தமிழக காவல்துறையில் தேர்தல் நெருங்கும் வேலையில் ஒட்டு மொத்த காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் புதிய பதவிகளை நிர்ணயிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை தலைமை செயலாளர் தலைமையில் நடக்கிறது. பதவி உயர்வு பெரும் அதிகாரிகள் ஒருபுறமும், நல்ல பதவியை பிடிக்க பல அதிகாரிகளின் எதிர்பார்ப்பும் நிறைவேறுமா என்பது இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிந்துவிடும் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் எஸ்.பி.க்கள் முதல் டிஜிபி அந்தஸ்து வரையிலான அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் அதிரடி இடமாற்றம் நடைபெறுவது வழக்கம். கடந்த 4 மாதங்களாகவே பல்வேறு உயர் அதிகாரிகளும், மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்கள் இடமாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் பல்வேறு எஸ்.பி.க்கள், மாநகர ஆணையர்கள் மீது ஊழல் புகார்கள் குவிந்துவந்த போதும் இந்த அதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் உள்ள சில அதிகாரிகளின் தீவிர ஆதரவு இருந்ததால் இந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்யமுடியவில்லை.
சில மாநகர காவல் ஆணையர்கள் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தபோது இவர்களும் அதிகார மையத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொண்டதோடு, தாங்கள் வசூலிக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு பகுதியை முக்கிய நபர்களுக்கு கொடுத்து பிரச்சினை முதல்வர் காதுகளுக்கு போகாமல் தடுத்துவிட்டனர் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்.
இந்த நிலையில்தான் எஸ்.பி.க்கள் முதல் கூடுதல் டிஜிபி பதவிகள் வரையிலான 30 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் உதவி எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி. பதவிகளை வழங்குவதற்கான கருத்துரு டிஜிபி அலுவலகத்தில் இருந்து தலைமை செயலாளருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு பிரீ பேனல் எனப்படும் பதவி உயர்வுக்கான தற்காலிக பேனல் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த 30 அதிகாரிகளுடன் பல்வேறு பதவிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இடமாற்ற பட்டியல் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகார மையத்தின் முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பட்டியல் இறுதியாகி உள்ளது. இந்த பட்டியலுக்கு அதிகாரப்பூர்வாமாக அனுமதி வழங்குவதற்கான ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது.

தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்தான் புதிய பதவிகளுக்கான இறுதி பட்டியல் தயாராகும். இதன் பிறகு முதலில் பதவி உயர்வு அளிப்பதற்கான பிரீ பேனல் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியாகும். இந்த பட்டியல் வெளியான பிறகு 30-ம் தேதி அல்லது 31-ம் தேதியன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஒட்டுமொத்த இடமாற்ற பட்டியல் வெளியாகும் என தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் ஜனவரி மாதம் முதல் தேதியில் புதிய பொறுப்பில் சேருவார்கள் எனவும் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன், கூடுதல் டிஜிபிக்களான பாலா நாகதேவி, சந்தீப் மிட்டல் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து கிடைக்கும். சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு, தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உள்ளிட்ட 7 ஐ.ஜி.க்களுக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இவர்களுடன் 3 டி.ஜி.க்கள், 14 எஸ்.பி.க்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
பதவி உயர்வு பட்டியல் இறுதிசெய்யப்பட உள்ளதால் முக்கிய பதவிகளை பெற மேலிடத்திற்கும், மேலிடத்திற்கு வேண்டப்பட்டவர்களையும், சில உயர் அதிகாரிகளையும் பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் சந்தித்து வருகின்றனர். இந்த ஸ்கிரீன் கமிட்டி கூட்டம் முடிந்து பட்டியல் இறுதி செய்யப்பட்டாலும் இந்த அரசை பொறுத்தவரை இறுதி பட்டியல் வெளியாகும்வரை பல்வேறு மாற்றங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்.
காரணம் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார் என்பது நாளை தெரிந்துவிடும் என்பதால் தாங்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்காதவர்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்களை சந்தித்து தங்களுக்கு எப்படியாவது பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக நெருக்கடி கொடுப்பார்கள். இவர்கள் மேலிடத்திற்கு பரிந்துரை செய்து பதவிகளை இறுதிவரை மாற்றம் செய்வார்கள் என்பதால் 30-ம் தேதி பட்டியல் வெளியாகும் வரை ஒரு சில பதவிகளை தவிர பல்வேறு முக்கிய பதவிகளில் பெயர்கள் இடம்பெறுவதும், நீக்கப்படுவதுமாக இருப்பதே வழக்கம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள்