கடத்தல், கைது… பின்னணி அதிர்ச்சி தகவல்கள்…

332

சிவ. செல்லையா

காதல் விவகாரத்தில் காதலனின் தம்பியை கடத்த போலீஸ் வாகனத்தை கொடுத்து உதவியதாகவும், கடத்தலுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாகவும் சிக்கலில் மாட்டி, சிறைக்கு செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் வழக்கில் பழிக்கு பழி வாங்கும் வகையில் இப்பிரச்சினையை பெரிதாக்கி மாட்ட வைத்து விட்டதாக அதிகாரிகள் தரப்பில் அதிக புலம்பல் கேட்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தை சேர்ந்த 23 வயதான தனுஷ் என்ற இளைஞர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயதேயான பெரும் தொழிலதிபரின் மகள் விஜயஸ்ரீ என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். தங்களுடைய செல்ல மகள் வேறு பிரிவைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ் தனக்கு தெரிந்த விருப்ப ஓய்வு பெற்ற உதவி பெண் ஆய்வாளர் மகேஸ்வரி என்பவரை நாடினார். இவர் மூலமாக ரயில்வேயில் உதவி ஆய்வாளராக பணியாற்றி தற்போது ஆய்வாளராக பணிபுரியும் பெண் அதிகாரி மூலம் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராமை அணுகினர். ஐவரும் திருவள்ளூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வும், புரட்சி பாரதம் கட்சி தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தியை அணுகியுள்ளனர்.

இவர்கள் பலமுறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் ஆலோசனை நடத்தி கடந்த 7-ம் தேதியன்று தனுஷின் வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி காதல் தம்பதிகளை தூக்கி வர அனுப்பியுள்ளனர். ஆனால் காதல் தம்பதிகள் வேறு இடத்தில் பதுங்கி இருந்ததால் தனுஷின் தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்தியுள்ளனர். மகனை கடத்துவதை பார்த்த தாயார் அவசர காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு புகார் கொடுக்கவே போலீசார் கடத்தப்பட்ட சிறுவனை தேடினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் சிறுவனை கடத்திய காரை ஆய்வு செய்த போது போலீசாருக்கு கடும் அதிர்ச்சி. காரணம் கடத்த பயன்படுத்தப்பட்டது காவல்துறைக்கு சொந்தமான இன்னோவார் கார் என்பதுதான். போலீசார் தேடுவதை அறிந்து அதே காரில்  சிறுவனை மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டனர். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் அலுவலகத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரியின் வாகனம் என்பதால் இதுகுறித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

கடத்தப்பட்ட காரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர்தான் ஓட்டி வந்ததும் தெரிய வந்ததால் முதலில் அவரை போலீசார் சத்தம் இல்லாமல் தூக்கி வந்து ரகசிய இடத்தில் விசாரித்தனர். இதில் பூவை ஜெகன் மூர்த்தியின் ஆட்கள்தான் சிறுவனை கடத்தியதும் இதற்கு கூடுதல் டிஜிபி ஜெயராம், பெண் ஆய்வாளர், ஒய்வு பெண் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் திட்டம் வகுத்து கொடுத்ததோடு ஆயுதப்படை வாகனத்தையும் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைத்து இவர்கள் திட்டம் தீட்ட பயன்படுத்திய ஓட்டல் அறையின் சிசிடிவி காட்சிகள் காற்றும் இவர்களது செல்போன் உரையாடல்களையும் சேகரித்தை ஐஜி அஸ்ராகார்க் மொத்த தகவல்களையும் ஆதாரத்துடன் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

காவல்துறையில் டிஜிபிக்கு அடுத்த பதவியில் உள்ள அதிகாரி இந்த வழக்கில் முக்கியப் பங்கு வகித்ததால் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என உயர் அதிகாரிகள் ஆசோசனை நடத்தினர். வழக்கமாக போலீசார் எதாவது ஒரு வழக்கில் சிக்கினால் காப்பாற்ற முயலும் உயர் அதிகாரிகள் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்கு முக்கிய பங்கு இருப்பது அறிந்தும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் வழக்கில் சேர்க்கும்படி காவல் நியாய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

காரணம் கூடுதல் டிஜிபி ஜெயராம் அதிமுக ஆட்சியில் பல முக்கியப் பதவிகளை வகித்தபோது தற்போது முக்கியப் பதவிகளை வகித்துவரும் சில உயர் அதிகாரிகள் இவருக்கு கீழே பணியாற்றினார். அப்போது இந்த அதிகாரிகளை அலட்சியமாக நடத்தியதாக இந்த அதிகாரிகள் பொருமிக் கொண்டிருந்தனர். இதனால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மேலிடத்தில் போட்டுக் கொடுத்து கடந்த 4 ஆண்டுகளாகவே டம்மி பதவியிலேயே வைத்திருந்தனர்.

தற்போது இவராகவே வந்து பிரச்சினையில் சிக்கி கொண்டதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த இந்த அதிகாரிகள் குரூப் மேலிடத்தில் நடந்த சம்பவங்களை அப்படியே கூறி கூடுதல் டிஜிபி ஜெயராம் மீது கடும் நடவடிக்கை எடுக்க அனுமதி பெற்றும் விட்டனர். இதன் பிறகே முதல் தகவல் அறிக்கையில் கூடுதல் டிஜிபி ஜெயராம் பெயரை சேர்த்து எப்ஐஆர் தயார் செய்ததோடு கூடுதல் டிஜிபிக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவரது துறை வாகனம்தான் கடத்தலுக்கு பயன்பட்டதாகவும் டிவிக்களுக்கு செய்தியை லீக் செய்தனர். இதனால் பூவை மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்து கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது கூடுதல் டிஜிபி ஜெயராம் வழக்கில் முக்கிய பங்கு வகித்ததாக அரசு வக்கீல்கள் மூலம் போட்டுக் கொடுத்துவிட்டனர். பொதுவாக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் முன்ஜாமீன் வழக்கில் தள்ளுபடியோ அல்லது ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்து வழக்கம்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் கூடுதல் டிஜிபி ஜெயராம், பூவை மூர்த்தி எம்.எல்.ஏ பூவை மூர்த்தி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். இருவரும் ஆஜரானபோது திடீரென சீருடையுடன் நீதிமன்றத்தில் இருந்த கூடுதல் டிஜிபி ஜெயராமை கைது செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அரசு வக்கீல்கள் செய்வதறியாது நின்றுவிட்டனர். காரணம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கூடுதல் டிஜிபியை கைது செய்தால் அரசுக்குத்தான் மிகவும் அவப்பெயர் ஏற்படும். எனவே சஸ்பெண்ட் செய்யலாம் என கூறியும் நீதிபதி கண்டிப்புடன் கூறி விட்டதால் ஜீப்பில் கூடுதல் டிஜிபியை ஏற்றி திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையிலான போலீசார் கைது செய்து திருவாலங்காடு காவல் நிலத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த டிஜிபி சங்கர் ஜிவால் உடனடியாக உயர்நீதிமன்றம் வந்து அரசு தலைமை வக்கீல் உள்ளிட்டவர்களுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதும்  பல உயர் ஐபிஎஸ் அதிகாரிகளே தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இதேபோன்ற சம்பவம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இவர்களுக்கும் நிகழாது என்பது என்பதை யார் அறிவர். கூடுதல் டிஜிபி கைது உத்தரவுச் சம்பவம் மூலம் காவல்துறைக்கு தான் பெருத்த அவமானம். இந்த சம்பவம் மூலம் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகளிடையே எத்தனை கோஷ்டிகள் உள்ளது என்பது மட்டும் அப்பட்டமாகிவிட்டது.

ஆட்சியாளர்கள் ஆதரவு உள்ளது என்பதற்காக ஆட்டம் போட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை வழக்கில் சிக்கிய அதிகாரியும், இவரை சிக்க வாய்த்த அதிகாரிகளும் புரிந்துகொண்டால் சரி என்கின்றனர் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள். பதவிக்காக எதையும் விட்டுக்கொடுத்து மேலிடத்திற்கு அடிமையாகி உள்ள அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருந்தால் சரிதான் எனவும் கூறுகிறது காவல்துறை வட்டாரங்கள்.