த.வெ.கவுக்கு செக் வைத்த ஆளும்கட்சி | மாநாட்டுக்கு மறுப்பு – 21-ம் தேதியே கூட்டம்!!

மதுரையில் த.வெ.க. மாநில இரண்டாவது மாநாட்டை வரும் 25-ம் தேதியன்று நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சதூர்த்தி விழாவை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் முன்கூட்டியே 21-ம் தேதியன்று நடத்துவதாக கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பிரமாண்ட மாநாட்டை கூட்டி ஆளும் கட்சிக்கு சவால் விடும் வகையில் ஏற்பாடுகள் நடத்தப்பட்ட்டதால் காவல்துறையை கையில் வைத்து வேண்டுமென்றே ஆளுகட்சி அமைச்சர் தடைகள் போடுவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி கடந்த ஆண்டே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை என்ற கிராமத்தில் முதல் மாநில மாநாட்டை கட்சி தலைவர் விஜய் பிரமாண்டமாக நடத்தி காட்டிவிட்டார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 7 மண்டலங்களிலும் பிரமாண்டமான மாநில மாநாட்டை நடத்தபோவதாகவும் இந்த மாநாட்டில் அறிவித்தார். இதன்படி இரண்டாவது மாநாடு மதுரையில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன்படி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் நடத்த கடந்த மாதம் பூமி பூஜை நடந்தது. இந்த மாநாட்டில் பிரமாண்டமான மேடை அமைப்பதோடு மாநாட்டின் உள்ளே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி தலைவர் விஜய் நடந்து வந்து தொண்டர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டிற்கான அனுமதியை பெற மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதமே கடிதத்தை மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர். பல நாட்கள் கடந்த பிறகும் மாநாடு நடத்துவதற்கான அனுமதியை தராமல் காவல்துறையினர் இழுத்தடித்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த மாவட்ட நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை சந்தித்து அனுமதி கடிதத்தை விரைந்து தரும்படி கோரிக்கை வைத்தனர். இதன்பிறகும் அனுமதி வழங்கப்படவில்லை. ஒருவழியாக இம்மாத முதல் வாரத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து வரும் 27-ம் தேதியன்று விநாயகர் சதூர்த்தி விழா நடப்பதால் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 2 நாட்களுக்கு முன்பு மாநாடு நடத்தினால் விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு பாதுகாப்பு கொடுப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படும். எனவே விநாயகர் சதுர்த்திக்கு முன்போ, பிறகோ மாநாடு நடத்தினால் அனுமதி தருவோம் என உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர்.

இதுபற்றி தலைவர் விஜய் மற்றும் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன்பிறகு மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய விஜய், காவல்துறை மூலம் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்க ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளது. ஆளுகட்சிக்கு எதிராக குரல் கொடுப்பதால் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க ஆளுகட்சியும், மதுரை மாவட்ட அமைச்சர் உள்ளிட்டோரும் பல்வேறு வகையில் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல்துறையினர் கூறியபடி மாநாட்டை முன்கூட்டியே நடத்தலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி வரும் 21-ம் தேதி வியாழக்கிழமையன்று நடத்தலாம் என முடிவெடுத்து கடிதம் கொடுத்துள்ளனர். இதன்படி வரும் 21-ம் தேதியன்று மாலை 4 மணிக்கு ஏற்கனவே அறிவித்த இடத்திலேயே பிரமாண்டமாகவும், கூடுதல் உற்சாகத்துடனும் நடத்தப்படும். ஏற்கனவே சிறப்பாக, விறுவிறுப்பாக நடந்து வரும் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் குறைந்த பட்சம் 2 லட்சம் பேரையாவது கூட்டி பிரமாண்டத்தை காட்ட வேண்டும் என விஜய் திட்டமிட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் குறைந்தபட்சம் 20 சதவிகித வாக்குகளை பெற முடியும் என சமீபத்தில் நடந்த தனியார் சர்வேயில் கூறியுள்ளது விஜய்க்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனவே மாநாட்டை பிரமாண்டமாக கூட்டி ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கு தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். இதன் மூலம் வரும்காலத்தில் தங்கள் இன்றி தமிழகத்தில் அரசியல் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும் என்பதே விஜய்யின் திட்டம். எனவே எல்லா மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு தொண்டர்கள், ரசிகர்களை அழைத்துவர வேண்டும் என மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளாராம். இதை தவிர தானாகவே பெரும் கூட்டம் வரும் எனவும் விஜய் கண்டித்துள்ளார். இந்த மாநாடு அரசியல் திருப்ப மாநாடாக அமையும் என அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர். இதனால் நாம்தமிழர் கட்சி அதிக பாதிப்பை சந்திக்கும் என்பதால்தான் அக்கட்சி தலைவர் சீமான் நடிகர் விஜய் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியிருப்பதாகவும் த.வெ.க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர் .

மாநாட்டில் லட்ச கணக்கில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பிரமாண்டமான சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி ராட்சத தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. தொண்டர்கள் தண்ணீரை தேடி அலையாமல் இருக்க அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே தண்ணீர் பைப்புகளை பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 750 பைப்பும் அமைத்து காலை முதல் மாலை வரை போதுமான தண்ணீர் கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பாட்டில்கள் ஒரே நேரத்தில் குவிந்து கிடப்பது தடுக்கப்படும். மாநாட்டில் மோதல் 90 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு ஒரு பாக்சில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேர் வரை அமர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டு திடலில் மட்டும் ஒண்டரை லட்சம் தொட்டினார்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டு பணிகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டார். வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடத்திலும் ஓட்டுனர்களுக்கு தண்ணீர் கிடைக்க தொட்டிகளும், பைப்புகளும் அமைக்கப்படுகின்றன.

Comments (0)
Add Comment