நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தால் அடிவாங்கிய நண்பர் உன்னை அரிவாளால் வெட்டிவிட்டுதான் மீண்டும் ஊருக்குள் வருவேன் என சவால் விட்டு நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையான வாலிபர்களின் இந்த மோதல் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ளது முடியனூர் கிராமம். இந்த கிராமத்தின் எல்லை பகுதியில் உள்ள பாலத்தின் அருகே சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் வந்த வாலிபர் தடுத்தார். ரத்த வெள்ளத்தில் பேருந்தை வாலிபர் தடுப்பதை பார்த்த பேருந்து ஓட்டுநர் பயந்துபோய் பேருந்தை நிறுத்தினார். உடனே தன் உயிரை காப்பாற்றும்படி கெஞ்சியபடி பேருந்தின் முன்புறமாக வாலிபர் படுத்துவிட்டார். இதைப்பார்த்த பேருந்து ஓட்டுனரும், பயணிகளும் அச்சத்தில் உறைந்துபோய்விட்டனர். உடனே பொதுமக்கள் திருபாலபந்தல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்களும், தகவல் அறிந்து வந்த போலீசாரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்து அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் வாலிபரிடம் திருக்கோவிலூர் போலீசார் விசாரித்தபோது முடியனூர் பகுதியை சேர்ந்த வாலிபர் சேரன் என்பது தெரியவந்து. இவரது கை, கால், தலை, தொல்பாட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணமலை அரசு தலைமை மருத்துவமனைக்கு இந்த மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து இவரது கூட்டாளிகளான வைரவன், கணேசன் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

இந்த அரிவாள் வெட்டு சம்பவத்திற்கான பின்னணி குறித்து போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அரிவாள் வெட்டுப்பட்ட சேரனும், இவரை அரிவாளால் வெட்டிய வைரவன், கணேசன் ஆகியோரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாவர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர்கள் 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. வைரவனையும், கணேசனையும் வெட்டுப்பட்ட சேரன் தனது நண்பருடன் சேர்ந்து சரமாரியாக உதைத்து காயப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வைரவனும், கணேசனும் இந்த சம்பவத்திற்கு பதிலுக்கு பதிலாக சேரனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத்தான் மீண்டும் ஊருக்குள் நுழைவேன் என கூறிவிட்டு ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வேலை பார்த்து வந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைரவனும், கணேசனும் ஊருக்கு வந்தனர். இவர்கள் சேரனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டிருந்தனர். சேரன் ஊர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்க சென்றிருப்பது தெரிய வந்தது. உடனே சேரனின் நண்பர் மூலமாக கஞ்சா குடிக்கலாம் என கூறி மலையோர பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு சேரன் தனது நண்பருடன் சென்றதும் சுற்றி வளைத்த கணேசனும், வைரவனும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த சேரன் கூச்சல் போட்டுள்ளார். இதைகேட்டு உள்ளூர் மக்கள் ஓடிவரவே பயந்துபோன கணேசனும், வைரவனும் தப்பி ஓடிவிட்டனர் என்பது தெரியவந்தது. பழிக்கு பழி வாங்க திட்டமிட்டு நண்பனை கொலை செய்யமுயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதை பழக்கம் இப்பகுதி அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.