தமிழக காவல்துறையில் நேரடி சப் – இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெறும் காலத்திலாவது எஸ்பியாக பதவியில் அமரும் வாய்ப்பு உருவானது. ஆனால் உயர் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் சக அதிகாரிகளின் போட்டியால் கைக்கு எட்டிய பதவி பறி போகும் ஆபத்தில் இருப்பதாக கூடுதல் எஸ்.பி.க்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

ஒவ்வொரு அரசுத்துறையிலும் பணியில் சேரும் அரசு ஊழியர் சரியான நேரத்தில் பதவி உயர்வு கிடைத்து பதவி ஓய்வு பெற வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மற்ற அரசுப் பணிகளைவிட காவல்துறை பணியானது மிகவும் சவாலானது. ஆண்டான் அடிமை என்பதைப் போல தங்களுக்கு கீழே பணியாற்றும் காவல்துறையினரை அடிமைகளாக கருதும் மனோபாவம் பெரும்பாலான காவல்துறை அதிகாரிகளுக்கு மிக அதிகம்.

காவலராக பணியில் சேருபவரும் தன்னைப்போல சீருடை அணிந்தவர்தான் என்ற எண்ணம் இல்லாமல் அடிமையாகவே கருதுவது… சற்று தன்மானத்துடன், நேர்மையாக பணியாற்ற நினைத்தால் பழிவாங்கும் குணம் பெரும்பாலான அதிகாரிகளுக்கு உண்டு. இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் தமிழக காவல்துறையில் இளநிலை பட்டம் முதல் முதுநிலை பட்டம், இன்ஜினியரிங் பட்டம் பெற்றும்கூட அரசுப்பணி, சீருடை மீதான காதலால் காக்கித்துறையில் கால் பதிக்கவே பெரும்பாலும் விரும்புகின்றனர்.
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த நேரடி எஸ்.ஐ நியமன தேர்வில் பங்கேற்று 500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 300 பேர் சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி கல்லூரியிலும், 200 பேர் வீராபுரம் பயிற்சி பள்ளியிலும் பணியில் சேர்ந்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சப்- இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி பின்னர் இன்ஸ்பெக்டர்களாகவும், தொடர்ந்து டிஎஸ்பி-க்கள், கூடுதல் எஸ்.பி.க்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் அதிரடிப்படையில் சேர்ந்து, வீரப்பன் எண்கவுன்டரில் பணியாற்றி இரட்டை பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை உள்ளிட்ட 37 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெறுவதற்கான சீனியாரிட்டி பட்டியலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஜிபி அலுவலகம் வெளியிட்டது.
பொதுவாக சப்இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்தவர்களில் இத்தனை பேருக்கு எஸ்பி பதவிக்கான சீனியாரிட்டி பெறுவது மிகவும் அரிது. ஒருசிலர் மட்டுமே எஸ்.பி.க்களாக ஓய்வுபெறும் மாதத்தில் பதவி உயர்வு கொடுத்து ஓய்வு பெறச்செய்வதே வழக்கம். மாவட்ட எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்குவதில் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதல் உரிமையும், குரூப் 1 தேர்வு மூலம் நேரடி டிஎஸ்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இரண்டாவது முன்னுரிமையும், படிப்படியாக சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்து கூடுதல் எஸ்.பி.க்களாக பணியாற்றுபவர்களுக்கு கடைசி சீனியாரிட்டி வழங்கப்படுவது வழக்கம்.

இதேபோல கடந்த ஜனவரி மாதம் எஸ்பி பதவி உயர்வு வழங்கப்பட்டதில் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளும், குரூப் 1 அதிகாரிகளும் எஸ்பி அந்தஸ்து பெற்றனர். ஆனால் 1996 பேட்ஜ் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது கூடுதல் எஸ்பிக்களாக கிட்டத்தட்ட 3 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள இந்த கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி. காலிப்பணியிடம் மற்றும் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட எஸ்.பி. பணியிடங்களில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதினர்.
சட்டசபை கூட்டம் முடிந்து பதவி உயர்வு கிடைக்கும் என உயர் அதிகாரிகளும், உள்துறை அதிகாரிகளும் கூறியிருந்த நிலையில் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு பெற்று தற்போது கூடுதல் எஸ்பி.க்களாக பணியாற்றும் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 1996 பேட்ஜ் கூடுதல் எஸ்.பி.க்களுக்கு தற்காலிக பேனல் போட்டு எஸ்பி பதவி உயர்வு வழங்குவது தவறு என தொடர்ந்த வழக்கில் “ஸ்டே” வழங்கப்பட்டதால் பதவி உயர்வு பெற முடியாமல் போய்விட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பேனல் போட்டுதான் பதவி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால் சப்– இன்ஸ் பெக்டர்களாக சேர்ந்தவர்கள் அதிகமாக எஸ்பி-க்களாக நியமிக்கப்பட்டால் தங்கள் பதவி உயர்வு தாமதப்படுமே என கருதி குரூப் 1 அதிகாரிகள் குறுக்கு வழியில் காரணம் கூறி பதவி உயர்வுக்கு தடை பெற்றதால் எஸ்.பி.யாக பதவி உயர்வுபெற தகுதி இருந்தும் இம்மாதம் பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற உள்ளாராம் தூத்துக்குடி காவலர் பயிற்சிப்பள்ளி முதல்வர் உன்னிகிருஷ்ணன்.
இவரைப்போலவே பல கூடுதல் எஸ்.பி.க்கள் ஓய்வு வயதை நெருங்கிய நிலையில் தங்களது எஸ்பி பதவி உயர்வு கனவாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே 18 கூடுதல் எஸ்.பி.க்கள் எஸ்.பி. பதவி உயர்வு பெறலாம் என்ற நிலையில் 10 எஸ்.பிக்கள் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது.
இதைத்தவிர சமீபத்தில் முதல்வர் சட்டசபையில் சமூக ஊடகங்கள் கண்காணிப்பு பிரிவு எஸ்.பி. பதவி புதிதாக உருவாக்கப்படும் என அறிவித்தார். இது தவிர கூடுதலாக 3 எஸ்பி பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 14-ல் குரூப் 1 அதிகாரிகள் 2 பேர் மற்றும் நேரடி ஐபிஎஸ் சேர்ந்து பயிற்றியில் உள்ள 4 பேர் என 6 பணியிடங்கள் போக 8 பணியிடங்களில் 1996 பேட்ஜ் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக சேர்ந்த கூடுதல் எஸ்பிக்கள் எஸ்பி-க்களாக பதவி உயர்வு பெற சான்ஸ் உண்டு.
இதுவும் வரும் ஜூன் மாதம் ஐகோர்ட் வழங்கும் தீர்ப்பை ஒட்டியே எஸ்.பி. வாய்ப்பு கிடைக்குமா? என்ற நிலை உள்ளது. நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜூலை மாதம்தான் பயிற்சி நிறைவு பெறும் என்பதால் ஆகஸ்ட் மாதத்திலாவது தங்கள் எஸ்.பி. கனவு நிறைவேறுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் சீனியாரிட்டில் முதல் 8 இடத்தில் உள்ள கூடுதல் எஸ்.பி.க்கள்.
சிவ.செல்லையா