அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் போன்று போலி கையெழுத்து, முத்திரையை பயன்படுத்தி பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன உத்தரவையும் கொடுத்து பல லட்சம் ருபாய் சுருட்டிய 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலின் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளி யார்? பல்கலை அதிகாரிகளுக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் மாவட்ட ஆட்சி தலைவரின் வீட்டின் எதிரே அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு வந்த 2 பேர் தங்களுக்கு கோணம் பொறியியல் கல்லூரியில் பணியில் சேர்வதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நியமன உத்தரவு வந்துள்ளதாகவும், கல்லூரியில் நிர்வாக பிரிவு மற்றும் லேப் டெக்னீசியன் வேலையில் சேருவதற்கான பனி உத்தரவு எனவும் கூறி பணி நியமனத்திற்கான உத்தரவுகளை காட்டினார். சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் லீவில் இருந்ததால் கடந்த திங்கட்கிழமையன்று கல்லூரிக்கு வந்து முதல்வரை சந்திக்கும்படி முதல்வரின் உதவியாளர் கூறினார்.
இருவரும் மீண்டும் திங்கட்கிழமையன்று பணியில் சேர முதல்வரை சந்திக்க சென்றபோது சந்தேகம் அடைந்த முதல்வர் பணிநியமன உத்தரவை பரிசோதித்து பார்த்தார். அப்போதுதான் பணி நியமன உத்தரவு போலியான முத்திரைகளுடன் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலை கழகத்தின் சார்பில் நாகர்கோயில் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து போலி நியமன உத்தரவை கொண்டு வந்த கன்னியாகுமரி மாவட்டம் லாயம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், தர்சன் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர்களிடம் அண்ணா பல்கலை கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என கூறி ஒரு கும்பல் போலியான பணிநியமன ஆணையை கொடுத்துவிட்டு இதற்காக பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் போலி முத்திரைகள் மற்றும் பல்கலை கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரின் கையெழுத்தையும் போலியாக தயாரித்து போலி பணி நியமன உத்தரவை கொடுத்தனுப்பியது தெரியவந்தது.
அண்ணா பல்கலை கல்லூரியில் போலி பணி நியமன உத்தரவின் மூலம் வேலையில் சேர வந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இவர்களை மோசடி செய்த கும்பலையும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மோசடி கும்பலை தேடி வந்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி விழுப்புரம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 5 வது குறுக்கு வீதி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார், சஞ்சிவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த மக்தூம் இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில், திண்டிவனம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாபு ஆகியோரை கைது செய்தனர். இந்த கும்பல்தான் போலியான பணி உத்தரவை தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் இந்த கும்பலிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர், போலி பணி நியமன ஆணைகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோணம் அரசு பொறியியல் கல்லூரியின் போலி முத்திரைகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
இந்த மோசடி கும்பலின் பின்னணியில் வேறு சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காரணம் அண்ணா பல்கலை கழக முத்திரைகள், கோணம் அரசு பொறியியற் கல்லூரி முத்திரைகளை இவர்கள் போலியாக தயாரித்து போலி நியமன உத்தரவை தயாரிக்க பயன்படுத்தி உள்ளனர். இந்த முத்திரைகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? இந்த மோசடியில் அண்ணா பல்கலை கழக அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்காக தேடி அலையும் இளம் வாலிபர்களை குறிவைத்து இந்த கும்பல் பல லட்சம் பணம் பெற்று போலி நியமன உத்தரவுகளை தயாரித்து கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் கைவரிசை காட்டியுள்ளனர். இவர்களிடம் இருந்து போலி உத்தரவை பெற்று வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்களா? என் பல்வேறு கூடங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.