பண்டைய காலம் முதல் இப்போதைய நவீன காலத்திலும் கூட சித்தர்கள் பல்வேறு சித்துவேலைகளை நிகழ்த்திக்கொண்டுதான் உள்ளனர். தமிழகத்திலேயே திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்களில்தான் ஏராளமான சித்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தவிர நெல்லை மாவட்டம் அகஸ்தியர் மலை பகுதியிலும் சித்தர்கள் அதிகம் வசிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விவரம் அறிந்தவர்களோ கடலோர மாவட்டங்களிலும் அதிக அளவிலான சித்தர்கள் உள்ளனர். இவர்கள் பார்ப்பதற்கு சித்தர் கோலத்தில் இருக்கமாட்டார்கள். சாதாரண கோலத்தில் காட்சியளிக்கும் இவர்களை சித்தர்கள் என்றே யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இவர்களுக்கு நெருக்கமானவர்கள், அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே இவர்கள் சித்தர்கள் என்பது தெரியும். பலம் முக்கிய பிரமுகர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் சென்னையில் உள்ள பல சித்தர்களை குறிப்பிட்ட நாளில் சந்தித்து ஆசிபெறுவது வழக்கம். கடலோர பகுதியை கொண்ட சென்னையை சுற்றிலும் ஏராளமான சித்தர்கள் வசித்து வருகின்றனர். இதேபோல சென்னையில் பல்வேறு சித்தர்களின் ஜீவா சமாதிகள் உள்ளது.
ஆனா இவற்றைப்பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. எனவேதான் இதுபோன்ற சித்தர்களை பற்றியும்,அவர்களின் சித்து விளையாட்டுக்களை பற்றியும், அவர்கள் ஜீவா சமாதி அடைந்துள்ள இடத்தை பற்றியும் கண்டுபிடிக்கும் முயற்சியில் நமது தி நியூஸ் நவ் பக்தி சேனல் தனது பயணத்தை தொடங்கி உள்ளது. இதில் முதல் சித்தராக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகேயுள்ள ஸ்ரீ குழந்தைவேல் சுவாமிகள், முத்தையா ஸ்வாமிகள் ஜீவ சமாதியை பற்றி தெரிஞ்சுக்க போறோம். மயிலாப்பூர் சித்திரகுளம் எதிர்லதான் இந்த 2 ஜீவ சமாதிகளும் இருக்கு. குருவும், சீடரும் ஜீவ சமாதி அடைந்த இடமாகும் இது. குழந்தைவேல் ஸ்வாமிகள் கருவறையிலும், நந்தி பகவானாக ஸ்ரீ முத்தையா ஸ்வாமிகளும் இந்த கோயில்ல காட்சி தராங்க. இந்த ஜீவ சமாதியில் கொஞ்சநேரம் தியானம் செய்தாலே நம் மனதிற்கு அமைதியும், மன சாந்தியும் கிடைத்துவிடும்.
குழந்தைவேல் ஸ்வாமிகள் குருவாகவும், முத்தையா ஸ்வாமிகள் சீடராகவும் இருந்து பல்வேறு சித்து வேலைகளை செய்துள்ளனர். 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்த இருவருக்கும் கோயில் எழுப்பப்பட்டு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த ஜீவ சமாதிகளுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் விளக்கு ஏற்றி வேண்டினால் தாங்கள் வேண்டிவந்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. கோயிலுக்கு வந்து விளக்குகளை ஏற்றி வழிபட்டால் மன பயம் போக்கி, துன்பங்களும் விலகிவிடுவதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். இதேபோல மாதம்தோறும் பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் விமர்சையாக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வந்து வழிபட்டாலே பாசிட்டிவ் எண்ணம் ஏற்படுகிறதாம்.
இந்த கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் தங்களது ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி எடுத்துவந்து சித்தர் பீடத்தில் வைத்து வழிபட்டால் பல ஆண்டுகளாக இருக்கும் திருமண தடை தோஷம் மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைத்து வருவதும் கண்கூடு. தாங்கள் நினைத்த காரியம் நடக்கும். ஜாதக நகலை கொண்டுவைத்து சித்தர் பீடத்தில் வழிபடுவதுதான் இந்த சமாதியின் சிறப்பு அம்சம் என்கின்றனர் பக்தர்கள். பல்வேறு சித்து விளையாட்டுகளை தற்போதும் கூட நிகழ்த்தி வருகின்றனராம் இந்த சித்தர்கள். சிலரது கனவில் வந்து கோயிலுக்கு தேவையானவற்றை வாங்கி வைக்கும்படியோ, கோயில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படியோ உத்தரவிடுகின்றானாம். இதன்படி கனவில் வந்து சித்தர் கூறியபடி அன்னதானம், கோயில் பணிகளை பக்தர்களே முன்வந்து செய்து கொடுக்கின்றனர்.
இந்த கோயிலுக்குள் நுழைந்ததும் வலதுபுறத்தில் பைரவர் சந்நிதி, ஸ்ரீ பாலாம்பிகை சந்நிதி, சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும், முகப்பில் விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் பிரசன்ன நர்த்தன கணபதி சந்நிதி அமைந்துள்ளது. கோயிலை சுற்றி வரும்போது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதி, லிங்கோத்பவர் சந்நிதி, பிரம்மா சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளது. கோயில் வெளிப்புறத்தில் தலவிருட்சத்திற்கு கீழே ஸ்ரீகாசிலிங்கம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவரது சித்து விளையாட்டுக்களால் பல நன்மையை பெற்ற ஏராளமான பக்தர்கள் பல ஆண்டுகளாக இந்த சித்தர் பீடத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இறைவனை அடைந்தாலும் இன்னும் பக்தர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து பல்வேறு சித்துவேலைகளை நிகழ்த்தி பக்தர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் இந்த சித்தர்களின் பீடத்திற்கு சென்று நீங்களும் பயன் பெறுங்கள்.