முன்னாள் காதலி…சீமான் கலகல பேச்சு

இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இயக்குநர் -நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன், வரும் ஜூன் 6 ல் படம் ரிலீஸ். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார்.

சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது…

“சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள், தக்லைப் படமும், இந்த படமும் ஒன்றாக வருகிறது.முன்பெல்லாம் ஒரே நேரத்தில் நாலைந்து படங்கள் வரும். அந்த படம் இல்லாவிட்டால், இந்த படம் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு கூல் சுரேஷ் சிவன் வேடத்தில் வந்துள்ளார்.

அவர் விமர்சனங்களுக்கு கவலைப்படக்கூடாது. நான் அப்படிதான் இருக்கிறேன். கமல்ஹாசன் ஏன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் நாலு முனை போட்டி வரலாம். யார் ஓட்டை, யாரும் பிரிக்க முடியாது. அடுத்த மே மாதம் சட்டசபைக்குள் நா.த.க நுழையுமா என கேட்கிறார்கள். பணம், திரைக்கவர்ச்சி, அரசியலை மீறி மக்கள் நல்லதை விரும்புவார்கள். அது நடக்கும்.அதுவரை பொருத்து இருக்க வேண்டும்.

இதில் நடித்த எம் எஸ் பாஸ்கர் சிறப்பாக நடிக்கிறார். சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலியில் அவர் நடிப்பு அருமை. நான் சினிமாவில் இல்லை.. இனி எடுக்க முடியாது. நான் எடுத்தால் அவ்வளவு பிரச்னை வரும். சினிமா எனக்கு முன்னாள் காதலி மாதிரி.. அவளுக்கு திருமணம் ஆனாலும் நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஆளு நான் என்றார் சீமான்.

 – மீனாட்சி சுந்­த­ரம்

Comments (0)
Add Comment