் பட்டியலும் வெளியாகும் போதாவது இந்த தேதி குளறுபடி வராமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் அதிகாரிகள்…..