எதையும் எடக்கு மடக்காக செய்வது விஜய் ஆண்டனிக்கு பிடித்தமான விஷயம். பிச்சைக்காரன், ஹிட்லர், சைக்கோ, கொலைகாரன் என நெகட்டிவ் தலைப்பு வைப்பார். வித்தியாசமாக எதையாவது செய்வார். அந்த வகையில் தான் நடித்த ‘மார்கன்’ பட விழா மேடையில் ஆமை, ஆந்தை உருவங்களை வைத்து இருந்தார்.
அய்யய்யோ இது அபசகுணமாச்சே என சிலர் அலற, இது சரியா என்று நிருபர்கள் அவரிடம் கேட்க விஜய் ஆண்டனி அளித்த பதில்…
‘அட்டக்கத்தி, பீட்சா, தெகிடி உட்பட சூப்பர் ஹிட் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய லியோஜான்பால் இயக்கி இருக்கிறார். நான் நடித்து, தயாரித்து, இசையமைத்து இருக்கிறேன். ஆமை புகுந்தவீடு, அமீனா புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அமீனாக்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பம் நன்றாாக இருக்கிறது. அது தவறு என்பதை நிரூபிக்க, இப்படி செய்தேன். தவிர, படத்தில் கதைக்கும், ஆமைக்கும் தொடர்பு இருக்கிறது. என் மருமகன் அஜய் இதில் வில்லனாக நடிக்கிறான். பொதுவாக சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் வில்லன் யார் என்பதை சொல்ல மாட்டார்கள். நான் சொல்லிவிட்டேன். கதைதான் பலம். இந்த படத்தில் போலீஸ் ஆபீசராக வருகிறேன். என் முகத்தில் கருப்பு நிற தழும்பு இருப்பது ஏன் என்பது கதை. இந்த படம் தவிர, அடுத்தும் பல படங்களை தயாரிக்கிறேன். இதுவரை 25க்கும் அதிகமான படங்களில் நடித்தாலும், பல படங்களை தயாரித்தாலும், பல படங்களுக்கு இசையமைத்தாலும் இப்போதும் கடன் வாங்கிதான் படம் எடுக்கிறேன். சம்பாதிப்பதில் இன்னமும் வட்டி கட்டிக்கொண்டே இருக்கிறேன்.
நான் பல படங்களில் நடித்தாலும் பிச்சைக்காரன் என் வாழ்க்கையில் முக்கியமான படம், என்னை டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய சசிசார், என்னை வைத்து இயக்கிய படம். மீண்டும் அவர் படத்தில் நடிக்கப் போகிறேன். அதில் என் மருமகன் அஜய்யும் இருக்கிறார். இனி படங்களுக்கு தொடர்ந்து இசை அமைக்கிற பணியையும் செய்வேன். நல்ல கதைகளை இயக்குனர்கள் கொண்டு வருகிறார்கள். அவர்கள்தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள்.
இந்த பட இயக்குனர் லியோ ரொம்பவே சின்சியர் ஆனவர். இந்த படத்தில் நிறைய பெண் கேரக்டர் இருந்தாலும் எனக்கு ஜோடி இல்லை. இனி, வெளி படங்களை தயாரிக்க, மற்ற ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.
– மீனாட்சி சுந்தரம்.