விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாரா டிஜிபி? ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பரபரப்பு

161

உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நெருக்கடி காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் விருப்ப ஓய்வு கடிதம் அனுப்பியதாகவும், டிஜிபியே பணி நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் விருப்ப ஓய்வு கொடுத்ததாக தகவல் வெளியானால் அரசுக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என கருதி கட்டாயப்படுத்தி நீண்ட விடுமுறையில் செல்லும்படி நிர்பந்திக்கப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமின்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையேயும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றாலும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் . அதிகாரிகளைத்தான் முதல்வராக பொறுப்பேற்பவர் முதன் முதலாக நியமிப்பது வழக்கம். குறிப்பாக தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர், முதல்வரின் செயலாளர், உளவுத்துறை உயர் அதிகாரி ஆகிய பதவிகளுக்கான உத்தரவுதான் ஆட்சிப்பொறுப்பேற்றதுமே முதல்வர் கையெழுத்திடும் முதல் உத்தரவாக இருக்கும். இந்த அதிகாரிகள் தங்கள் ஆட்சியை செம்மையாக நடத்த உதவுவார்கள் என்பதால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆதரவுடன் இந்த அதிகாரிகள் நியமனம் நடக்கும். இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகளில் ஒரு சிலர் முதல்வர் அல்லது முதல்வருக்கு நெருக்கமானவராக, குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள்தான் எப்போதும் முதல்வருடன் இருப்பதால் மற்ற அதிகாரிகளைவிட சர்வ அதிகாரம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். இவர்கள்தான் மற்ற அதிகாரிகளை வழிநடத்தி செல்வர். அதே நேரம் முதல்வர் பொறுப்பில் இருப்பவர் ஒட்டுமொத்தமாக இந்த அதிகாரிகளை மட்டுமே நம்பியிருக்காமல் உளவுத்துறையில் அனுபவம் வாய்ந்த அதிகாரி மூலம் எல்லா அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து தனது பெயரை தவறாக பயன்படுத்துகின்றனரா என்பதை விசாரித்து தவறாக பயன்படுத்தினால் எந்த யோசனையும் இல்லாமல் அந்த அதிகாரியை டம்மி பதவிக்கு தூக்கியடிப்பதும் உண்டு. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இடத்தில் இருந்தார்.

எந்த உயர் பதவியில் இருந்தாலும், மூத்த அமைச்சராக இருந்தாலும் உளவுத்துறை மூலம் அறிக்கை கிடைத்ததும் அடுத்த நிமிடமே டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்படுவர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் சில மாதங்கள் கழித்து அந்த அதிகாரியை மீண்டும் வேறுபதவியை கொடுத்து கைக்குள் வைத்துக்கொள்வார் . முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதுமே தலைமை செயலாளராக இறையன்புவையும், டிஜிபியாக ஒரு மாதத்திற்கு பிறகு சைலேந்திரபாபுவையும் நியமித்தார். உளவுத்துறைக்கு டேவிட்ஸன் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். முதல்வரின் செயலலாளராக உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகளில் ஒருசிலர் மட்டும் கூட்டணி சேர்ந்து மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்ததோடு வேறு எந்த அதிகாரியும் முதல்வரை நெருங்கவிடாமல் செய்துவிட்டனர்.

இதில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரியும் ஒருவர். உளவுத்துறைக்கு ஐ.ஜி. செந்தில்வேலன் நியமிக்கப்பட்ட பிறகு இந்த கூட்டணி மேலும் பலம் பெற்றது. ஒட்டுமொத்தமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நியமனங்களில் முதல்வர், துணை முதல்வரின் விருப்பதைவிட இவர்கள் நினைத்தால் மட்டுமே எந்த அதிகாரியும் முக்கிய பதவிக்கு வரமுடியும். தாங்கள் நினைத்தால் எந்த அதிகாரியையும் டம்மி பதவியில் தூக்கியடிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் முதல்வரின் உதவியாளர்தான் காட் பாதர் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

இந்த அதிகார மையம்தான் நிரந்தர டிஜிபியை நியமிக்காதது மற்றும் கரூர் விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடி, திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது என பல்வேறு நிர்வாக குளறுபடிகளும் காரணம் என்கின்றனர். இந்த அதிகார மையத்தினர்தான் நிரந்தர டிஜிபிக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக டிஜிபி அந்தஸ்தில் 9-வது இடத்தில் இருந்த வெங்கட்ராமனை நியமித்தனர். இந்த பதவிக்கு வர வெங்கட்ராமன் மிகவும் தயக்கம் காட்டினார்.

காரணம் காவல்துறையில் மிகவும் நேர்மையான அதிகாரிகள் என குறிப்பிடுவதில் முதல் இடத்தில் இருப்பவர் வெங்கட்ராமன் என்கின்றனர் டிஜிபி அலுவலக அதிகாரிகள். சட்டம் ஒழுங்கு பதவிகளில் இவருக்கு அதிக அனுபவம் இல்லாவிட்டாலும் சிபிஐ, லஞ்ச ஒழிப்பு துறை உள்ளிட்ட பதவிகளிலும், நிர்வாக பிரிவு பதவியிலும் மிகவும் நேர்மையாக நடப்பவர். டிஜிபி அந்தஸ்து கிடைத்தபோதும் சரி, கிடைக்கும் முன்பாகவும் தனது வீட்டிற்கு எந்த காவலரையும் பணியில் அமர்த்தி வீட்டு வேலை, சமையல் வேலை, காய்கறிகள் வாங்கும் வேலை, தோட்ட வேலை, குழந்தைகள், குடும்பத்தினரை வெளியே அழைத்துச்செல்வது, நாயை வாக்கிங் கூட்டி செல்வது உள்ளிட்ட எந்த பணிக்கும் பயன்படுத்தாத அதிகாரி இவர்.

மிகவும் சட்ட நுணுக்கம் தெரிந்தவர் என்றும், எந்த சட்ட பிரச்சினையாக இருந்தாலும் தானே டிராப்ட் தயார் செய்து பதில் அளிக்கும் திறமை உள்ளவராம். அதேநேரம் மிகவும் சிம்பிள் அதிகாரியாம். எந்த உயர் அதிகாரியின் நிர்ப்பந்தத்திற்கும் அடிபணிய மாட்டார். சட்டப்படி மட்டுமே செயல்படுபவர். இவரை பொறுப்பு டிஜிபியாக்கிவிட்டு இவருக்கு கீழே பணியாற்றும் 3 சீனியர் அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல செயல்பட்டது மட்டுமின்றி, பதவி நியமனம் உள்ளிட்டவைகளில் புகுந்து விளையாடி விட்டனராம்.

இவர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தில் இவரது ஒப்புதல் இல்லாமலேயே ஒருநபர் ஆணையம், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததோடு, விஜய்தான் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ரீதியில் வருவாய் துறை செயலாளர் அமுதா, கூடுதல் டிஜிபி டேவிட்ஸன் ஆகியோர் அளித்த பேட்டிதான் உச்சநீதிமன்றத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

இதேபோல சீனியர் டிஜிபிக்களை நியமிக்காமல் தன்னை நியமித்ததால் தனது பதவியேற்பு விழாவை ஒட்டுமொத்த சீனியர் டிஜிபிக்களும் புறக்கணித்தது வெங்கட்ராமனை மிகவும் காயப்படுத்திவிட்டது. இதன்பிறகும் கூட ஈகோ பார்க்காமல் சம்பந்தப்பட்ட சீனியர் டிஜிபிக்கள் அனைவரையும் தானே அவர்களது அலுவலகங்களுக்கு நேரில் சென்று சந்தித்து தனது நிலையை விளக்கி கூறியது காவல்துறை அதிகாரிகளையே நெகிழ செய்தது. இருப்பினும் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் தான் நேரடியாக விசாரிக்காமல் தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள் சொல்படி செயல்பட்டது பொறுப்பு டிஜிபியை பெரும் சிக்கலுக்கு ஆளாக்கிவிட்டது என்கின்றனர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

உதாரணமாக நகராட்சி நிர்வாக துறையில் நடந்த இரண்டு மிகப்பெரும் ஊழலில் அமலாக்கத்துறை உரிய ஆதாரங்களுடன் 2 கடிதம் அனுப்பியும் லஞ்சஒழிப்பு துறை மூலம் வழக்குப்பதிவு செய்யவிடாமல் இந்த அதிகார வர்க்கத்தினர் தடுத்துவிட்டதால் பெரும் சங்கடத்திற்கு ஆளானார் டிஜிபி வெங்கட்ராமன்.

அமலாக்கத்துறை இரண்டாவது கடிதத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தாவிட்டால் காவல்துறை அதிகாரிகளும் இந்த குற்றங்களுக்கு உடந்தை என கருத நேரிடும் என விடுத்த எச்சரிக்கை இவரை மிகவும் பாதித்துவிட்டது. இதனை ஆண்டுகள் காவல்துறையில் எந்த கெட்டபெயரும் சம்மதிக்காமல் பணியாற்றிவிட்டு பொறுப்பு டிஜிபி பதவியால் கெட்டபெயரை சம்பாதிக்க நேரிட்டுவிட்டதே என தனக்கு நெருக்கமானவர்களிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினாராம்.

இதன் உச்சகட்டமாக திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் உத்தரவிட்டும் மேலிடத்தை குஷிப்படுத்தவும், தங்கள் சிறுபான்மை விசுவாசத்தை காட்டவும் சில அதிகாரிகள் நீதிபதி உத்தரவை கண்டுகொள்ளாமல் தீபம் ஏற்ற வருபவர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டதை இவரால் தடுக்க முடியவில்லை. இதனால் நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்து விளக்கம் கேட்டதும், மதுரை ஐ.ஜி. லோகநாதனை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டதும் டிஜிபி வெங்கட்ராமனை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாம்.

இந்த தர்மசங்கடமான நிலையில்தான் டிஜிபி வெங்கட்ராமனுக்கு 2 நாட்களுக்கு முன்பு மயக்கம் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை பரிசோதித்தபோது மன அழுத்தம் காரணமாக இருதயத்தில் 2 அடைப்புகள் உருவாக்கி இருப்பதாகவும் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மூலம் ஸ்டண்ட் கருவியை பொருத்தவேண்டும் என கூறியதை கேட்ட டிஜிபி வெங்கட்ராமன் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் மிகவும் கலங்கித்தான் போனார்களாம்.

இத்தனை ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்படும் அளவிற்கு பணிச்சுமையும், மனா உளைச்சல்களும் உருவாகிவிட்டதே என வேதனைப்பட்டு இப்படி வேலைபார்த்தாக வேண்டுமா? என குடும்பத்தினர் வேதனையுடன் கேட்டதாக கூறப்படுகிறது. பொறுப்பு டிஜிபி பதவியேற்று 3 மாதங்களில் பல்வேறு அரசியல் மற்றும் துறை ரீதியிலான நெருக்கடிகளுக்கு ஆளானதுதான் இந்த நிலைமைக்கு கரணம் என முடிவெடுத்து விருப்ப ஓய்வு கொடுத்துவிடலாம் என முடிவெடுத்து தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தனது விருப்பத்தை கூறியதாகவும், கடிதமே அனுப்பி விட்டதாகவும் கோட்டைவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பணி நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியால் பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி விருப்ப ஓய்வு கொடுத்ததாக செய்தி வெளியானால் அரசுக்கு மட்டுமின்றி, அதிகார வர்க்கத்தினருக்கும் மிகவும் சிக்கலாகிவிடும் என்பதால் இவரது விருப்ப ஓய்வை ஏற்கமுடியாது. வேண்டுமென்றால் நீண்ட விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பதிலாக வேறு பொறுப்பு டிஜிபியை நியமித்துவிடுகிறோம் என உத்தரவாதம் தரப்பட்டதாம். இதன்பிறகே இரவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரும், வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெற உள்ள டிஜிபி அபய்குமார் சிங்கை பொறுப்பு டிஜிபியாக நியமித்து உத்தரவு வந்ததாம்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டிஜிபி வெங்கட்ராமனை டிஜிபி அலுவலக அதிகாரிகள் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். தன்னை சந்திக்க வருபவர்களிடம் தனது எந்த மனவருத்தத்தையும் டிஜிபி வெங்கட்ராமன் காட்டிக்கொள்ளவில்லையாம். இருப்பினும் அதிகமான அதிகாரிகள் வந்து பார்ப்பதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுரை கூறியதால் இனி யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என கூறிவிட்டாராம்.

காலை 7 மணி அளவில் இவருக்கு ஸ்டண்ட் கருவி பொறுத்த அறுவை சிகிச்சை வார்டுக்கு அழைத்துசென்றுவிட்டனர். கருவி பொருத்தப்பட்டு 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலேயே வைத்திருந்துதான் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்கிறது மருத்துவமனை வட்டாரங்கள். தற்போது வரும் 25-ம் தேதிவரை விடுமுறை கடிதம் கொடுத்துள்ள டிஜிபி வெங்கட்ராமன் தனது விடுமுறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இவர் மீண்டும் பணிக்கு வந்தாலும் பொறுப்பு டிஜிபி பதவியை ஏற்க தயாராக இல்லை.

நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் இப்படி அதிகாரவர்க்கத்தினரால் சுயலாபத்திற்கு பயன்படுத்தப்பட்டு விருப்ப ஓய்வு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் அரசில் உள்ள ஒருசில நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மத்திய அரசு பணிக்கோ, விருப்ப ஓய்வோ கொடுக்கும் முடிவிற்கு தள்ளப்படுவர். இது ஆட்சியாளர்ர்களுக்குத்தான் சிக்கல். இதை முதல்வர் கண்டுபிடித்து இந்த அதிகாரவர்க்க அதிகாரிகளை நீக்கிவிட்டு தனக்கும், ஆட்சிக்கும் நல்லபெயர் பெரும்வகையில் அதிகாரிகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விரும்புகின்றனர்.