சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த தலைமை அலுவலகம் மூலம்தான் தமிழகம் முழுவதும் அனுமதி பெறாத அரசு புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு, நீர்நிலை பகுதிகளில் குடியிருப்போரை நீதிமன்ற ஆணைப்படி வேறு இடங்களில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு குடியேற்ற அனுமதியும் வழங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் சென்னையில் உள்ள கூவம் ஆறு உள்ளிட்ட ஆறுகளின் கரையோரங்களில் வசிப்போருக்கு வீடுகளை கட்டி ஒதுக்க ஆளும்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
சென்னையில்தான் அதிக அளவில் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை உடனடியாக அகற்றி குடியிருப்போருக்கு மாற்று இடங்களை தர வேண்டும் என உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி ஆளும்கட்சியைச்சேர்ந்த அமைச்சர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் அதிக குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கி தர வேண்டும் என துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் துறை அதிகாரிகளை சந்தித்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் தா.மோ. அன்பரசனுடன் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்களும், மாவட்ட செயலாளர்களும் வந்தனர். அப்போது அமைச்சர் மா.சு. தனது தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் கட்டப்படும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் தனக்கு மட்டும் ஆயிரம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஒரு தொகுதிக்கு 500 வீடுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதும் திடீரென டென்சன் ஆன அமைச்சர் மா.சு. தனது இருக்கையை விட்டு எழுந்து, எனக்கு ஆயிரம் வீடுகளை ஒதுக்க வேண்டும். இல்லையேல் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசி நான் வாங்கி கொள்கிறேன் என கோபமாக கூறியபடி தனது இருக்கையை விட்டு எழுந்து ரூம் கதவை திறந்து விறுவிறுவென வெளியே நடக்க தொடங்கிவிட்டார்.
இதைப்பார்த்த சக எம்.எல்.ஏ.க்களும், அதிகாரிகளும் அமைச்சர் பின்னால் ஓடிவந்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் விறுவிறுவென காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சக அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட வார்த்தை மோதலால் அமைச்சர் மா.சு. கோபித்துக்கொண்டு சென்றதோடு யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக்கொள்கிறேன் என கூறி மிரட்டி சென்ற சம்பவத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
இதேபோல தமிழ்நாடு நகர்ப்புறம் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியின் அடாவடியால் தலைமை அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள் கண்ணீர்விட்டு கதறும் நிலை ஏற்பட்டும் அவரை இடமாற்றம் செய்யாமல் அதிகாரிகள் காப்பாற்றி வருவது என் என கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுவாக இந்த அலுவலகத்திற்கு வருவாய்த்துறை உள்ளிட்ட சில துறைகளில் பணியாற்றும் உதவி தாசில்தார், தாசில்தார், மாவட்ட வருவாய் அதிகாரிகள்தான் மாற்றுப்பணியில் நியமிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு கடந்த ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட துவாரகா கடவுள் பெயரை ஒட்டிய பெண்மணி மனைகள் பிரிவு உதவி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தார். இவர் ஏற்கனவே வருவாய்துறையில் பணியாற்றி தற்போது வருவாய் நில நிர்வாக பிரிவு ஆணையராக பணியாற்றும் நாகராஜன் என்ற அதிகாரியிடம் பணியாற்றி இத்துறைக்கு வந்தவர். தனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி மிகவும் பழக்கமானவர் என கூறி தற்போது பணியாற்றும் இடங்களில் உள்ள உயர் அதிகாரிகளை கூட மிரட்ட தொடங்கினார். இவர்மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்ததால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதரவால் மீண்டும் இதே அலுவலகத்தில் நிர்வாக பிரிவுக்கு பணிமாற்றம் பெற்று வந்தார்.
இதன்பிறகுதான் பெண் அதிகாரியின் ஆட்டம் அதிகமாகிவிட்டதாம். இந்த அலுவலகத்தில் பணியாற்றி சேலம் மாவட்டத்துக்கு இடமாற்றம் கேட்ட ஊழியர் இந்த பெண் அதிகாரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் இவரை சேலத்திற்கு மாற்றியபோதும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்ததாக கணக்கு காட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் பிற பணிகள் முறையில் மாறுதல் தருவதாக இவரே உத்தரவு பிறப்பித்தார். இதன்மூலம் சென்னையில் பணியாற்றும் ஊழியர்களைப்போல கூடுதல் வீட்டுவாடகை படி உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு சொந்த ஊரில் ஊழியர் பணியாற்றி வருகிறார். இவரைப்போலவே பல்வேறு மாற்றங்களுக்கும் பிற பணிகள் என கூறி சென்னையில் பேருக்கு இட மாறுதல் போட்டு கூடுதல் சம்பளத்துடன் சொந்த ஊர்களில் பணியாற்ற அனுமதி அளித்து வருகிறாராம்.
இதற்கு தனியாக கட்டிங் பெற்றுக்கொள்கிறார். அதே நேரத்தில் வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சென்னைக்கு பணிமாறுதல் கேட்டால் இடம் காலியாக இல்லை என கூறி மறுத்துவிடுகிறார். இதனால் சென்னையில் பணியாற்ற விரும்புவோருக்கு இடமாறுதல் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கேட்டு துறையின் செயலாளருக்கு செல்லும் மனுக்கள் பற்றி செயலாளர் அலுவலகத்தில் இருந்து கேட்டால் அமைச்சர் அலுவலகத்திற்கு பல புகார்கள் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது வருவதால் தற்போது வழங்க வேண்டாம் என அமைச்சர் அலுவலகத்தில் உள்ள பி.ஏ.க்கள் கூறிவிட்டதாக பொய் தகவல் கூறி செயலாளரை ஏமாற்றி வருகிறாராம். அதேநேரத்தில் இவர் மீதான புகார்கள் செயலாளருக்கோ, அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றாலும் துரையின் பெண் நிர்வாக இயக்குனரின் பி.ஏ. மூலம் கடிதத்தை கிழித்து எறிந்துவிடுகிறாராம்.
துறையில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ் . அதிகாரியின் பி.ஏ.வை கையில் வைத்துக்கொண்டு இவர் போடும் ஆட்டம் தாங்கவில்லை. அமைச்சர் பெயரையும், அவரது பி.ஏ.க்கள் பெயரையும் தவறாக பயன்படுத்தி ஊழியர்களை பழிவாங்கி வருகிறார். தனக்கு கட்டிங் கொடுப்பவர்களுக்கு மட்டும் தேவையான இட மாறுதல்கள், சலுகைகள் வழங்குகிறார். இதனால் உண்மையாக இடமாறுதல், பதவி உயர்வு தேவைப்படும் ஊழியர்கள் இவரால் பழிவாங்கப்படுகின்றனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பகடைக்காயாக்கி துறையை குட்டிசுவர் ஆக்கிவரும் இந்த பெண் அதிகாரியை இடமாறுதல் செய்யாவிட்டால் துறையின் ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கும் என புலம்புகின்றனர் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும். அமைச்சரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா?