தேர்தல் கமிஷன் பிடியில் பாமக : விரக்தியில் தொண்டர்கள்

151

தந்தை மகனுக்கு இடையிலான போட்டியில் போட்டி பொதுக்குழுவை நடத்தி பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தொடருவார் என்ற தீர்மானம் கட்சியை கட்டுப்படுத்தாது என அன்புமணி ராமதாஸ் தரப்பில் கூறியுள்ளனர். இருவரது பிரச்சினையும் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளதால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை விரக்தியடைந்துள்ளனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணிக்கு இடையிலான கருத்துவேறுபாடு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த மோதல் எதிரொலியாக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு தன்னை கட்டுப்படுத்தாது. செயற்குழு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை ராமதாஸ் தன்னிச்சையாக நீக்கியது செல்லாது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், பதிலுக்கு ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதுமாக அறிவிப்புகள் தினமும் வெளிவந்துகொண்டுள்ளது. இந்த மோதலின் உச்சகட்டமாக ராமதாஸ் வீட்டில் உள்ள அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணிதான் பொறுத்தியதாக ராமதாஸ் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். இது இருவரையும் சமாதானப்படுத்த முக்கிய நிர்வாகிகள் எடுத்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைந்துவிட்டது.

கட்சியை தனது கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டுவர கட்சியின் பொதுக்குழு கூட்டம் 17ம் தேதியன்று நடக்கும் என ராமதாஸ் அறிவித்தார். ஆனால் ஆகஸ்ட் 9-ம் தேதியே கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இதற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மாமல்லபுரத்தில் கூட்டத்தை கூட்டினார் அன்புமணி. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணியே அடுத்த ஓராண்டுக்கு தொடருவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதமானது. அன்புமணி தன்னைத்தானே தலைவராக அறிவித்தது கட்சி விதிகளின்படி செல்லாது என தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

ராமதாஸ் சார்பில் அறிவிக்கப்பட்டபடி விழுப்புரம் மாவட்டம் பட்டனூரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராமதாஸ் கடந்த மே மாதம் 30ம் தேதிமுதல் செயல்படுகிறார். இதை பொதுக்குழு அங்கீகரிக்கிறது என்பது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உண்டு எனவும் கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது . தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கீகார கடிதம் வழங்க ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அன்புமணி ராமதாஸ் கூட்டிய பொதுக்குழு செல்லாது என ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்புமணி தரப்பி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு தீர்மானத்தின்படி அன்புமணிதான் தலைவர். இதை ராமதாஸிற்கு ஏற்கனவே அறிவித்துவிட்டோம் எனவே ராமதாஸ் தரப்பில் நடத்தப்பட்டு பொதுக்குழு தீர்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.

இதனால் யார் கூட்டிய பொதுக்குழு செல்லும் என்பதை தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும். தேர்தல் ஆணையம் எந்த பொதுக்குழு தீர்மானத்தை அங்கீகரிக்குமோ அதுவே உண்மையான பாமக என்றாகிவிடும். எனவே இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்கு கிடைத்தாலும் மற்றொரு தரப்பு போட்டி பாமக என மாறுவதற்கே வாய்ப்புள்ளது. இதன்மூலம் பாமக இரண்டாக பிரியும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனால் யாருக்கு ஆதரவு அழிப்பது என்ற பெரும் குழப்பம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணி சேருவதில் ஏற்பட்ட பல்வேறு தவறான முடிவுகளால் கட்சியின் ஒட்டு சதவிகிதம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் போட்டி பொதுக்குழு நடத்தி கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் கட்சிக்காக பாடுபட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகவும் விரக்தி அடைந்துவிட்டனர். பாமகவின் எதிர்காலம் இனி கேள்விக்குறியே என புலம்பல்தான் கேட்கிறது.

இதற்கிடையே ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது கட்சி கட்டுப்பாட்டை நீக்கியது உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பில் நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது. தபால் மூலம் இந்த விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை அன்புமணி அளிக்காவிட்டால் கட்சியிலிருந்தே நீக்கும் முடிவிற்கு ராமதாஸ் வந்துள்ளதாகவும் பாமக வட்டாரங்கள் கூறுகின்றன. அன்புமணிக்கு பதிலாக அவரது மகள் காந்திமதி மேடையில் அமரவைக்கப்பட்டிருந்தார். இதன்மூலம் அன்புமணிக்கு பதிலாக மக்கள் காந்திமதிக்கு காட்சிப்பதவி வழங்க ராமதாஸ் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.