பாய்வ­தற்கு தயா­ராகும் வழக்­குகள்: தப்பிப் பிழைப்­பாரா டிஎஸ்பி சுந்­த­ர­சேன்

159

டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு கீழே பணியாற்றும் பெண் ஆய்வாளரை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு அவதூறு வார்த்தைகளால் திட்டியதாக வாங்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய உயர் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு எதிராக செயல்படுபவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களையும் மிரட்டியே பணியவைக்க உயர் அதிகாரிகள் எடுக்கும் இதுபோன்ற தவறான நடவடிக்கைகள் பின்னொரு காலத்தில் மற்ற உயர் அதிகாரிகளை பாதிப்பதோடு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பணிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த சுந்தரேசன் சில மனித உரிமை மீறல் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது ஆணையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினார்.

கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை கூட விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்ததால் ஈகோ பிரச்சினையால் மேலிடம் மூலம் உடனடியாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவிற்கு மாற்றம் செய்ய உத்தரவை பிறப்பிக்க வைத்தனர். இந்த உத்தரவை ஏற்க டி.எஸ்.பி. சுந்தரேசன் மறுத்தபோது சட்டம் ஒழுங்கு கூடுத டி.ஜி.பி. டேவிட்ஸன், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோர் தன்னை போனில் அழைத்து மிரட்டியதாகவும், உடனடியாக பணியில் சேராவிட்டால் சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக தன்னை மிரட்டியதாக சுந்தரேசன் மீடியாவிடம் கூறியது முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேறுவழியில்லாமல் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவிற்கு சென்ற பிறகு ஆளும்கட்சி பிரமுகர்கள் நடத்தும் முறைகேடான டாஸ்மாக் பார்கள் மற்றும் கள்ளத்தனமாக விற்கப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உடைத்தெறிந்தார். திருட்டுத்தனமாக மதுவிற்ற வியாபாரியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய உடனே ஜாமீன் கிடைத்ததால் மதுவிலக்கு பெண் ஆய்வாளரை போனில் கண்டித்தார்.

உடனே பெண் ஆய்வாளர் தன்னை டி.எஸ்.பி. தரக்குறைவாக பேசியதாக மாவட்ட எஸ்.பி,, டி.ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். கள்ளத்தனமாக மது விற்பனை செய்த வியாபாரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியதும் எப்படி ஜாமீன் கிடைத்தது என டி.எஸ்.பி. கேட்டது தவறு என டி.ஐ.ஜி. கண்டித்தபோது சுந்தரேசன் பதில் கூறியது உயர் அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதேபோல ஆளுகட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும்படி உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரஷர் வந்த பிறகும் நிறுத்த மறுத்தது உயர் அதிகாரிகளின் கோபத்தை அதிகரித்தது.

இந்த நிலையில்தான் டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு கொடுத்திருந்தது போலீஸ் வாகனத்தை வி.ஐ.பி. பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும் என கூறி பறித்துக்கொண்டதுடன் ஒட்டவே முடியாத வாகனத்தை கொடுத்தனுப்பினர். வாகனம் நடுரோட்டில் நின்றுவிட்டதால் அப்படியே இறங்கி தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார் டி.எஸ்.பி.

இதன்பிறகும் வேறு வாகனம் தர மறுத்ததால் மீண்டும் சீருடையுடன் அலுவலகத்திற்கு நடந்து செல்ல தொடங்கிய சம்பவம் மீடியா மூலம் வெளியே வந்ததால் சர்ச்சை உருவானது. இதன் எதிரொலிதான் சஸ்பெண்ட் உத்தரவு. ஆனால் 4 நாட்கள் வரை டி.எஸ்.பி. சுந்தரேசன் நடந்தே செல்வது மாவட்ட சிறப்பு பிரிவு மற்றும் மாநில உளவு துறைக்கு தெரிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேறு நல்ல ஜீப்பை கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும். அல்லது டி.எஸ்.பி. சுந்தரேசன் வேண்டுமென்ற நடந்து செல்வதாக கருதி இருந்தால் டிஜிபி- க்கு புகார் அனுப்பி காத்திருப்போர் பட்டியலுக்கோ, வேறு மாவட்டத்திற்கோ பணிமாற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால் மீடியாவில் வெளியாகி பேட்டியளித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரசமாக அவருக்கு கீழே பணியாற்றும் 2 பெண் இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள், டிரைவர் உள்ளிட்டோரிடம் புகார் மனுக்களை பெற்றும், இதன் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மூலம் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஜியா உல் ஹக் மத்திய மண்டலா ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமாருக்கு பரிந்துரைக்கிறார்.

தங்களுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் மீது புகார் அளிக்கும்படி ஐ.பி.எஸ். அதிகாரிகள் உத்தரவிடும்போது வேறுவழியின்றி கீழே பணியாற்றும் போலீசார் புகார் கொடுக்கத்தான் செய்வார்கள். தங்களை எதிர்த்தால் பணிய வைக்க வேண்டும் என முடிவெடுத்து இந்த புகார் மனுக்களை பெற்றும் சஸ்பெண்ட் செய்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்ற செயல்களை உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்திருப்பதன் மூலம் இனி எந்த அதிகாரி கண்டிப்புடன் நடந்துகொண்டாலும் அவர் மீது கீழே பணியாற்றும் போலீசார் புகார்கள் தந்தால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? இது தவறான முன் உதாரணம் ஆகிவிடாதா? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு பெண் ஆய்வாளர் தற்கொலை செய்யப்போவதாக கூறியது, அவதூறான வார்த்தைகளால் திட்டியது மற்றும் டி.எஸ்.பி. சுந்தரேசன் ஏற்கனவே பணியாற்றிய துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் கொடுத்து ஏற்கனவே முடிக்கப்பட்ட பாலியல் புகார் உள்ளவற்றில் சுந்தரேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் உயர் அதிகாரிகள் டி.ஜி.பி.க்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனராம்.

சுந்தரேசனால் குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரிகள் தற்போது உச்ச அதிகாரத்தில் இருப்பதால் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆட்சி மாற்றமோ, பதவி மாற்றமோ ஏற்படும்போது இதேபோல பாதிக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் இவர்களை பழிவாங்க தொடங்கினால் இது எங்கே போய் முடியும்? காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றல் போலீசாரின் அத்துமீறல்களை தட்டிக்கேட்கும் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி?

அதிகாரிகள் மீது தவறான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் போலீசார் ஈடுபாட்டுடன் பணியாற்றுவது முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் சட்டம் ஒழுங்கு கடுமையாக படிக்கப்படும். எனவே தற்போதைய சூழ்நிலையை மாற்ற முதல்வர் உடனடியாக இந்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருபுவனம் வாலிபர் அஜித்குமார் லாக்கப் மரணம் போன்ற சம்பவங்களால் காவல்துறையின் மதிப்பு முற்றிலும் சீரழிந்து கிடைக்கும் இந்த நிலையில் காவால்த்துறையை சீரமைப்பதோடு எந்த பாரபட்சமும் இல்லாமல் பணியாற்றும் நல்ல அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பணிகளில் திறமையாக பணியாற்றும் அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும். தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் என்பதற்காக முக்கியமான பதவிகள் கொடுப்பதோடு, அவர்கள் எந்த தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசுக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை ஆளும் மேலிடமும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் உணர வேண்டும். இல்லையேல் பாதிக்கப்படுவது ஆட்சி மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும்தான் என்பதை உணர்ந்தால் சரிதான்.