ஒரே பிரிவில் கோலோச்சிய காவல் அதிகாரிகளுக்கு “செக்”: டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

154

தமிழக காவல்துறை வரலாற்றில் சிவில் சப்ளை சிஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆன் டூட்டியில் பணியாற்றி கோலோச்சிக் கொண்டிருந்த தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்களை மீண்டும் தங்களது பிரிவுகளுக்கே சென்று பணியாற்ற டிஜிபி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவிற்கு காவல்துறையினர் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். நிர்வாக பிரிவு டிஜிபி மற்றும் .ஜி.யின் துணிச்சலான நடவடிக்கைகளே இந்த உத்தரவிற்கு காரணம் என்றும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகின்றனர்.

தமிழக காவல்துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான காவலர்கள் நியமிக்க படாததால் காவல் நிலையங்கள் மற்றும் சிபிசிஐடி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் ஏராளமான காலி பணியிடங்கள் இப்போதும் உள்ளன. இதனால் ஆயுத படை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான போலீசார் ஆன் டூட்டி என்ற அயல்பணி அடிப்படையில் பணிமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

டிஜிபி சங்கர் ஜிவால்

இவற்றில் பெரும்பாலும் உடல்நல குறைவால் அவதிப்படுபவர்கள், ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் போலீசார்தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலிக்களாகவும், ஓட்டுநர்களாகவும் பணியாற்றும் போலீசார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தாங்கள் பணியாற்றும் அதிகாரிகளின் பரிந்துரையோடு பணம் கொழிக்கும் சிவில் சப்ளை சிஐடி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் அயல்பணி கேட்டு சேர்ந்துவிடுவது வழக்கம். உடல்நல குறைவு, குடும்ப சூழ்நிலை காரணமாக மாநில குற்ற ஆவண காப்பகம் மற்றும் டிஜிபி அலுவலகங்களில் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் ஏராளமான போலீசார் இவ்வாறு பணியாற்றி வருகின்றனர்.

பொதுவாக அயல்பணிக்கு சென்றாலும் பொருளாதார குற்றப்பிரிவில் 3 ஆண்டுகளும், சிபிசிஐடி பிரிவில் 5 ஆண்டுகளும், கடலோர பாதுகாப்பு பிரிவில் 5 ஆண்டுகளும், காவலர் பயிற்சி பள்ளி, காவலர் அகாடமி ஆகியவற்றில் 3 ஆண்டுகளும், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் 5 ஆண்டுகளும், மாநில மனித உரிமை ஆணையம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவற்றில் 3 ஆண்டுகள் வரை மட்டுமே பணியாற்றிவிட்டு மீண்டும் தாங்கள் பணியில் சேர்ந்த பிரிவிற்கே சென்றுவிட வேண்டும் என்பதுதான் காவல்துறை பணியாளர் சீர்திருத்த பிரிவின் சட்டம்.

ஆனால் பெரும்பாலான காவலர்கள் பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர்கள் வரையிலும், உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள் வரையிலும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேல் 10, 15 ஆண்டுகள் வரையிலும் கூட ஒரே பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு போதுமான காவலர்களும், உதவி ஆய்வாளர்கள் மற்றும் குற்ற பிரிவுகளுக்கு ஆய்வாளர்கள் இல்லாமல் காலி பணியிடங்களாகவே உள்ளன.

இதனால் வேறு பிரிவுகளுக்கு சென்றவர்களை மீண்டும் தங்களுடை பிரிலேயே பணியாற்ற உத்தரவிட வேண்டும் என டிஜிபிக்கு பலமுறை காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் உயர் அதிகாரிகளின் பரிந்துரையோடு இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். பல ஆண்டுகளாக ஒரே பிரிவில் அயல்பணியில் பணியாற்றி வந்ததால் இந்த பிரிவில் தாங்கள் செய்வதுதான் சட்டம் என்ற ரீதியில் இவர்கள் சர்வ அதிகாரத்தோடு பணியாற்றியதோடு, பல்வேறு ஊழல் புகார்களுக்கும் ஆளாகினர். இருந்தபோதும் இவர்களை பணிமாற்றம் செய்ய முடியாமல் உயர் அதிகாரிகள் தயக்கம் காட்டினார்.

டிஜிபி வெங்கட்ராமன்

ஆனால் தற்போது டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் டிஜிபி வெங்கட்ராமன், .ஜி. பாலகிருஷ்ணன் இருவரும் டிஜிபி சங்கர் ஜிவால் கவனத்திற்கு எடுத்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிஜிபி சங்கர் ஜிவால் அயல் பணியில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வரை அனைவரையும் ஏற்கனவே பணியில் சேர்ந்த பிரிவுகளுக்கே மாற்றிவிடும்படி உத்தரவிட்டார். இதன்படி சிபிசிஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அயல்பணிகளில் பணியாற்றுவோர் பட்டியலை பெற்ற டிஜிபி வெங்கட்ராமனும், .ஜி. பால கிருஷ்ணனும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

.ஜி. பாலகிருஷ்ணன்

காரணம் கிட்டத்தட்ட தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அயல்பணி என்ற பெயரில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் 174 பேர், சிபிசிஐடியில் அதிகபட்சமாக 258 பேர், கடலோர காவல் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 224 பெரும், காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் 205 பேர், மாநில குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றும் 34 பேர் , மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றும் 3 பேர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 86 போரையும் வரும் 28-ம் தேதிக்குள் தங்களது பழைய பிரிவிற்கே சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் மூலம் உத்தரவை பிறப்பிக்க வைத்துள்ளனர்.

இதன் மூலம் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்பி வழக்கம்போல பணியாற்ற முடியும். சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தினமும் நடக்கும் போராட்டங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களில் தேவையான போலீசார் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில் வெறுமனே வேறு துறைகளில் ஆண்டுக்கணக்கில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்களை மீண்டும் பழைய பிரிவுகளுக்கே திருப்பி அனுப்பிய டிஜிபி சங்கர் ஜிவாலின் நடவடிக்கைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.