பாமக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 17-ம் தேதி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூட்டியுள்ள நிலையில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என உறுப்பினர்களை அன்புமணி வற்புறுத்தி வருவதால் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. கட்சி யாரிடம் உள்ளது என்பதை இந்த பொதுக்குழு தீர்மானிக்கும்.

கடந்த சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என்பதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசுக்கு இடையே மோதல் உருவானது. இந்த மோதல் சித்திரை மாத முழுநிலவு கூட்டத்தில் வெடித்தது. இதன்பின்னர் அன்புமணியின் பதவிகளை பறிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட, ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்களை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தந்தையின் பக்கம் சேருவதா? மகன் பக்கம் போவதா என்ற குழப்பத்தில் பா.ம.க. நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தவித்து வருகின்றனர். இந்த கூட்டணி குழப்பத்திற்கு திமுகதான் காரணம். கட்சியை இரண்டாக உடைக்க திமுக சதி செய்வதாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் வீட்டில் உள்ள தனது அறையின் சோபாவிற்கு அடியில் நவீன ஒட்டு கேட்கும் நவீன கருவி பொறுத்தப்பட்டிருப்பதை டாக்டர் ராமதாஸ் கண்டுபிடித்தார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த ஒட்டுக்கேட்பு கருவியை பொருந்தியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இந்த கருவியை தன்னுடைய மகன் அன்புமணிதான் பொறுத்தியுள்ளதாக டாக்டர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி கடந்தவாரம் பேட்டியளித்தார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அன்புமணி ராமதாஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் கடந்த ஜூலை 25ம் தேதி முதல் உரிமை மீட்பு போராட்டம் என்ற நடைப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்ட நடை பயணம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நடைபயணத்தை அன்புமணி தொடங்கியதுமே நடைபயணத்திற்கு தடை விதிக்கும்படி ராமதாஸ் தரப்பில் டிஜிபி அலுவலத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடைபயனத்திற்கு தடை விதிக்க டிஜிபி அலுவலகம் மறுத்துவிட்டது. நடைபயணத்தில் தன்னுடைய கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்த கூடாது என ராமதாஸ் விடுத்த எச்சரிக்கையை மீறி அன்புமணி கொடியையும், பெயரையும் பயன்படுத்தி வருகிறார். மோதலின் உச்சக்கட்டத்திற்கு இருவரும் சென்றுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதியன்று பாட்டனூரில் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதத்தை தானே எழுதி அனுப்பி வருகிறார்.
பாமக தலைவராக தற்போதும் அன்புமணியை இருந்து வருகிறார். அவரை நீக்க டாக்டர் ராமதாஸிற்கு அதிகாரம் இல்லை என அன்புமணி தரப்பு கூறி வருவதால் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அவரை பதவி நீக்க செய்ய ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். ஆனால் பொதுக்குழுவிற்கு செல்லக் கூடாது என அன்புமணி தரப்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் பொதுக்குழுவிற்கு செல்வதா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் பாமக நிர்வாகிகள் முதல், தொண்டர்கள் வரை தவித்து வருகின்றனர். தந்தை, மகன் மோதலில் சிக்கி தவிப்பது இவர்கள்தான். டாக்டர் ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்தில் போதுமான உறுப்பினர்களை கலந்துகொள்ள விடாமல் தடுத்துவிட்டால் கட்சி தன்னிடம்தான் உள்ளது என்பதை அன்புமணியால் எளிதாக நிரூபித்து விட முடியும். எனவே பொதுக்குழுவை பிசுபிசுக்க வைக்க தன்னாலான அண்டர் கிரௌண்ட் வேலைகளை அன்புமணி செய்து வருவதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களது மோதல்களால் கட்சி முற்றிலும் முடங்கிப்போய்விட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது நேரடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் பாமகவில் ஏற்பட்டுள்ள மோதல்களால் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பாமக கட்சியுடன் கூட்டணி சேர தயங்கும். இதனால் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் பலத்த சரிவை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்து வரும் நிலையில் வரும் தேர்தலிலும் சரிவை சந்திக்க நேர்ந்தால் தமிழகத்தில் பாமக உடன் கூட்டணி சேர எந்த பிரதான கட்சியும் முன்வராது. கூட்டணியில் சேர்த்தாலும் குறைந்த சீட்டுகளையே வழங்கும். இதனால் கட்சி முற்றிலும் சீர்குலைந்துவிடும். எந்த நோக்கத்தில் இந்த கட்சியை டாக்டர் ராமதாஸ் தொடங்கி பல வெற்றிகளை பெற்றாரோ அது அவர் கண் முன்பாகவே முடிவை நோக்கி செல்கிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.