கூட்டணிக்கு தவிக்கும் தந்தை – மகன்..! வேதனையில் தொண்டர்கள்…

– சிவ. செல்லையா –

கூட்டணிக்கு வருவார்களா என ஏங்கிய காலம் போய் கூட்டணியில் சேருவதற்காக தந்தையும், தனயனும் இரு துருவங்களாக அடித்துக்கொள்வதால் கட்சி தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதுடன் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக திமுக அல்லது அதிமுகவில் சேருவது என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டது பாமக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேருவது என பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவெடுத்து தங்கள் ஜாதியை சேர்ந்த மூத்த அமைச்சருடன் பேச்சுவார்த்தையை நடத்தி தொகுதி பங்கீட்டையும் முடித்தார். ஆனால் பாஜக கட்சியுடன்தான் கூட்டணி சேர வேண்டும் என ஒற்றைக்காலில் பிடிவாதமாக நின்று கூட்டணியை வைத்தார் அன்புமணி ராமதாஸ். இந்த தேர்தலில் குறைந்த எம்.எல்.ஏ சீட்டுகளை மட்டுமே பா.ம.க பெற்றதுடன் ஆளும்கட்சி கூட்டணியாக இருக்கும் வாய்ப்பும் பறிபோனது. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே விரிசல் தொடங்கியது.

இந்த விரிசல் ராமதாஸின் சகோதரி மகன் சுகந்தனுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கி அதிகாரத்தை ராமதாஸ் கொடுத்ததும் மேலும் அதிகரித்தது. சுகந்தனுக்கு எந்த கட்சி பதவியும் வழங்க கூடாது என அன்புமணி போர்க்கொடி தூக்கியபோதும் ராமதாஸ் தன்னுடைய பிடிவாதத்தை விடவில்லை. இதனால் விரிசல் மேலும் அதிகரித்தது. பா.ம.க சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழாவில் இந்த மோதல் வெளிப்படையாக தெரிய வந்த நிலையில் ராமதாஸ் கூட்டிய செயற்குழுவில் தன்னுடைய ஆதரவாளர்களை கலந்து கொள்ள விடாமல் அன்புமணி தடுத்ததால் மோதல் பெரிதாகி அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சி பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கும் நிலைக்கு கொண்டுபோனது.

பதிலுக்கு அன்புமணியும் ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்களை நீக்குவதாக அறிவித்து கட்சி இரண்டாகும் நிலைக்கு தள்ளிவிட்டார். இதன்பிறகு அன்புமணியின் பதவிக்கே வேட்டு வைத்தார் ராமதாஸ். ராமதாசின் திருமண நாள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராமதாஸ் திமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேர திமுக எம்.பி. மற்றும் அமைச்சர் மூலமாக தூதுவிட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் ராமதாஸ். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி கட்சியை இரண்டாக உடைத்து பா.ஜ கட்சியுடன் மீண்டும் கூட்டணியில் சேருவதற்கான பணியை தொடங்கி ராமதாஸிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தொடங்கியுள்ளார். இவர்களது மோதலின் பின்னணி என்ன என விசாரித்தபோதுதான் இருவருமே கட்சி, கொள்கைகளை தூக்கி போட்டுவிட்டு காந்திக்காக கட்சியை அடமானம் வைக்க தொடங்கி கட்சியின் அழிவுக்கே காரணமாகி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என அறிவித்து சீட்டுகளை இறுதி செய்ததோடு தேர்தல் பணிக்காக பல கோடிகளை முன்பணமாக பெற்றாராம் ராமதாஸ். ஆனால் தனியார் மருத்துவ பல்கலைகழகங்களுக்கு அனுமதி வழங்கியதில் பலகோடி லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் குறுக்கு விசாரணை நடத்தி வழக்கில் தண்டனை பெற்றுத்தரும் சூழ்நிலையை உருவாக்கிய மத்திய அரசு இதை காரணம் காட்டியே அன்புமணியை தங்கள் வழிக்கு கொண்டுவந்ததோடு தேர்தல் செலவுக்கு கொடுத்த நிதியை அன்புமணி முழுவதுமாக வைத்துக்கொண்டு தேர்தல் செலவுக்கு நிதியையே தரவில்லை என்கின்றனர் நிர்வாகிகள்.

இதுதான் இருவருக்கும் இடையிலான மோதலுக்கு ஆரம்பம். தற்போது ராமதாஸின் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி வைத்தால் மருத்துவ கல்லூரிகள் அனுமதி மோசடி வழக்கில் அன்புமணியை சிக்க வைக்க ப.ஜ.க தயாராக உள்ளதாம். இதனால் மீண்டும் பா.ஜ.க. காட்சிதந்தான் கூட்டணி என்ற ஒரே முடிவில் உள்ளாராம் அன்புமணி. இவர்களது மோதலால் கட்சியில் யார்பக்கம் நிற்பது என்ற குழப்பம் ஏற்பட்டு ஒரு தரப்பினர் அதிமுக பக்கமும், மற்றொரு தரப்போ திமுக பக்கமும் தாவ தயாராகிவிட்டனர்.

200க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் சேலத்தில் சேர்ந்து தந்தைக்கும், மகனுக்கும் அதிர்ச்சி கொடுக்க தொடங்கி விட்டனர் கட்சி தொண்டர்கள். கொள்கைக்காக கூட்டணி என தொடங்கி தற்போது நிதி மற்றும் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்காக கட்சியை இருவரும் அடகு வைப்பதால் பா.ம.க.வின் சரிவை யாராலும் தடுக்க முடியாது. இந்த நிலைமை தொடர்ந்தால் கூட்டணி சேர்வதற்கு கூட திராவிட காட்சிகள் முன்வராது என வேதனையுடன் கூறுகின்றனர் பாமக ஆரம்பகால தொண்டர்களும், நிர்வாகிகளும். தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் பல மோதல்களை காணலாம் என்கிறது பா.ம.க. வட்டாரம்.

 

 

 

Comments (0)
Add Comment