நீதிமன்ற விசாரணையில் பொறுப்பு டிஜிபி வழக்கு: தப்புமா படைத்தலைவர் பதவி: பரபரக்கும் தமிழ்நாடு காவல்துறை
தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகளும், உயர்நீதி மன்றத்தில் 2 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதால் இவரது நியமனம் நீடிக்குமா? புதிய டிஜிபியை நியமிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் அரசு என்ன செய்ய காத்திருக்கிறது என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.

டிஜிபி பதவியேற்பு நிகழ்ச்சியில் சீனியர் டிஜிபிக்கள் புறக்கணித்துவிட்டு நிலையில் சீனியர் டிஜிபிக்களை ஜூனியர் டிஜிபி வெங்கட்ராமன் நேரில் சென்று வாழ்த்துக்களை பெற்றும், ஆசிபெற்றும் வருவது காவல் அதிகாரிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பு வகிக்கும் டிஜிபி பதவியில் இருந்து சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில் புதிய டிஜிபியை நியமிப்பதற்கான பேனலை கூட மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு 3 மாதத்திற்கு முன்பு அனுப்பி வைக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்தி நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பதவி நீடிப்பு, டிஜிபியை ராஜினாமா செய்ய வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங்கை புதிய டிஜிபியாக நியமிக்க முயற்சி என பல்வேறு முயற்சிகளையும் எடுத்து தோல்வியடைந்த முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கடைசியாக எடுத்த ஆயுதம்தான் பொறுப்பு டிஜிபியை நியமிப்பது.
பொறுப்பு டிஜிபியை நியமித்துவிட்டால் தங்கள் இஷ்டம்போல காவல்துறையில் எந்த வேலையையும் தாங்கள் நினைத்தபடி செயல்படுத்த முடியும் என திட்டம் வகுத்து ஜனவரி மாதம் ஓய்வுபெறும் அபய்குமார் சிங்கை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க காய் நகர்த்த தொடங்கினர். ஆனால் ஓய்வுபெறும் முன்பு எந்த சர்ச்சையில் சிக்க விரும்பாத டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபி பதவியை ஏற்க மறுத்துவிட்டார். கடைசியாக தலைமையிட டிஜிபி வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபி பதவி ஏற்கும்படி இந்த அதிகாரிகள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
முதலில் பொறுப்பு டிஜிபி பதவியை ஏற்கமுடியாது என டிஜிபி வெங்கட்ராமன் மறுத்துவிட்டார். காரணம் டிஜிபி சீனியாரிட்டியில் 9-வது இடத்தில் இருக்கும் தான் டிஜிபி பொறுப்புக்கு வந்தால் சீனியர் டிஜிபிக்கள் கண்டிப்பாக மறைமுகமாக எதிர்ப்பு கொடுப்பதோடு தனக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என கூறி பதவியை ஏற்க மறுத்தார். ஆனால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், முதல்வர் அனுமதியை பெற்று விட்டதாகவும் கூறி டிஜிபி வெங்கட்ராமனை அரைகுறை மனதோடு சம்மதிக்க வைத்தனர்.
எதிர்பாராதவிதமாக டிஜிபி வெங்கட்ராமன் பதவி ஏற்பு விழாவை ஒட்டு மொத்தமாக சீமா அகர்வால், சந்திப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட 8 டிஜிபிக்களும் பங்கேற்காமல் புறக்கணித்து காவல்துறைக்கு மட்டுமின்றி பொறுப்பு டிஜிபியை நியமிக்க செய்த முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கும் பெரிய ஷாக் டிரீட்மென்ட் கொடுத்து விட்டனர்.
சீனியர் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்த செய்திதான் பெரியதாக சமூக ஊடகங்களில் பரவியதால் டிஜிபி வெங்கட்ராமன் மிகவும் தர்மசங்கடத்திற்கு ஆளானார். தான் வேண்டாம் என கூறியும் வலுக்கட்டாயமாக இப்பொறுப்பில் உட்கார வைத்து தன்னை இப்படி அசிங்கப்படுத்திவிட்டனரே என தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார். வழக்கமாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டாலும் உளவுத்துறை டிஜிபி பதவியுடன் சேர்த்து வழங்குவது வழக்கம்.
காரணம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என முன்கூட்டியே உளவுத்துறை கொடுக்கும் அறிக்கை அடிப்படையில்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கு டிஜிபி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் டிஜிபிக்கு அடுத்து மிகவும் சென்சிடிவ் பதவியாக கருதப்படும் உளவுத்துறை டிஜிபி பதவியை கொடுக்காமல் நிர்வாக பிரிவு டிஜிபி பதவியுடன், கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை கொடுத்து இந்த பதவியை டம்மியாக்கிவிட்டதாக சக அதிகாரிகளே கிண்டலாக கூறும் நிலைமையை உருவாக்கிவிட்டனர்.
இதனால் வெறுமனே சட்டம் ஒழுங்கு தொடர்பாக அனுப்பப்படும் பைல்களை மட்டும் பார்த்து அனுப்பும் வேலையை பார்த்து வருகிறாராம். தன்னுடைய பொறுப்பு டிஜிபி பதவி சீனியர் டிஜிபிக்களை மிகவும் வேதனைக்கு உருவாக்கிவிட்டது டிஜிபி வெங்கட்ராமனுக்கும் மிகுந்த வேதனையை உருவாக்கிவிட்டதாம்.
காரணம் இதனை ஆண்டுகால சர்வீஸில் எந்த அதிகாரியிடமும் மோதல் போக்கை கடைபிடிக்காதவர் டிஜிபி வெங்கட்ராமன். சிபிஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியபோதும் சக அதிகாரிகளுடன் மிகவும் நல்லிணக்கத்துடன் நடந்துகொள்பவர் என பெயர் பெற்றவர். பொறுப்பு பதவியால் சீனியர் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக பகைத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டதே என கருதியவர் ஈகோ பார்க்காமல் செய்த காரியம்தான் காவல்துறையில் தபோது ஹாட் டாபிக்காகவும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டது.
சட்டம் ஒழுங்கு பதவிதான் காவல்துறையில் உயர்ந்த பதவி. இப்பதவியில் இருப்பவர்களை பார்க்க சக டிஜிபிக்களாக இருந்தாலும் அனுமதி கேட்டு சந்திக்க செல்வது வழக்கம். தற்போதைய மோதல் போக்கில் சீனியர் அதிகாரிகள் 8 பேருமே வெங்கட்ராமனை புறக்கணித்துவிட்டதால் தன்னைவிட சீனியர் அதிகாரிகளை தானே நேரில் சென்று சந்தித்து ஆசிபெறுவதுடன், நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கி தான் எந்த வகையிலும் இந்த பதவியை விரும்பி ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டேன் என கூறிவிட்டு தான் பதவியில் இருக்கும் நாள் வரையில் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்க முடிவெடுத்தார்.
இதன்படி சீனியரிட்டி பட்டியலில் முதல் 8 இடங்களிலும் இருக்கும் டிஜிபிக்களை அவர்களது அலுவலகத்திற்கே சென்று சந்திக்க முடிவெடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் டிஜிபியை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை நடந்து முடிந்தது. டிஜிபி பொறுப்பில் இருக்கு வெங்கட்ராமன் நேரில் வந்து இந்த அதிகாரியை சந்தித்தது குறித்து வெளியான தகவல் சக அதிகாரிகள் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது. டிஜிபி பதவியில் தானே இருக்கிறோம். சீனியர் அதிகாரிகளாக இருந்தாலும் ப்ரோடோகால் படி தன்னை இந்த அதிகாரிகள்தான் வந்து சந்திக்க வேண்டும் என பிடிவாதம் காட்டாமல் தானே நேரில் சென்று சந்தித்துதான் காவல்துறையில் ஹாட் டாபிக்காகி விட்டது.
இந்த சூழ்நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யாசர் அராபத், மக்கள் கண்காணிப்பாக தலைவர் ஹென்றி டிபேன் ஆகியோர் தொடுத்த மனு அடிப்படையில் விளக்கம் அளிக்க கோரி மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும், தமிழக அரசுக்கும் நீதிமன்றம் விளக்க நோட்டீஸ் அளித்துள்ளது. இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வரதராஜு என்பவர் உள்ளிட்ட 2 பேர் தாக்கல் செய்த மனுக்கள் வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்த போதே பொறுப்பு டிஜிபியை நியமித்தால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எதுக்கு என மனுதாரருக்கு உறுதி அளித்திருந்தது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை மீறி பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ளதால் கண்டிப்பாக உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அதிரடி உத்தரவை பிறப்பிக்கும். இதனால் பொறுப்பு டிஜிபி பதவி எத்தனை நாள் நீதிக்கு என்று கூற முடியாத சூழ்நிலை தற்போது உள்ளது.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கண்காணிக்க மாநகர ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்களுக்கு எந்த உத்தரவு பிறப்பிப்பது என்ற தர்ம சங்கடம் பொறுப்பு டிஜிபிக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல கீழே பணியாற்றும் அதிகாரிகளும் இவர் எத்தனை நாள்தான் இந்த பதவியில் இருப்பாரோ என்றே எண்ணம் இருப்பதால் இவரது உத்தரவிற்கு அடிபணிந்து நடவடிக்கைகள் எடுப்பதா என்ற தயக்கமும் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பொறுப்பை ஏற்ற அதிகரிக்கும், பணியாற்றும் அதிகாரிகளுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி குளிர்காயும் இந்த முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் தங்களது சுயநலத்திற்காக நேர்மையான, திறமையான அதிகாரியை நியமித்து சிக்கலை ஏற்படுத்திவிட்டனரே என்ற கோபம் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடையே உருவாக்கி உள்ளது. காவல்துறையில் 2 பிரிவாக பிரிந்து நிற்கும் நிலையை உருவாக்கிய இந்த அதிகாரிகளால் சிக்கப்போவது மக்கள்தான்…