போதை வழக்கில் சிக்கும்  உச்ச நடிகர் – நடிகைகள்  கொந்தளிக்கும் போலீசார் 

346

-சிவ செல்லையா –

தான் கெட்டதுடன் தன்னுடன் இருப்பவர்களையும் சேர்த்து கெடுப்பான் என கிராமத்தில் பழமொழி கூறுவதுண்டு.  இதைப்போல பாரில் நடந்த சண்டையைப் பற்றி விசாரிக்க துணை கமிஷனர் அழைத்தபோது பந்தாவாக வக்கீலுடன் சேர்ந்து துணை ஆணையர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த அதிமுக பிரமுகரால் பல முக்கிய பிரமுகர்களுடன் திரைத்துறையில் உச்சத்தில் இருப்பவர்களும்,  அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள லார்டு ஆப் தி ட்ரிங்ஸ் என்ற பிரபலமான மது பாரில் குடித்துக் கொண்டிருந்த இரு விஐபி பிரமுகர்களின் கைத்தடிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டபோது ஒரு தரப்பினர் அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகியான பிரசாத் என்பவரை அழைத்தனர்.  அவரும் பிரபல அதிமுக பிரமுகருமான அஜய் வாண்டையாரை அழைத்துக் கொண்டு அடியாட்களுடன் பாருக்கு சென்று அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற நுங்கம்பாக்கம் போலீசாரையும் மிரட்டியதுடன், ஸ்டேஷனுக்குள்ளும் தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பும் முக்கிய பிரமுகர்கள் என்பதால் துணை ஆணையரை விசாரிக்கும்படி கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் உத்தரவிட்டார். துணை ஆணையர் அலுவலகத்திற்கு அதிமுக நிர்வாகி பிரசாத் வக்கீல்கள், பிரபல பிரமுகர்கள் புடைசூழ சென்று தகராறில் ஈடுபட்டார்.

இதை அறிந்த இணை ஆணையர் விஜயகுமார் நுங்கம்பாக்கம் போலீசில் விசாரித்தபோது பாரில் இருந்த பெரும்புள்ளிகள் அனைவருமே கொக்கைன், மெத்தப்பட்டமைன் போதை பொருளை சரளமாக பயன்படுத்தியதும், பாரிலேயே போதைப்பொருள் விற்பனை சர்வ சாதாரணமாக இருப்பதும் அறிந்தார். உடனடியாக பிரசாத், அஜய் வாண்டையார் மற்றும் முக்கிய பிரமுகர்களின் போதை நெட்ஒர்க் குறித்து தனிப்படை மூலம் விசாரித்தபோதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இந்த பாருக்கு கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்த உச்ச நடிகர்கள், நடிகைகளுக்கு வாடிக்கையாளர்கள் எனவும், விவிஐபி பிரமுகர்களின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கு பிரசாத் மூலம் இந்த போதை பொருட்கள் சப்ளை செய்யப்படும் அதிர்ச்சியான  தகவல் கிடைத்ததும் பிரசாத், அஜெய் வாண்டையார் உள்ளிட்ட பலரை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதில் கானா நாட்டை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் ஜான், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் ஆகியோர் மூலம் பிரசாத கொக்கைன்,  மெத்தப்படாமைன், உயர்ரக கஞ்சா உள்ளிட்டவைகளை வாங்கி விவிஐபிக்களின் வாரிசுகள், திரை உலகில் உச்சமாக உள்ள சுள்ளான் உள்ளிட்ட நடிகர்கள், மூன்று ஷா, மச்சான் நடிகை உள்ளிட்ட பல நடிகைகள், ஆளும் கட்சி விவிஐபி வாரிசின் வாரிசு உள்ளிட்டோரும் இந்த போதை மருந்துக்கு அடிமையாக இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் பிரசாத், பிரதீப் குமார் மூலர் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட சிலர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாத நிலையில் பணத்திற்காக வாங்கி பல மடங்கு விலைக்கு நடிகர், நடிகைக்கு விற்பனை செய்­ததும் தெரியவந்தது.  இதுபற்றி சென்னை மாநகர கமிஷனர் அருண் கவனத்திற்கு இணை ஆணையர் விஜயகுமார் கொண்டு சென்றதும் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்­யப்­பட தப்பி ஓடிய ஸ்ரீகிருஷ்ணாவும் பிடிபட்டார். இவரிடம் விசாரித்தபோது தனக்கு நெஞ்சு வலி இருப்பதால் மருந்து பயன்படுத்துவதில்லை என கூறி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் கிருஷ்ணா பிரசாத் உள்ளிட்ட பல போதை மருந்து வியாபாரிகளிடம் இருந்து போதை மருந்தை வாங்கியதற்கான வாய்ஸ் கால் ஆடியோ ஆதாரங்கள், பணம் செலுத்திய ஆதாரங்கள், வாட்ஸ் அப் ஆதாரங்களை ஏற்கனவே சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றி வைத்துள்ளனர். இவரிடம் இருந்துதான் உச்ச நடிகர்கள், நடிகைகள் வாங்கி பயன்படுத்தியதற்கான ஆதாரங்களையும் வைத்துள்ளனர். இதனால் கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது. ஆளும்கட்சி வாரிசு மூலம் தங்களை காப்பற்றிக்கொள்ள தூது விட்டு வருகின்றனர்.

அதே நேரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர் போதை மருந்தை அருந்திவிட்டு லாட்ஜில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தபோது பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் உள்ள பாரில் மானேஜராக இருப்பவர்தான் தனக்கு கோகைன் மற்றும் மெத் உள்ளிட்ட போதை மருந்தை கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.

உடனே சென்னை நகர போதைப்பொ­ருள் தடுப்புப்பிரிவு சிறப்பு படையினர் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மூலம் பார் மானேஜரை விசாரிக்கும்படி தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பார் மானேஜரை ஸ்டேஷன் வரவழைத்த சில மணி நேரத்தில் ஆளும்கட்சியின் மேலிட குடும்ப விஐபிக்கள் உள்ளிட்டோர் கூடுதல், இணை, துணை ஆணையர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து மானேஜரை போதை மருந்து சப்ளை தொடர்பாக கைது செய்யக்கூடாது என கடும் பிரஷர் தரப்பட்டதாம்.

பதறிப்போன கூடுதல், இணை, துணை அதிகாரிகள் நள்ளிரவில் எல்லா அதிகாரிகளையும்  அழைத்து பார் மேனேஜர் எங்கே உள்ளார் என்ப­தை தேடிப்பிடித்து விடு­­விக்க உத்தரவு பறந்ததாம். கடைசியாக பட்டினப்பாக்கம் ஸ்டேஷனில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்து ராஜமரியாதையுடன் விடுவிக்கப்பட்டாராம்.

நுங்கம்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் சிக்கியதால் அனைவரையும் கைது செய்த போலீசார் பட்டினப்பாக்கத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த பார் மானேஜரை மட்டும் விடுவித்தது என்? உயர் அதிகாரிகள் இதில் பாரபட்சம் காட்டுவது என் என்கின்றன நுங்கம்பாக்கம் போலீசார்… மொத்தத்தில் சென்னை மாநகரம் முழுவதும் விவிஐபிக்களின் வாரிசுகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வாரிசுகள், திரைப்­ப­ட நடிகர், நடிகைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பெரும்பாலானோர் இந்த கோகைன், மெத்தப்பட்டமைன், கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பது மட்டும் உறுதியாகிவிட்டது. இதன் பாதிப்பு விரைவில் தெரியும் என்கின்றனர் போலீசார்.