டிஜிபி பதவி நியமனத்தோடு ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மாற்றம்

தமிழக காவல்துறை தலைவராக டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபி பதவியில் நியமிக்கப்பட உள்ள நிலையில் இவரோடு சேர்த்து பல்வேறு ஐ.பி.எஸ். அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.

தமிழக காவல்துறையின் தலைவராக உள்ள டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பதிலாக புதிய டிஜிபியை நிமிப்பதற்கான பட்டியலை தயாரித்து முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியதோடு நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தற்காலிக டிஜிபியை நியமிப்பதில்தான் சில ஐபிஎஸ் அதிகாரிகள் காய் நகர்த்தினார். நிரந்தர டிஜிபி பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ள சீமா அக்ரவால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் ஆகியோரில் ஒருவரை நியமிக்க இந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இஷ்டமில்லை. காரணம் சங்கர் ஜிவால் டிஜிபியாக இருந்தாலும் அவரை சட்டம் ஒழுங்கு பிரிவை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடாமல் குறிப்பிட்ட சில அதிகாரிகள் கைக்குள் வைத்திருந்தனர். நிரந்தர டிஜிபியாக சீமா அக்ரவாளோ, சந்தீப் ராய் ரதோரோ நியமிக்கப்பட்டால் இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனித்து செயல்பட தொடங்கிவிடுவார்கள். இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முதல் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் வரை இந்த அதிகாரிகளே செயல்படுத்தி வந்த நிலையில் இனியும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து சென்றுவிட கூடாது என்பதற்காகவே நிரந்தர டிஜிபியை நியமிக்க விடாமல் தடுத்துவிட்டதாக ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில்தான் டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன்தான் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளதாகவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. இவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங்கை தற்காலிக டிஜிபியாக நியமிக்க முதலில் திட்டமிட்டனர். இதற்கு அபய்குமார் சிங் ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதனால் டிஜிபி வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபி பதவியில் நியமிக்க அவரது ஒப்புதல் பெற்று முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. முழுக்க, முழுக்க குறிப்பிட்ட சில அதிகாரிகளின் கையில்தான் காவல்துறை சிக்கி திணறுவதாகவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கலில் புலம்பல் அதிகமாக கேட்கிறது. தங்களுக்கு ஆதரவான ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி. பதவிகளில் நியமித்து வருகின்றனர். இவர்களால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சரியாக கையாள தெரியாவிட்டாலும் இவர்களை காப்பாற்றிவிடுகின்றனர்.

டிஜிபி அல்லது வேறு பரிந்துரையால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை பழிக்கு பழிவாங்கி டம்மி பதவிகளில் நியமித்து விடுகின்றனர். டிஜிபி நியமனத்தின்போதே பல உயர் அதிகாரிகள் முதல் எஸ்.பி. அந்தஸ்து வரையிலான பதவிகளில் உள்ளோரையும் மாற்றி முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கான பட்டியலும் டிஜிபி அலுவலகத்தில் தயாராகி வருகிறது. சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ள வெங்கட்ராமன் உளவுத்துறை டிஜிபி பொறுப்பிற்கு மாற்றப்பட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. இதனால் காலியாகும் நிர்வாக பிரிவு டிஜிபி பதவியில் ஆவடி மாநகர ஆணையராக உள்ள சங்கர் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு பதிலாக அமலாக்க பிரிவு கூடுதல் டிஜிபி அமலராஜ் ஆவடி மாநகர ஆணையராக நியமிக்கப்பட உள்ளார்.

தலைமையிட டிஜிபியாக உள்ள வினித் தேவ் வான்கடே இந்தமாதம் காலியாகும் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் பதவியில் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. தற்போது ஓய்வுபெறும் டிஜிபி சங்கர் ஜிவாளுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு துறை ஆணைய தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாம். இதனால் தீயணைப்பு துறை இயக்குனராக உள்ள சீமா அக்ரவாலை ரயில்வே டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளாராம். இந்த பதவியில் உள்ள வன்னியபெருமாள் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் அல்லது தலைமையிட டிஜிபிபியாக மாற்றப்பட உள்ளாராம். மத்திய பணிக்கு சென்று திரும்பிய டி.ஐ.ஜி.க்களான சோனல் சந்திரா, விக்கிரமன், அரவிந்தன் ஆகியோர் தமிழக அரசு பணிக்கு திரும்புவதால் இவர்களும் மாநகரம் மற்றும் மாவட்டங்களில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களோடு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட உள்ளனர். டிஜிபி சங்கர் ஜிவாளால் நியமிக்கப்பட்ட பல அதிகாரிகளையும் மாற்றிவிட்டு தங்கள் ஆதரவு அதிகாரிகளை நியமிக்க இந்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி பொறுப்பில் நியமிக்கப்பட உள்ள வெங்கட்ராமன் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1995-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழக அரசு பணிக்கு நியமிக்கப்பட்டார். 1996-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஏ.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 1997-ம் ஆண்டு கோவில்பட்டி, ராமநாதபுரம் டிவிஷன் ஏ.எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டார். 1998ம் ஆண்டு பட்டாலியன் கமாண்டன்ட் பதவியிலும், பின்னர் மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். சிவில் சப்ளை எஸ்.பி., பெரம்பலூர் எஸ்.பி பதவிகளில் பணியாற்றிவிட்டு மத்திய அரசு பணிக்கு சென்றார். மத்திய அரசில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 2009ம் ஆண்டு மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பியபோது சிபிசிஐடி டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

சேலம் சரக டிஐஜியாக பணியாற்றிவந்தபோது மாநில ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இங்கேயே ஐ.ஜி. பதவி உயர்வும் பெற்றார். இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றியபோதுதான் திமுகவின் தற்போதைய அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு ஐ.ஜி. பதவியிக்கு மாற்றப்பட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு தலைமையிட கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டு, 2024ம் ஆண்டு நிர்வாக பிரிவு டிஜிபி பதவியில் நியமிக்கப்பட்டார். நேர்மையான அதிகாரியான இவர் கண்டிப்புடன் நடந்துகொள்பவர் என்பதால் சக பிரிவு அதிகாரிகளே அச்சத்துடன்தான் நடந்துகொள்வார்களாம். தற்போதைய டிஜிபி சீனியரிட்டி பட்டியலில் 5-ம் இடத்தில் இருப்பதால் நிரந்தர டிஜிபி பதவியில் நியமிக்கப்பட முடியாது.

வரும் ஜனவரி மாதம் தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தல் ஆணையத்தால் இவரே டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடியும் வரை டிஜிபி பதவியில் தொடர்வார். இவருக்கு பதிலாக ஜனவரி மாதம் டிஜிபி அந்தஸ்து அதிகாரி சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்படுவார். ஏற்கனவே புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது புதிய டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமித்தால் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்க பட்டாலும் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் இவர் மாற்றப்படலாம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். இவ்வாறு பொறுப்பு டிஜிபி பதவியும் திரிசங்கு நிலைமையில் இருக்க சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதிக்கப்படுமோ என்கின்றனர் ஐபிஎஸ் அதிகாரிகள்….

Comments (0)
Add Comment