ஜனவரியில் நிரந்தர டிஜிபி நியமனம்: பெண் டிஜிபிக்கு அதிக வாய்ப்பு

172

உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடுமை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஜனவரி முதல் வாரத்தில் நிரந்தர டிஜிபியை நியமிக்க அதிகார மையம் முடிவெடுத்துள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அனுப்பியுள்ள 3 பேர் பட்டியலில் முதல் 2 இடத்தில் உள்ள சீனியர் டிஜிபிக்களில் ஒருவரே அடுத்த 2 ஆண்டுக்கு டிஜிபியாக பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் டிஜிபி வட்டாரங்களில் பாப்பரப்பாக பேசப்படுகிறது.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்ற நிலையில் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிவரும் வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தனர். இந்த பொறுப்பு டிஜிபி நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே சீமா அகர்வால், சாந்தீப் ராய் ரத்தோடு, ராஜீவ் குமார் ஆகிய 3 டிஜிபிக்கள் நிரந்தர டிஜிபி பேனலில் தகுதி உடையவர்களாக இருந்த போதும் நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை நியமித்து அதிகார மையத்திற்கு நெருக்கமான ஐ.எஸ்.எஸ்., ஐ.பி .எஸ். அதிகாரிகளின் சொந்த விருப்பு, வெறுப்பு காரணங்களுக்காக நியமிக்கப்பட்டதும் பின்னர் தெரிய வந்தது.

பொறுப்பு டிஜிபி பதவி ஏற்ற ஒருவாரத்தில் கரூரில் த.வெ.க தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. இந்த சம்பவத்தின்போது பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை ஓரம்கட்டிவிட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்ஸன் தேவாசீர்வாதத்தை முன்னிலைப்படுத்தி பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களால் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தால் மாற்றப்பட்டது.

இதன் பிறகு கோவையில் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம், மதுரை திருப்பரங்குன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் உத்தரவு பிறப்பித்த பிறகும் தீபம் ஏற்ற விடாமல் இந்து அமைப்பினரை தடுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனம் மற்றும் டெண்டர் விட்டதில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஆட்சியாளர்களுக்கே சிக்கலை ஏற்படுத்தியது.

பொறுப்பு டிஜிபியை கலந்து ஆலோசிக்காமல் முதல்வர் பெயரை கூறி சில ஐ.எஸ்.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்த முடிவுகள் தவறானதால் ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டது. தான் டிஜிபியாக பணியாற்றும்போது இந்த நிலை உருவாகிவிட்டதே என பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெரும் நிலை உருவானது. இவருக்கு ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்ட நிலையில் 15 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொறுப்பு டிஜிபியாக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். பொறுப்பு டிஜிபி பதவிக்கே மற்றொரு பொறுப்பு டிஜிபியா என்ற கண்டன குரல் அரசியல் வட்டாரம் மட்டுமின்றி காவல்துறை வட்டாரத்திலும் எழுந்தது.

இதற்கிடையே நிரந்தர டிஜிபியை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரணைக்கு கொண்டுவராமல் ஆட்சியாளர்கள் தடுத்தபோதும் இந்த பிரச்சினையில் மத்திய பணியாளர் தேர்வாணையமும், மத்திய உள்துறையும் தங்கள் அதிருப்தியை உள்துறை செயலாளர் தீராஜ்குமாரிடம் வெளிப்படுத்தி உள்ளனர். மருத்துவ விடுப்பில் சென்ற பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை மீண்டும் பொறுப்பு டிஜிபி பதவியை ஏற்கும்படி மேலிடம் கேட்டபோது இனியும் தன்னால் பொறுப்பு டிஜிபி என்ற பெயரில் டம்மி பதவியில் தொடர முடியாது. தனக்கு நிர்வாக பிரிவு டிஜிபி பதவியோ அல்லது வேறு பதவி கொடுத்தால் மட்டுமே மீண்டும் பணியில் சேர முடியும் என கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாராம்.

இதையடுத்து ஆளும்கட்சி மேலிடத்திற்கு வேண்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நிரந்தர டிஜிபி பிரச்சினை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வந்தால் கண்டிப்பாக அரசுக்கு கடும் கண்டனமும், உடனடியாக டிஜிபியை நியமிக்கும்படி உத்தரவும் வரும். எனவே நிரந்தர டிஜிபியை நியமிப்பது நல்லது. மேலும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு வரும் மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானதும் பொறுப்பு டிஜிபி பதவியில் தொடர தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. தேர்தல் பிரிவுக்கு தனி டிஜிபி நியமிக்கப்படுவதோடு நிரந்தர டிஜிபி நியமனம் குறித்தும் கேள்வி எழும். எனவே நிரந்தர டிஜிபியை நியமித்துவிடலாம் என ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டதாம்.

இதன் பின்னர் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனிடம் இனியும் விடுமுறையை நீடிக்க வேண்டாம். பணியில் சேர்ந்த பிறகு ஜனவரி முதல் வாரத்திலேயே நிரந்தர டிஜிபியை நியமித்துவிடுகிறோம். நீங்கள் மீண்டும் நிர்வாக பிரிவு டிஜிபி பதவியில் தொடரலாம் என மேலிட வட்டாரம் உறுதிமொழி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உறுதிமொழியை ஏற்று பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் இன்று மீண்டும் பணியில் சேருகிறார். ஏற்கனவே மத்திய பணியாளர் தேர்வாணையம் இரண்டாவது முறையாக நிரந்தர டிஜிபியாக சீனியரிட்டியில் உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோடு, ராஜிவ் குமார் ஆகியோரில் ஒருவரை நியமிக்க அனுமதி வழங்கி உள்ளது.
இதில் சந்தீப் ராய் ராத்தோரை மட்டும் டிஜிபியாக நியமிக்கவே கூடாது என இந்த அதிகாரமையத்திற்கு நெருக்கமான அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ராஜிவ் குமாருக்கு டிஜிபி பதவி கொடுக்க முடியாத நிலையில் சீமா அகர்வாலை நிரந்தர டிஜிபியாக நியமிக்கலாம் என முதல்வரிடம் கருத்து கூறப்பட்டுள்ளதாம். சீமா அகர்வால் வரும் ஜூன் மாதம் ஓய்வுபெற உள்ளார். எனவே இவர் டிஜிபியாக நியமிக்கப்படும் பட்சத்தில் மேலும் ஒண்டரை ஆண்டுகள் கூடுதலாக டிஜிபியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இவரது கணவர் விசுவநாதன் ஏற்கனவே காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். காவல்துறையில் ஏற்கனவே லத்திகா சரண் பதவி வகித்து ஓய்வுபெற்றார். இதன் பிறகு இரண்டாவது பெண் டிஜிபியாக சீமா அகர்வால் பொறுப்பேற்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சந்தீப் ராய் ரத்தோடுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. மேலும் இவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஓய்வுபெற அவகாசம் இருந்தும் அதிகார மையத்திற்கு நெருக்கமான இந்த அதிகாரிகள் அவருக்கு டிஜிபி பதவி கிடைத்துவிட கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட்டு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். ஏற்கனவே பொறுப்பு டிஜிபி பதவியில் தற்போதைய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் ஆசீர்வாதம் பதவி உயர்வுபெற்று நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இவருக்கு உளவுத்துறை டிஜிபி பதவியோ, லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி இயக்குனர் பொறுப்பு வழங்கப்படும் எனவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.