திரு­மண ஆசை காட்டி 2 கிலோ தங்கத்தை மோசடி செய்­ததால் கைம்பெண் தற்­கொ­லை: வருவாய் ஆய்­வாளர் கைது

155

உதவித் தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற கைம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து 2 கிலோ தங்க நகைகளை மோசடி செய்­த­­­தோடு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மிரட்டியதால் குழந்தையை தவிக்க விட்டு கடிதம் எழுதிவைத்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் கன்­னி­யா­கு­ம­ரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்குக் காரணமான அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். இவர் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் ரமணி. இவரது கணவர் அஜித்குமார். இவர் குலசேகரம் பகுதியில் நகை கடை நடத்தி வந்தார். கொரோனா தொற்றுநோய் பரவிய காலத்தில் அஜித்குமாருக்கு நோய்த்தொற்றி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது. இவர் உயிரிழந்த போது நகை கடையில் 20 கிலோ வெள்ளி பொருட்களும், 2 கிலோ தங்கமும் இருந்தது.

கைக்குழந்தையுடன் கணவனை இழந்ததால் ரமணி தனக்கு கைம்பெண் உதவி தொகை கேட்டும், அரசு உதவி வழங்க கோரியும் நாகர்கோயிலில் உள்ள குமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். வருவாய்த்துறை பிரிவிற்கு இவரது மனு விசாரணைக்கு சென்ற நிலையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய வேல்முருகன் என்பவர் போனில் ரமணியை தொடர்புகொண்டு விசாரித்தார்.

பின்னர் ரமணியின் மனு தொடர்பாக சந்தேகம் கேட்பதாக கூறி பலமுறை தொடர்பு கொண்டார் வேல்முருகன். தனது கணவர் இறந்து விட்டதால் கைக்குழந்தையுடன் தான் சிரமப்படுவதாக ரமணி தனது குடும்ப கதை முழுவதையும் வேல்முருகனிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு பரிதாபபடுவதை போல் பேசிய வேல்முருகன் தனது மனைவியும் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் தானும் தனிமையில் தவிப்பதாக உருக்கமாக வேல்முருகன் பேசியுள்ளார்.

அடிக்கடி ரமணியுடன் பேசிவந்த நிலையில் தானும் தனிமையில் இருப்பதால் ரமணியை திருமணம் செய்து வாழ்க்கை கொடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். முதலில் ரமணி இதை ஏற்க மறுத்தார். தனக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதால் 2-வது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. குழந்தைக்காக வாழ்வதாக கூறி மறுத்துள்ளார். தொடர்ச்சியாக வேல்முருகன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஒருகட்டத்தில் ரமணியும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்.

சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என கூறி பழக்க தொடங்கிய வேல்முருகன் ரமணியின் கணவர் கொடுத்து வைத்திருந்த 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை ஏமாற்றி வாங்கி கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களாக ரமணியுடன் பழகுவதை வேல்முருகன் குறைத்துக்கொண்டார். இதனால் ரமணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேல்முருகனின் சொந்த ஊருக்கு சென்று விசாரித்தபோது ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதை அறிந்த ரமணி மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி குடும்பமும் நடத்தியதோடு, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை வாங்கி மோசடி செய்துவிட்டதை அறிந்து கோபமடைந்து தான் கொடுத்த நகைகள், பணத்தை திரும்ப தரும்படி வேல்முருகனிடம் கேட்டுள்ளார். மேலும் வேல்முருகன் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோரிடமும் தன்னை ஏமாற்றியதை கூறியுள்ளார்.

வேல்முருகனின் மாமனார் அய்யப்பன், மாமியார் ஜெகதம் ஆகியோர் மருமகன் வேல்முருகனுடன் சேர்ந்து ரமணியை பற்றி அவதூறாக பேசியதுடன், பணம், நகைகளை கேட்டால் குழந்தையுடன் கொலை செய்துவிடுவோம் என மிரட்ட தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி மனமுடைந்து போனார்.

ஏற்கனவே கணவனையும் இழந்த நிலையில் நகைகள், பணமும் பறிபோய் ஏமாந்துவிட்டதால் இனி தான் உயிரோடு இருக்க விரும்பவில்லை. தன்னை மன்னித்தோக்கொள்ளுங்கள் என கூறி 6 பக்க கடிதத்தை தனது தந்தைக்கு எழுதி வைத்துவிட்டு ரமணி உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து ரமணியின் தந்தை குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ரமணியை ஏமாற்றிய வேல்முருகன் மற்றும் அவரது மனைவி, மாமனார், மாமியார் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி ரமணியின் உறவினர்கள் குலசேகரம் காவல் நிலையத்தில் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர். குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வேல்முருகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியதால் கைம்பெண் உதவி தொகை மற்றும் அரசு வேலை கேட்டு மனு செய்யும் பெண்களின் குடும்பத்தை பற்றி தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறியும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி ஏமாற்றி நகைகள், பணத்தையும் பறித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவருடன் குமரி மாவட்டத்தை சேர்ந்த பல கைம்பெண்களும், இளம் பெண்களும் ஏமாந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் இதுபோன்ற மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைம்பெண் ரமணியை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்தும், நகைகள், பணத்தை பறித்தும், தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகன் உள்ளிட்டோர் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவரிடம் ஏமாந்த பெண்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.