திருப்­ப­ரங்­குன்றம் விவ­கா­ரம்: பாஜக விரித்த வலையில் சிக்கிய திமுக

129

திருப்­ப­ரங்­குன்றம் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு தூண்டிவிட்டால் மட்டுமே நடக்கக்கூடும்.

எந்த ஒரு அரசும் தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவிற்கு தரம் தாழக்கூடாது. தீபம் ஏற்ற ஒருசிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்துவிட்டு பக்தர்களை மலை அடிவாரத்தில் நிற்க வைத்து வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்த கூட்டத்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும்.

சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பதுபோல் சித்தரிப்பது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசின் இயலாமையை வெளிப்படுத்துவதாக்கவோ அல்லது சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையே காட்டுகிறது என மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பின் வாசகங்கள்.

இந்த வாசகங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக அரசின் இயலாமையையும், திட்டமிட்டு இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்த முயலுவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசால் முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி வழங்கியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவுதான். மேலும் சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மை ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக இழக்கும் சூழ்நிலையை திமுக அரசே உருவாக்கி கொண்டது.

அரசுக்கு எதிராக பெரும்பான்மை இந்துக்களை திசைதிருப்பிவிடும் பாஜகவின் திட்டத்திற்கு திமுக அரசு தானே பாதை வகுத்துக்கொடுத்துவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் வேதனைப்படுகின்றனர். பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் இந்துக்களின் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாக தங்கள்பக்கம் திசைதிருப்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப்போல தமிழகத்திலும் வலுவாக கால் ஊன்ற இந்த விவகாரம் பெரிதும் துணைநிற்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூறுவதாக கூறி ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளையும் சட்ட அமைச்சர் ரகுபதி மன வேதனைக்குள்ளாக்குவதை போல பேசி பிரச்சினையை இன்னும் பெரிதாக்கி ஒட்டுமொத்தமாக இந்துக்கள் ஓட்டை திமுகவிற்கு செல்லவிடாமல் தடுத்துவிட்டார் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் விளக்கு ஏற்ற அனுமதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து அமைப்பின் தலைவரான ராம . ரவிக்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கார்த்திகை தீபத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதியான ஜி.ஆர். ஸ்வாமிநாதன் மலை உச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டு தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கலாம் என அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

இந்த தீர்ப்பு தரப்பட்டு 3 நாட்களாகியும் அரசு எந்த மேல்முறையீடும் செல்லாததால் தீபம் ஏற்ற அரசு அனுமதித்து விட்டதோ என கருதப்பட்ட நிலையில் கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்து விட்டனர். உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி அதன் புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கும் போலீசார் அனுமதி வழங்காததோடு மதுரை முழுவதும் 144 தடைச்சட்டம் பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்து பிரச்சினையை பெரிதாக்கினார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாநகர ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீலை மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்தது. உடனே மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஒரு மாதமாகியும் இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் நீதிபதி சாமிநாதன் உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மீண்டும் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் திருப்பரங்குன்றத்தில் தற்போது இருப்பது தீபதூணே அல்ல. வெறும் கிரானைட் கல் என ஒருபுறமும், சமணர்கால கல் எனவும் அரசே மாறி, மாறி அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் தீப தூண்தான் என இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்ட புத்தகத்திலேயே தெளிவாக கூறப்பட்டிருந்தது.

கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற அரசு அனுமதிக்காதது பெரும்பான்மை இந்துக்களுக்கு கடும் வேதனையையும், அரசின் மீதும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த மோதலை அதிகரிக்கும் வகையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு ஏற்ற இஸ்லாமியர்களுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து போராடிய அப்பகுதி இந்து பெண்களை கைது செய்தது அரசின் மீதும், காவல்துறை மீதும் ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடக்கும்போதே திருப்பரங்குன்றம் முருகன் குறித்தும், கோயில் குறித்தும் திமுக தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் செய்த விமர்சனம் திமுக அரசு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கு எதிரானது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துவதைப்போல அமைந்துவிட்டது.

இந்த விவகாரத்தை பெரிதாக்கி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் பெரிய போராட்டம் நடத்தவேண்டும். இந்துக்களுக்கு திமுக எதிரான கட்சி. இந்த கட்சிக்கு ஓட்டுபோடுவது இந்து சமயத்தை அளிப்பதற்கு சமம் என்ற ரீதியில் பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்களும், இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த போராட்டத்தை மேலும் பெரிதாக்கி தமிழகத்தில் பாஜக காலூன்ற வழிவகை செய்யவேண்டும் என பாஜக மேலிடமும், ஆர்.எஸ்.எஸ். மேலிட தலைவர்களும் ரகசிய உத்தரவு பிறப்பித்தனர்.

இதற்கேற்றாற்போன்று திமுக சார்பிலும், தர்கா நிர்வாகத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் எடுத்துவைத்த வாதங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் அரசின் மேல்முறையீட்டு மனுமீதான தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகோயோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பில் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என அரசு அச்சப்படுவது அபத்தமானது.

இந்த குழப்பம் அரசு தூண்டிவிட்டால் மட்டுமே நடக்கக்கூடும். எந்தஒரு அரசும் தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவிற்கு தரம் தாழக்கூடாது. தீபம் ஏற்ற ஒருசிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்துவிட்டு பக்தர்களை மலை அடிவாரத்தில் நிற்கவைத்து வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்த கூட்டத்தால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பதுபோல் சித்தரிப்பது சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அரசின் இயலாமையை வெளிப்படுத்துவதகவரோ அல்லது சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையே காட்டுகிறது என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த பலத்த அடிதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். காரணம் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிதனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்து இந்திய முழுவதும் உள்ள நீதிபதிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்மதித்துள்ளார். இதன் எதிரொலிதான் உச்சநீதிமன்றத்தில் கார்த்திகை தீபம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் மீது விமர்சனம் செய்வதாக கூறி சட்ட அமைச்சர் ரகுபதி பேசியிருப்பதும் இந்த பிரச்சினையை மேலும், மேலும் பெரிதாக்கும் வகையில் செய்துவிட்டது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், பொங்கலுக்கு 3 ஆயிரம் ரொக்கம் என அதிரடி திட்டங்களை அறிவித்து அதிருப்தியில் உள்ளவர்களை சமாளிக்க முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை நீர்த்துபோகச்செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துவிட்டது என்றே கூறலாம். தீர்ப்பு வழங்கப்பட்டதும் திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள பகுதியில் வசித்துவரும் வயதான பெண்கள் பாதுகாப்பிற்கு நின்றுகொண்டிருந்த போலீசாருக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடும் அளவிற்கு இந்த விவகாரம் இந்துக்களிடையே தீவிரம் அடைந்துவிட்டது. முதலிலேயே தீபம் ஏற்ற அனுமதித்திருந்தால் இந்த அளவிற்கு பிரச்சினை வெடித்திருக்காது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்த வேண்டும் என சிலர் கொடுத்த ஐடியா அரசுக்கு எதிராகிவிட்டது.

சிறுபான்மை ஓட்டுக்காக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்துக்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது என பரப்பப்பட்ட பிரசாரம் உண்மை என நம்பும் அளவிற்கு அரசின் நடவடிக்கைகளும் அமைந்துவிட்டது. இந்த பிரச்சாரத்தை எப்போதும் பாஜக பெரும்பாலான மாநிலங்களில் கையில் எடுத்து அதில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது என்பது கண்கூடான உண்மை. இதற்கு திமுகவே வழிவகை செய்ததைப்போல திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுகவும், கூட்டணி கட்சிகளும் என ஒட்டுமொத்த இந்துக்களும் கருதும் வகையில் நடந்து கொண்டுள்ளது.

கண்டிப்பாக இது தேர்தலில் எதிரொலிக்கும். பாஜக விரித்த வலையில் திமுக சிக்கிக்கொண்டது என்றே கூற வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ள நிலையில் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் வரை இந்த தீர்ப்பை உறுதிப்படுத்த பாஜக அனைத்துவேலைகளையும் செய்யும். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இந்த தீர்ப்பையும், இதன் விளைவுகள் குறித்தும் மத்திய உளவுத்துறை மூலம் அறிக்கை பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்துக்கள், குறிப்பாக பெண்கள் திமுகவிற்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர் என கிடைத்துள்ள அறிக்கை பாஜக மேலிடத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக்கிவிட்டதாம். இந்த பிரச்சினையை தேர்தல்வரை ஊதி பெரிதாக்கி திமுகவிற்கு இந்துக்கள் ஓட்ட கிடைக்காத வகையில் தடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். இதற்கு திமுக மேலிடமே வழிவகை செய்துவிடும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்…..