சிவ. செல்லையா
தமிழக காவல்துறையில் புதிய டிஜிபியை நியமிக்காமல் மீண்டும் தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கே பதவி நீடிப்பு பெற தமிழக அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் பரபரப்பாக தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறைக்கு தலைவராக திகழும் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியானது மிகவும் கவுரமான, அதிகாரம் மிக்க பதவியாகும். இப்பதவிக்கு ஆளும்கட்சியின் மேலிடம் முடிவெடுப்பவர்கள் தான் நியமிக்கப்படுவதும் வழக்கம். தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிஜிபியாக நியமிக்க பட்டார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இவருக்கு பதிலாக புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல் இதுவரை டிஜிபி அலுவலகதில் இருந்து தயார் செய்து தமிழக அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறைக்கும் அனுப்பப்படவில்லை. இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மேலும் 6 மாதம் பதவி நீடிப்பு கேட்டு தமிழக அரசு பரிந்துரைத்தது தெரிய வந்தது. ஆனால் இந்த பரிந்துரையை மத்திய பணியாளர் தேர்வாணையம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது.
இதன் பிறகாவது புதிய டிஜிபி நியமனத்திற்கான பட்டியல் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை புதிய பட்டியல் தயாராகவில்லை. தற்போதைய நிலவரப்படி டிஜிபியாக உள்ள சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்ததோடு ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் புதிய டிஜிபி பதவிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இரண்டாவது முறையாக சங்கர் ஜிவாலுக்கே குறைந்தது 4 மாதங்களாவது பதவி நீடிப்பு வழங்க வேண்டும் என பரிந்துரைக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதால்தான் புதிய பட்டியலை தயாரிக்கவில்லை. கடைசி நேரத்தில் பதவி நீடிப்பு கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். இல்லையேல் 4 மாதங்களுக்கு தற்போது டிஜிபி அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு பொறுப்பு டிஜிபி கொடுத்துவிட்டு ஜனவரி மாதம் டிஜிபி அந்தஸ்து பெரும் அதிகாரிகளில் யாருக்காவது சிறப்பு டிஜிபி அந்தஸ்து கொடுத்து தேர்தலை சந்திக்கலாம் எனவும் மேலிடம் முடிவெடுத்திருப்பதாக்வும் தெரிகிறது. இதுதான் புதிய பட்டியலை தயாரிக்காமல் இருக்க காரணம் என்கிறது டிஜிபி அலுவலக வட்டாரங்கள். இதனால் எப்படியும் டிஜிபி பதவி கிடைத்துவிடும் என காத்திருப்போருக்கு “இலவு காத்த கிளி நிலைமைதானோ ” என்கிறது டிஜிபி அலுவலக தரப்பு.