தமிழக சட்டசபை தேர்தலுக்கு வரும் 2026ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதிக்குள் வாக்காளர்களை “கவனிப்பது ” உள்ளிட்ட உள்ளடி வேளைகளில் ஆளும் கட்சி தனது வழக்கமான பாணியை வேகப்படுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளிடையே திமுக ஆட்சியை தோற்கடிப்பதில் ஆர்வம் காட்டுவதற்கு பதில் கட்சியில் யார் பெரியவர் என்ற ஈகோ போராட்டத்தால் கூட்டணி சேருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரசிகர்களையும், தொண்டர்களையும் தனது பக்கம் ஈர்த்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை தன் பக்கம் த.வெ.க கட்சி தலைவர் விஜய் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஆனால் தனக்கு கூடும் கூட்டத்தை ஓட்டாக மாற்ற தேவையான அடிப்படை பணிகளில் இன்னும் முழுமூச்சாக எடுபடவில்லை என்றே கூறலாம்.
ஏற்கனவே மாநில 2-வது மாநில மாநாட்டை மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடித்து அடுத்தகட்டமாக அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரில் சந்திக்க வேன் மூலம் சுற்றுப்பயணம் செய்ய தயாராகி வருகிறார். இவரை பார்க்கவும் , பேச்சை கேட்கவும் அதிகமான கூட்டம் கூடினாலும் இதை ஓட்டாக மாற்றும் திறமை இன்னும் விஜய்க்கு வரவில்லை என்கின்றனர் மூத்த அரசியல்வாதிகள். இதனால் விஜய் வருகை மற்றும் கூட்டத்தை பார்த்து சற்று அச்சம் அடைந்த ஆளுகட்சி இவர்கள் வரும் தேர்தலுக்குள் ரசிகர்களை ஓட்டுப்போட வைப்பதில் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்கின்றனர்.
திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கண்டிப்பாக கூட்டணி சேரமாட்டேன். அடுத்த முதல்வர் விஜய்தான் என்ற ரீதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் பேசவைத்து மக்களின் நாடித்துடிப்பை பார்க்க விஜய் முயற்சித்தார். ஆனால் முதல்வர் வேட்பாளர் அளவிற்கு விஜய்யை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்திவிட்டனர். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக திமுக கூட்டணி கண்டிப்பாக பலத்த சரிவை சந்திக்கும். அதிமுக, தவெக கூட்டணியில் இணைந்தால் மட்டுமே இதற்கு வாய்ப்பு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால் தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து இப்போதே முதல்வராகிவிட்டதை போல விஜய் கனவு காண தொடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் தனித்து போட்டியிட்டால் இவருக்கு விழும் ஓட்டுகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு செல்ல வேண்டிய ஓட்டுகள்தான். இதனால் திமுக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க விஜய்யே காரணமாகிவிடுவார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
பாஜக கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது முதலே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை திண்டாட்டமாகிவிட்டது என்றே கூறலாம். பாஜக கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் சிறுபான்மை ஓட்டுகள் முழுமையாக திமுக கூட்டணிக்கு சென்றுவிடும். பாஜக கூட்டணியில் இருந்து விலகி விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கண்டிப்பாக ஆளும்கட்சி தோற்றுப்போகும் என கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டனர்.
மூத்த தலைவரான செங்கோட்டையன் சில மாதங்களாகவே எடப்பாடியாருடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில் 5-ம் தேதியன்று தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அமுமுக கட்சி கூட்டணியில் இருந்து விளங்குவதாகவும், தனது கட்சி யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்பேன் என கூறி பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றியை தட்டிப்பறித்ததில் அமுமுக கட்சிதான் முக்கிய பங்காற்றியது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுகவிற்கு இடியாப்ப சிக்கல்தான்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக ராஜ்யசபா எம்.பி. பதவியை தனது தம்பி சுதீஷிற்கு தருவதாக கூட்டணி அமைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுவிட்டு எம்.பி. சீட் தர மறுத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பிரேமலதா ஏற்கனவே அறிவித்து விட்டார். முதல்வர் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற பிறகே இந்த மூவ் நடந்துள்ளது. இதேபோல ஓ.பன்னீர் செல்வமும் முதல்வரை சந்தித்துவந்த பிறகே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்தடுத்து அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து கூட்டணி காட்சிகள் விலகுவது அதிமுகவிற்கு பலவீனமாகவே கருதப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததால் இந்த பாதிப்பு என அதிமுக மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர். கட்சியில் கோலோச்சிவந்த தங்கமணியை ஓரம்கட்டிய எடப்பாடியார் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அவரும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கி கொண்டார். தற்போது செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில் முன்னாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி எடபடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சியை உடைக்கவும் ஏற்பாடுகளை பின்னணியில் இருந்து திமுக இயங்குவதாகவும் கூறப்படுகிறது.
வடமாவட்டங்களில் பலமான ஒட்டு வங்கியை வைத்திருந்த பாமக கட்சி தற்போது தந்தை, மகனுக்கு இடையிலான போட்டியால் இரு பிரிவாக பிரிந்துபோய்விட்டது. அன்புமணியை கட்சியிலிருந்தே நீக்க ராமதாஸ் தீவிரம் காட்டும் நிலையில் கட்சியை பிடிக்க அன்புமணியும் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் பாமக இரண்டு பிரிவாக பிரிந்துவிட்டதால் எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் தாங்கள் விரும்பும் சீட்டுகளை பெற முடியாது.
இவ்வாறு பாஜக, அதிமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கூட்டணி கட்சிகளை எல்லாம் திமுக தலைவரின் நெருக்கமான உறவு பின்னணியில் இருந்து பிரித்துவிட்ட நிலையில் விஜய்யை தனித்து போட்டியிட வைத்துவிட்டால் திமுக கூட்டணி கண்டிப்பாக அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என முதல்வருக்கு உறுதி அளித்துள்ளாராம் உறவு. இதனால்தான் முதல்வர் ஆட்சியை பற்றி பல்வேறு விமர்ச்சனங்கள் எழுந்தாலும் இதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்.
அதோடு ஒவொரு தொகுதியிலும் திமுக வெற்றிபெற தேவையான வைட்டமின் “ப” வை இப்போதே தயார் தயார் செய்து வைத்துவிட்டனராம். தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை, அமலாக்க துறை மூலம் சோதனை நடத்தி பணத்தை முடக்க பாஜக கண்டிப்பாக முயலும் என்பதால் இப்போதே வாக்காளர்களை கவனிக்க விட்டமின் “ப ” பதுக்கப்பட்டுவிட்டதாம். இவ்வாறு எதிர்கட்சிகளை சுக்கு நூறாக உடைத்து ஆட்சியை மீண்டும் பிடிக்க திமுக முழுப்பலத்தையும் காட்டிவருகிறது. இதை பாஜக, அதிமுக கூட்டணி எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி……