“அணில்” சீமான் கிண்டல் கொந்தளிக்கும் தவெக!!

150

“அணில் ஜங்கிள் என்று தானே கூப்பிட வேண்டும். அங்கிள் என ஏன் கூப்பிடுகிறது “என த.வெ.க தலைவர் விஜய்யை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துவந்த பிறகு அவர்களுக்கு ஆதரவாக ‘பி’ டீம் போல சீமான் செயல்படுவதாக விஜய் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

தனது மனதில் படுவதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசுபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். கட்சி தொடங்கிய பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் இவரை கூட்டணியில் சேர்க்க பாஜக உள்ளிட்ட காட்சிகள் தயாராக இருந்தபோதும் தனித்தே போட்டியிடுவேன் என வெளிப்படையாக அறிவித்து பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். இவர் தனித்து போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ஓட்டுகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களை நாதக வேட்பாளர் பெற்றுவிடுகிறார். ஒருசில தொகுதிகளில் திமுக, அதிமுக வேட்பாளருக்கு அடுத்த இடத்தையும் இந்த கட்சி வேட்பாளர்கள் பெற்றுவிடுகின்றனர். இதனால் பல நேரங்களில் வெற்றி பெற வேண்டிய பெரிய கட்சி வேட்பாளர் குறைந்த ஓட்டுகளில் வெற்றியை இழக்கும் சூழ்நிலை உருவாக்கி விடுகிறது. எந்த கட்சியையும் விட்டு வைக்காமல் சரமாரியாக திட்டி அனைத்து காட்சிகளையும் அதிர செய்து வருபவர். குறிப்பாக ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துக்களை இவரைப்போல தைரியமாக பேசுபவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்துக்கொண்டே செல்பவர். அதே சமயம் தவெக கட்சி தலைவர் விஜய்யை பற்றி மட்டும் அதிகமாக நேரடி தாக்குதலில் ஈடுபடாமல் தம்பி விஜய் என்றே கூறி வந்தார். இதனால் ஒரேவேளை விஜய் கட்சியுடன் சீமான் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்வார் என்றே பேசப்பட்டு வந்தது.

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க. முத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்தார். இதுகுறித்து விசாரிக்க சீமான் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று வந்தார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த பிறகு நடிகர் விஜய் மீதான தனிப்பட்ட தாக்குதலை சீமான் கையில் எடுத்துள்ளார். தவெக கட்சி பற்றிய தாக்குதலையும் சீமான் தொடங்கி உள்ளார். இதனால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரிலேயே சீமான் தவெக கட்சி தலைவர் விஜய் மீதான தனி நபர் தாக்குதலை தொடங்கி உள்ளார். இவர் திமுகவின் ‘பி’ டீம் போல செயல்பட தொடங்கி விட்டார் என்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இதை ஆமோதிப்பதுபோல சீமான் மதுரையில் அளித்துள்ள பேட்டி அமைந்துவிட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மதுரையில் கடந்த 21ம் தேதி நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மீது நேரடியாக தாக்கி பேசிய விஜய், என்ன அங்கிள், வாட் அங்கிள் என்றெல்லாம் வரிசையாக அங்கிள் என அழைத்து, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்றெல்லாம் பேசி திமுகவை வம்புக்கு இழுத்துவிட்டார். இவருக்கு திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விஜய்க்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தமிழகத்தில் தன்னை அப்பா என மக்கள் அழைப்பதாக ஸ்டாலின் கூறியதை கிண்டலடிக்கும் வகையில் அங்கிள் என பேசியது வைரலாகிவிட்டது. இவரது கிண்டல் ஒருசில கட்சி தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளானாலும் முதல்வர் ஸ்டாலினை நேரடியாகவே கலாய்த்து அவரது இமேஜிற்கு பாதிப்பை விஜய் ஏற்படுத்திவிட்டதாகவே திமுகவினர் கொந்தளித்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சீமான் விஜய்யை அணில் என கிண்டலடித்து பேசியது அவரது கட்சியினரையும், ரசிகர்களையும் கொந்தளிக்க தொடங்கியுள்ளது. சீமான் அளித்துள்ள பெட்டியில், அணில் ஜங்கிள், ஜங்கிள் என்றுதானே கூப்பிட வேண்டும். அங்கிள், அங்கிள் என்றே என் கூப்பிட வேண்டும்” என கேலியாக கூறினார். இதனால் டென்ஷன் அடைந்த விஜய் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சீமான் திமுகவிடம் விலை போய்விட்டார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை. தனித்துவமான கொள்கை கொண்டவன் என பறைசாற்றிக்கொண்ட சீமான் திமுக தலைவருக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து விஜய்யை சீண்டி விட்டுள்ளார். இதற்கு காரணம் ஒவ்வொரு தேர்தலிலும் நாதக கட்சி குறிப்பிட்ட ஓட்டுக்களை பெற்று வருகிறது. ஒருவேளை விஜய் தனித்து போட்டியிட முடிவெடுத்தால் சீமான் ஓட்டுக்களை பிரிப்பதுடன் அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்த இடத்தை பிடிப்பதோடு, ஒட்டு சதவிகிதத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து சீமானை பின்னுக்கு தள்ளிவிடுவார். இதேபோல பாமக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் விஜய் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் காணாமல் போய்விடும் சூழ்நிலை உள்ளது. என்வேதான் விஜய் மீதான தாக்குதலை இவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதன்மூலம் விஜய்யை கண்டு இவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டதாகவே கருத வேண்டும். வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் திருச்சியில் விஜய் கூட்டியதை விட அதிக கூட்டத்துடன் பொதுக்கூட்டம் நடத்துவேன் என சீமான் சவால் விட்டுள்ளார்.

அதற்கு முன்பாகவே மத்திய மண்டலமான திருச்சி அல்லது தஞ்சையில் கண்டிப்பாக தவேக மாநில மாநாட்டை நடத்த போகிறோம். அப்போது கூடும் கூட்டத்தை விட சீமானால் கூட்டம் கூட்ட முடியுமா என்பதை முதலில் நிரூபிக்கட்டும். அதன்பிறகு விஜய்யை பற்றி சீமான் பேசட்டும். அதுவரை தேவை இல்லாமல் எங்கள் தலைவரை விமரிசித்து நல்லதல்ல என்கின்றனர் நிர்வாகிகள். தவெக கட்சியையும், கட்சி தலைவர் விஜய்யை பற்றியும் தாங்கள் நேரடியாக விமர்ச்சிக்காமல் சீமான் உள்ளிட்டோர் மூலம் விமரிசிக்க வைத்து அரசியல் விளையாட்டை திமுக தொடங்கி உள்ளது. வரும் தேர்தலில் திமுக இதற்கான விலையை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவரை கண்டு திமுக அஞ்சுகிறது. இவருக்கு கூடும் கூட்டம் ஆளும்கட்சிக்கு அதிர்வலையை கொடுத்துள்ளது என்கின்றனர் தவெக கட்சியினர்.