அதிரடி அரசியலில் மீண்டும் விஜய்: நிர்வாக குழுவில் முக்கிய நபர் “மிஸ்ஸிங்”

182

கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதி காத்துவந்த த.வெ.க தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறியதோடு கட்சிப்பணிகளை முடுக்கிவிட புதிய நிர்வாக குழுவை அதிரடியாக நியமித்துள்ளார். இந்த குழுவில் விஜய்க்கு நெருக்கமான நபர் பெயர் விடுபட்டிருப்பது கட்சி பிரமுகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேச த.வெ.க தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய சூறாவளி சுற்றுப்பயணம் கரூர் உயிர்பலி சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒருமாதமாக முடங்கிப்போனது. 41 உயிர்கள் தன்னால் பறிபோய்விட்டது என்ற குற்ற உணர்வில் விஜய் முடங்கிப்போய்விட்டதாக கட்சி முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சென்று சந்திக்க ஆசைப்பட்டு காவல்துறை மூலம் ஆளும்கட்சி அனுமதி தர மறுக்கவே வேறு வழியின்றி பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அருகே மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வரவழைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க சென்னைக்கு அழைத்த தகவல் வந்ததும் எக்காரணம் கொண்டும் விஜய்யை சந்திக்க சென்னை செல்லக்கூடாது. அவரை சந்திக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என பாதிக்கப்பட்டவர்களை பேட்டி அளித்து விஜய்க்கு கடும் அதிர்ச்சி அளிக்க ஆளும்கட்சி வி.ஐ.பி. பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதையும் மீறி 33 குடும்பங்கள் விஜய்யை சந்திக்க வந்தது ஆளும்கட்சிக்கு பெரும் அதிர்ச்சிதான்.

தன்னை சந்திக்க வந்தவர்களிடம் தனித்தனியாக ஒரு மணி நேரத்திற்குமேல் பேசியதுடன் கண்ணீர்விட்டு அழுததை பார்த்த பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் விஜய்யை ஆறுதல்படுத்தியதோடு, எப்போதும் உங்களுடன் இருப்போம் என உறுதியளித்துள்ளனர். இருப்பினும் விஜய் மிகவும் மனமுடைந்துபோய் இருப்பதாக அவரை நேரில் சந்தித்தவர்கள் கூறியது கட்சி நிர்வாகிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கிடையே தன்னை சந்தித்தவர்களிடையே கட்சி நடத்துவதை விட மீண்டும் நற்பணி மன்றம்போல நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தால் வெறுத்துப்போன விஜய் கட்சியை கலைக்கப்போவதாக தீபோல செய்தி பரவியது. இந்த தகவல் உண்மையா? பொய்யா என்பதை அறிந்துகொள்ள முடியாமல் தொண்டர்கள் திணறித்தான் போனார்கள்.. ஆனால் மாலையில் விஜய் பெயரில் வெளியான நிர்வாகிகள் பட்டியல் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தமிழக வெற்றி கழகத்தின் அன்றாட பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிதாக நிர்வாக குழு நியமிக்கப்படுகிறது. தனது வழிகாட்டுதல்படி இயங்கும் இந்த புதிய நிர்வாக குழுவிற்கு கட்சி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிக்கையில் விஜய் கூறியிருந்தார்.

இதன்படி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன், கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், துணை பொது செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 28 நிர்வாகிகள் இந்த புதிய நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் இனி விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை சரியாக ஒருங்கிணைப்பதோடு, இனி அடுத்தடுத்து ஆளும்கட்சிக்கு எதிராக விஜய் அறிவிக்கும் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த இந்த நிர்வாக குழு வழிநடத்தும் எனவும் தெரிகிறது.

கட்சியை கலைக்கப்போவதாக வெளியான தகவல் பற்றி விசாரித்தபோது வழக்கம்போல ஆளும்கட்சியின் முக்கிய வாரிசு தான் நடத்தும் தனியார் நிறுவனம் மூலம் சமூக வலைதளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பொய் செய்தியை பரப்பி விட்டது தெரிய வந்தது. இதுபற்றி விஜய் கவனத்திற்கும் தகவல் கொண்டுசெல்லப்பட்டதாம். எதைப்பற்றியும் கவலைப்படாமல் கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வேணும்.

தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் முறையான ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாததால்தான் இதுபோன்ற குழப்பங்களும், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கிறது. ஆளும்கட்சிக்கு எதிராக இனி தான் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், நிகழ்ச்சிகளில் எந்த அசம்பாவித சம்பவங்களோ, குளறுபடிகளோ, பிரச்சினைகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம்.

அதே நேரம் இந்த குழுவில் விஜய்யுடன் இருக்கும் முக்கிய பிரமுகர் பெயர் விடுபட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு ஆலோசனை கூறும் குழுவில் இருந்த இந்த பிரமுகர் நிர்வாக குழுவில் இடம்பெறாதது ஏன்? என விசாரித்தபோது, இந்த முக்கிய பிரமுகர் நடவடிக்கைகள் சமீபகாலமாக சரியில்லை. ஆளும்கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக மாறி கட்சியின் தலைவர் விஜய் எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் ஆளும்கட்சிக்கு உடனுக்குடன் செல்வதற்கு இந்த பிரமுகர் காரணம். இவர் சமீபத்தில் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் குறித்த முக்கிய ஆவணங்களும் விஜய் கைக்கு சென்றதும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆளும்கட்சி இந்த பிரமுகருக்கு பெரும் விலை கொடுத்து வாங்கி தன்னுடைய நடவடிக்கைகளை தினமும் அறிந்து கொள்வது தெரிய வந்ததால் இந்த குழுவில் சேர்க்கப்படவில்லை என்கின்றனர் முக்கிய நிர்வாகிகள். இந்த நிர்வாகி குறித்து தனக்கு வேண்டப்பட்ட முக்கிய அதிகாரிகள் மூலம் ரகசிய அறிக்கை பெற்றதால் விஜய் இந்த அதிரடியில் இறங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தான் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பல லட்சம் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும்போது அதை சரியாக வழிநடத்த அனுபவம் மிக்க தலைவர் இல்லை என்பதை விஜய் இப்போது உணர்ந்துள்ளார். இதனால்தான் தனக்கு நெருக்கமானவர்கள் தலைமையில் இந்த நிர்வாக குழுவை விஜய் அமைந்துள்ளதாக தெரிகிறது. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக தகவல் பரப்பிய ஆளும்கட்சி வட்டாரம் விஜய் அமைத்துள்ள இந்த நிர்வாக குழுவின் அறிக்கையால் மிகவும் அதிர்ச்சியாகிவிட்டதாம்.

மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட இந்த அறிக்கையை எதிர்பாராத நேரத்தில் விஜய் வெளியிட்டு மீண்டும் அரசியல் களத்தில் முழுமூச்சாக ஈடுபடுவதை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இனி ஆளும்கட்சியின் திட்டம் என்பதையும் அறிந்து அதற்கேற்றாற்போல காய் நகர்த்தவும் விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஆளும்கட்சியை இந்த தேர்தலில் கண்டிப்பாக தோற்கடித்த ஆகவேண்டும்.

இதற்கு தன்னுடைய பிரசாரம், பொதுமக்களுடனான சந்திப்பு எப்படி இருக்கவேண்டும் என முக்கிய பிரமுகர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். இதன்படியே கட்சி அலுவலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக குழு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். விஜய் இந்த சம்பவத்திற்கு பிறகு முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபடுவது சந்தேகம் என கருதிய மேலிடம் முழுமூச்சுடன் தங்களுக்கு எதிராக விஜய் திரும்புவதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளதாம். இன்னும் பல அதிர்ச்சியை ஆளும்கட்சிக்கு கொடுக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.